புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி-2020- பரிசுபெற்ற குறுநாவல்கள்:
யாவரும் பப்ளிஷர்ஸ் நடத்திய புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல போட்டியில், போட்டிக்கு வந்த நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட குறுநாவல்களில், இறுதிநிலைக்கு வந்து, பரிசுபெற்ற பத்து குறுநாவல்கள் இவை. இடம்பெறும் குறுநாவல்கள் தரவரிசையின்படி இல்லை. எல்லாமே சமமான பரிசை வென்றிருக்கின்றன.
பத்து பாத்திரங்கள் – சுரேஷ் பிரதீப்:
Name Place Animal Thing என்பது சிறுவயதில் விளையாடி நாம் மறந்த விளையாட்டு. இதே பெயரில் அந்த விளையாட்டை வைத்து, ஒரு ஆங்கில நாவல் சமீபத்தில் வெளியாகியது. அதில் பெயரை மட்டும் எடுத்துக்கொண்டு சுரேஷ் விளையாடும் விளையாட்டு இது.
ஒரு நிமிடத்தில் திறமையைக் காட்ட வேண்டும் என்று போட்டியில் சொன்னால், பாடகர் முழுத்திறமையை அந்த நேரத்தில் காட்டுவது போல சுரேஷ் இதில் காட்டியிருக்கிறார். என்வரையில் அவரது வெளிவந்த படைப்புகளில் Best இது.
கதைசொல்லியும் சேர்த்து, பத்து கதாபாத்திரங்களை அருண் என்பவன் எதிர்கொள்ளும் தருணங்களே கதை. அதன் மூலம் அருணை நாம் பூரணமாகப் புரிந்து கொள்கிறோம், அல்லது புரிந்து கொண்டதாக நம்பத் தொடங்குகிறோம். இதில் ஏசுவும் ஒரு கதாபாத்திரம். பிறந்தவர், பிறக்கப்போகிறவர் எல்லோர் பாவங்களுக்கும் பிராயச்சித்தம் செய்துவிட்ட ஏசு இதில் அருணிடம் வேறொன்றைச் சொல்கிறார். அருணின் நண்பன் சந்திரனுக்கு குறைந்தது எண்பது வயது என்பதைப் படிக்கும் போதே அறிந்து கொண்டேன். கலைச்செல்வி அருண் தன்னைக் கண்ணாடியில் பார்க்கும் பெண்வடிவம். மானுடம் பேசித்தீராத தத்துவார்த்தம் கதையில் இடையிடை வருகின்றது. கதை, உரையாடல்கள் தாண்டி, Subtilityக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட கதை. நுணுக்கமாகவே வந்திருக்கிறது. சுரேஷின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்திருக்கிறது.
காயாவனம் – வா.மு.கோமு:
George Orwellன் Animal Farm ஒரு முழு Allegory novel. ரஷ்யப்புரட்சிக்கு முன்னும், பின்னுமான சாமான்யர் வாழ்வை, விலங்குப்பண்ணை என்ற Utopian worldஐ உருவாக்கிச் சொல்வது. கோமுவின் காயாவனம் என்ற இந்த நாவல், பாட்டியின் வாய்மொழி கதைபாணியில் சொல்லப்படுகிறது.
குறுநாவலில் கவர்ந்த ஒரே விசயம், கொங்கு வட்டார வழக்கு. அதை விட்டால், இதை சிறார் நாவல் பிரிவில் சேர்ப்பதற்குண்டான முழுத்தகுதியும் இதற்கு இருக்கிறது. கதையில் நாமாக இதற்கு அவர் இல்லை அவள் என உருவகப்படுத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லை, அந்த நம்பிக்கையை யாருக்கும் தராத வகையில் கதை கவனமாக எழுதப்பட்டுள்ளது. பிரதியே பேச வேண்டும், எழுத்தாளர் இரண்டாம் பட்சம். அது தமிழ் சூழலில் மாறாதவரை, பெயருக்காகப் பரிசும், பெயருக்காகப் பாராட்டும், பெயருக்காக ஒரு வாசகர் கூட்டமும் இருந்து கொண்டே தான் இருக்கும்.
