Omar எகிப்தில் பிறந்து பதினாறு வயதில் இருந்து கனடாவில் வாழ்பவர். எழுத்தாளர், பத்திரிகையாளர். ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்று Investigative Journalism செய்தவர். இவரது முதல் நாவல் American War பெரிதும் பேசப்பட்டு, பல விருதுகள் பெற்ற நாவல். இந்த இரண்டாவது நாவல் கனடாவின் உயரிய விருதான Scotiabank Giller விருதை இந்த ஆண்டு பெற்றிருக்கிறது.
சிரியா ஒரு முஸ்லீம் தேசம். சிரியாவின் மொத்த மக்கள் தொகையை விட தமிழ்நாட்டு மக்கள் தொகை ஐந்து மடங்கு பெரியது. இந்த சிறிய தேசத்தில் 2011ல் இருந்து நடக்கும் உள்நாட்டுப் போர்கள் பலலட்சம் சிரியர்களை வேறு நாடுகளுக்குப்
புலம்பெயர வைத்துக்கொண்டே இருக்கிறது. வன்முறை மட்டுமன்றி, அடிப்படை வசதிகள், கல்வி வேலைவாய்ப்பு இல்லாத சிரியாவை விட்டுத் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பான நாட்டுக்குக் கொண்டு செல்லத் துடிக்கிறார்கள். உலகிலேயே அதிகம் அகதிகள் இருப்பது சிரியாவிலிருந்து
மீன்பிடிப்படகில் நூற்றுக்கணக்கானவருக்கு மேல், பயணம் செய்து, படகு உடைந்து, பெயர் சொல்லப்படாத தீவின் கரையில் பிரயாணிகளின் சடலம் ஒதுங்குகையில், அதிர்ஷ்டவசமாக சிரியாவைச் சேர்ந்த எட்டு வயதுச்சிறுவன் அமிர் ஒருவன் மட்டுமே உயிர் பிழைக்கிறான். பிணம் போல் கரையொதுங்கியவன் எழுந்து ஓடத்தொடங்கியதும், அந்த நாட்டின் ராணுவத்தினர் துரத்த நாவல் ஆரம்பிக்கிறது.
நடப்பு நிகழ்வுகள் ஒரு அத்தியாயமும் எப்படி அமிர் இங்கு வந்தான் என்ற பழைய கதை ஒரு அத்தியாயமுமாகத் தொடர்கிறது. சிரியாவில் இருந்து எகிப்து சென்று அங்கும் வன்முறையால் அம்மாவின் காதலனுடன் படகில் ஏறும் அமிருடன், படகில் இருப்பவர்களின் பயங்கரமான கதைகளுடன் பிரயாணம் தொடர்கிறது.
வன்னா தீவைச் சேர்ந்த பதினைந்து வயதுப் பெண். தற்செயலாக அமிரைச் சந்திக்கும் அவள், அமிரை ராணுவத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி அவன் நாட்டினர் இருக்கும் இடத்திற்கு அனுப்பத் துடிக்கிறாள்.
அகதிகளுக்கான முகாமில் அடிப்படை வசதிகளும் இல்லாமல் குளிரில் மணலில் படுக்க வைக்கப்படுகிறார்கள். அரசாங்கத்திற்கு இவர்களுக்குச் செலவழிக்க மனமில்லை. இராணுவத்தை ஏவிவிட்டு எல்லோரையும் அகதிகள் முகாமில் அடைக்க ஆணையிடுகிறது. அமிர், வன்னா இருவருக்கும் ஒருவர் பாஷை மற்றொருவருக்குத் தெரியாமலேயே பரஸ்பரப் புரிதலும், நட்பும் ஏற்படுகிறது.
ஒமர் பல நாடுகளில் பத்திரிகையாளராகப்
பணியாற்றியவர். அகதிகளின் Desperationஐ அழகாகக் கொண்டு வந்திருக்கிறார். அதே போல் அகதிகள் செல்லும் நாட்டில் அவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதும். வன்முறை குடும்பங்களைச் சிதற வைக்கிறது. படகில் உள்ளவர்கள் பேசிக் கொள்கிறார்கள், ‘எந்தக் காரணத்தைக் கொண்டும் உண்மைப் பெயரைச் சொல்லக் கூடாது, ஸ்டீபன், ஸில்வியா என்று அவர்கள் பெயரைப் போன்ற ஒன்றைச் சொல்ல வேண்டும்.” நிறைகர்ப்பிணி ஒருத்தி அடிக்கடி ஆங்கிலத்தில் சொல்லி மனப்பாடம் செய்து கொள்கிறாள் “நான் கர்ப்பிணி. எனக்கு ஏப்ரல் 28ல் குழந்தை பிறக்கப் போகிறது. எனக்கு மருத்துவமனை, மருத்துவர்கள் உதவி வேண்டும். தயவுசெய்து உதவுங்கள். “
இதைத் தவிர ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாது அவளுக்கு. இது ஏதோ உதவி கேட்டு இறைஞ்சுவது என்று அமிர் பின்னால் ஓரிடத்தில் இதே வசனத்தைச் சொல்லப் போகிறான்.
எகிப்தில் பிறந்திருந்தாலும், சிறுவயதிலேயே அதை விட்டு வந்து விட்டதால், அந்த நாடு குறித்து, சிரியா குறித்து, புலம்பெயர்பவர்களின் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்திருக்கிறார். கனடா உலகத்தரமான எழுத்தாளர்களைத் தொடர்ந்து இலக்கியத்துக்கு அளித்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு Investigative reporterஆல் இவ்வளவு Lyrical மற்றும் Intenseஆன மொழிநடையில் எழுத முடியுமா என்ற ஆச்சரியம் எழுகிறது. நாவல் முழுதும் நீறு பூத்த நெருப்பு போல் எழுத்தாளரின் கோபத்தின் வெம்மையை உணரமுடிகிறது. மனிதாபிமானம், சகமனித நேசம் இவற்றைப் பற்றி எல்லாம் அதிகம் பேசுபவர்கள் அவை குறித்த பிரக்ஞையே இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். கனடாவின் சிறந்த நாவல் என்ற விருதைப் பெற்றிருக்காவிட்டாலும் சந்தேகமில்லாது இது சிறந்த நாவல்.