வண்ணச்சீரடி – உமா மகேஸ்வரி:
உளவியல் கதை. Post-traumatic stress disorder. ஆனால் கதைக்குள் மருத்துவமனையில் படுத்திருக்கும் பெண்ணின் அகமன அலைக்கழிப்புகள் அத்தனையும் நம் கண்முன் விரிகின்றன. கால் தரையில் பாவாமல் ஓடிக்கொண்டே இருக்கும் பெண்களைப் பார்த்திருக்கின்றேன். மற்றவர்களிடம் மாறுபட்ட அந்த Traitஏ பயம் என்ற பூதமாக மாறியிருக்குமோ? பிரவீண்/அம்மா செய்திருக்க வேண்டியது மாரிக்கா செய்ததைத் தானோ? கணவன் இருபது நிமிடம் இருந்து விட்டுப் போவதில் இருந்து எத்தனை விசயங்கள், எத்தனை கால்கள் இந்தக்கதையில்! நட்சத்திரங்களுடன் உரையாடும் பெண். மொழியும் என் பங்கு எங்கே என்று கேட்கிறது. “அருகில் நெருங்கினால் தானே துயரம் மிக உயரமாகத் தோன்றும்?”.
மொஹிதீன் ஹோட்டல் – உமாஜி:
உணவு அளிப்பது வியாபாரம் மட்டுமல்ல. பார்த்துப் பார்த்து பரிமாறுவதில் இருக்கும் அன்பை நட்சத்திரவிடுதிகளிலும் எதிர்பார்க்க இயலாது. இன்னொன்று நாஸ்டால்ஜியா. சுவையான உணவுகளின் ருசி நாக்கை விட்டுப் போயிருந்தாலும் மனதுக்குள் பதுங்கி இருப்பது. இரண்டுக்கும் இடையே இந்தக்கதை நகர்கிறது.
யுகக்குருதி- சித்தாந்தன்:
இன்திஜார் ஹுசைன் என்ற பாகிஸ்தானிய எழுத்தாளர் அஸ்வத்தாமாவையும் அணு ஆயுதத்தையும் மையப்படுத்தி ஒரு கதை எழுதியிருந்தார். கே.நல்லதம்பி மொழிபெயர்ப்பு. இந்தக்கதை பாரதக்கதையையும் நடப்பையும் இணைத்து செய்யப்பட்ட முயற்சி. நுட்பம் கூடிவரவில்லை.
எலிகள் இரவில் தூங்கும்- வோல்ப்கங் போர்சாட்- தமிழில் நிரூபா:
இரண்டாம் உலகப்போரின் இடிபாடுகள் நடுவில் சிறுவன் ஒருவனுக்கும், முதியவர் ஒருவருக்கும் நடக்கும் உரையாடல்களே கதை. மனிதாபிமானம் என்பதை யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் காட்டலாம். ஒரு கருத்தைச் சொல்வதன் மூலம் சிறுவன் நிம்மதியாக உறங்க வழிவகுக்கிறார் முதியவர். அத்துடன் மீண்டும் வாழ்க்கை துளிர்க்கும் என்ற நம்பிக்கையும். ஜெர்மன் மொழியிலிருந்து நேரடியாகச் செய்யப்பட்ட அழகான மொழிபெயர்ப்பு நிரூபாவுடையது.
இல்லாள் – ஜேகே:
ஜேகேயின் Spontaneous flowவில் கதையின் நீளமே தெரியவில்லை. இரண்டு பெண்கள். இரண்டு பரிதாபமான வாழ்க்கைகள். இடையில் ஒரு கனவுக்குமிழி உடைகிறது. வாழ்க்கை ஒரு கோணத்தில் பார்க்கக் கவர்ச்சியாகவும் மற்றொரு கோணத்தில் வீணாகவும் தோன்றுகிறது. மிருதுளாவின் பார்வையில் அவள் வாழ்க்கையும், அற்புதராணியின் பார்வையில் அவளது இழப்புகளின் வலியும் ஒன்றாகச் சொல்லும் கதை.