நாற்பது நாட்கள் – மலர்வதி:
குறுநாவலின் நீளத்தைக் குறைத்து, Repetitionகளை வெட்டியெறிந்தால், இந்தக் கதையை பள்ளிமாணவர்களுக்குப் பாடமாக வைக்கலாம். அதே போல் பதினாறாவது அத்தியாயம் இதை பிரச்சாரக்கதையாக்கி இருக்கிறது. அந்த அத்தியாயத்திற்கு முன்பே கதை முடிந்துவிடுகிறது.
Dating மற்றும் பல நண்பர்களுடன் பழக்கம் என்று பின் ஒருவரைத் தேர்ந்தெடுக்க காலம் எடுத்துக்கொண்டு செய்யும் திருமணங்களே,
மேலைநாடுகளில் நிலைக்காமல் போகையில், Sexual Poverty இருக்கும் தேசத்தில் காதல் மணங்களும், Arranged marriagesம் வேறுவேறு பிரச்சனைகளைக் கொண்டு வருகின்றன. அறியாப் பருவத்தில் காதலில் விழுந்து, பிறந்த வீட்டிலும் ஏற்காமல், வாழவும் முடியாமல் காலத்தைக் கழித்த பெண்கள் எத்தனையோ பெயர். அவர்களில் ஒருத்தியின் கதையை, அழகான கன்னியாகுமரித் தமிழில் சொல்லியிருக்கிறார் மலர்வதி.
தீதிலர்- பிகு:
புதிதாக எழுத வந்திருப்பவர் இவர். அதைக் கணக்கில் எடுக்கையில் இவர் முதல் குறுநாவலிலேயே தேறிவிட்டார். சமகாலத்தில் நடக்கும் பிரச்சனையை எழுதும் போது, அதிர்ச்சி மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் வரும் பத்திரிகைச் செய்தியை தவிர்த்திருக்கலாம். சுஜாதா இதே போன்று இளநீர் என்று சிறுகதை எழுதியிருப்பார்.
வளர்ந்த ஆணும், பெண்ணும் ஒன்றாகச் செல்வதோ, ஒன்றாக இருப்பதிலோ Moral Policeஓ இல்லை வேறு எவருமோ தலையிடுதல் சட்டப்படி மட்டுமல்ல எல்லா வகையிலும் குற்றம். ஆனால் பாதுகாப்பில்லாமல் Misadventureல் இறங்குவதும் அதே போன்ற குற்றம். பிகுவுக்கு சொல்ல வேண்டியது என்னவென்றால், IT துறையைப் பற்றி, அகமதாபாத்தில் நடப்பதாகக் கதை எழுதினால் இரண்டும் குறித்த ஆய்வு முக்கியம்.
புயா! முன்னா! இதி! – மணி.எம்.கே.மணி:
திரைத்துறையின் உள்விவகாரங்கள், பாசாங்குகள், வஞ்சனைகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் இன்னபிற பற்றி சமீபகாலத்தில் புனைவில் அதிகம் கொண்டு வந்தவர் மணி.
Success has many-fathers, failure is an orphan என்பது சினிமாத்துறைக்கே நூறு சதவீதம் பொருந்தும். எல்லா அவமானங்களையும் பொறுத்துக் கொண்டு சினிமாத்துறையில் தொடர காரணம், அதுவும் ஒரு போதை. சினிமா ஒரு வழிப்பாதை. வெளியில் வந்து விட்டோம் என்று நினைப்பவர்கள் திரும்ப உள்ளே செல்லும் நேரம் அதிககாலம் இல்லை. கனவுலகுத் தாரகைகளுக்குப்பின் எவ்வளவோ கதைகள். வெற்றிபெற்றவனுக்கு அதைத் தக்க வைத்துக் கொள்ள ஜுவமரணப் போராட்டம். அதனால் தான் அவன் சகமனிதனை ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை. அடுத்தவரது கதைகள், கற்பனைகளைத் தனதாக்கிக் கொண்டு, குற்றஉணர்வில்லாது பாராட்டைப் பெற்றுக் கொள்வதும் காலங்காலமாகத் திரைத்துறையில் இருப்பதே. Mani at his best.
முப்போகம்- மயிலன் ஜி சின்னப்பன்:
இறந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் ஒன்றாகக் கலந்து கதை நகர்த்துகையில் ஒரு காலமயக்கம் வாசகருக்கு ஏற்படும்.
Alex Michaelidesன் முதல் நாவல் The Silent Patient இந்த யுத்தியை முழுமையாகப் பயன்படுத்தி வாசகர்களைத் திக்குமுக்காடச் செய்திருக்கும். ஒருவகையில் எழுத்தாளர் வாசகரை Tease செய்யும் யுத்தி. மயிலன் இந்தக் குறுநாவலில் அதே யுத்தியைக் கையாண்டிருக்கிறார்.
தன் குடும்பத்தைச் சாய்க்கும் அளவிற்கு எந்தப் பெண்ணோ அல்லது ஆணோ Worth கிடையவே கிடையாது. காதலில் விழுவோருக்கு அது ஏனோ புரிவதில்லை.
பாலியல் வறட்சியில் கிடைத்ததை விடக்கூடாது என்று தவிப்பதா இல்லை Loveஐ Glorify செய்து வைத்திருப்பது காரணமா தெரியவில்லை. மேலைநாடுகளிலும் Breakupக்குப் பிறகு இரண்டு மூன்று மாதம் பித்துப்பிடித்து அலைகிறார்கள் ஆனால் அதன்பிறகு Normal வாழ்க்கை ஆரம்பித்து விடுகிறது. அடுத்தது Eloping. ஒன்றல்ல இரண்டு. அதற்குப் பின்னான வாழ்க்கையில் முடிச்சுக்கள் போட்டுக்கொண்டே சென்று கடைசியில் துளி நீட்டிக் கொண்டிருக்கும் நூலை இழுக்கிறார் மயிலன், மொத்த முடிச்சும் அவிழ்ந்து போகிறது. கதையில் அங்கங்கே ஏன் என்று வாசகர் கேட்காவிட்டால் நழுவிப் போகும் தருணங்கள், சமூக உளவியல் அத்துடன் இந்தக்கதை மொத்தத்தையும் ஆட்டிவைக்கும் Murphy Law என்று நிறைவாக வந்திருக்கும் குறுநாவல்.
யாகத்தின் பெருநெருப்பு – மோகனா:
புராணங்களை மீட்டுரு செய்கையில் வித்தியாசமான கோணத்தைக் கொண்டு வராவிட்டால் அது எந்த தாக்கமும் இல்லாது மறைந்துவிடும். புராணக்கதையை நனவோடையாகவும், புராணப்பாத்திரத்தை நிகழ்காலத்தில் உயிர் கொண்டதாகவும் வைத்துக் கதை அமைத்திருக்கிறார் மோகனா.
மன்னர் காலத்தின் படையெடுப்புகளில் இருந்து, அதிகம் பாதிக்கப்பட்டது பெண்கள் தான். உடன்கட்டை ஏறியது கூட, எல்லா சுகபோக வாழ்வும் முடிந்தபிறகு இனி உயிரோடு இருந்து எதைச் சாதிக்க என்று உலகுக்குச் சொல்வது தான். கோயிலில் இருந்த திரௌபதி தனக்கு நேர்ந்த அநீதிக்கு இன்னும் பொறுமிக் கொண்டிருக்கிறாள். கலியுகத்தில் பெண்ணுக்கு நேரும் அநீதியைப் பார்த்து விட்டு, தனக்கு நேர்ந்ததெல்லாம் ஒன்றுமேயில்லை என்ற முடிவுக்கு வருகிறாள். வித்தியாசமான பார்வை ஆனால்லகதை சொல்லலில் மோகனா அடிக்கடி கதைக்குள் வந்து நான் தான் இந்தக்கதையை எழுதுவது என்கிறார். கதை எழுதி முடித்து அச்சுக்கு அனுப்பிய உடன் எழுதியவரிடமிருந்து பலமைல்கள் விலகி விடுகிறது. எழுதியது ஒரே கதை என்றாலும் பன்னிரண்டு வயதுப் பெண்ணும், ஐம்பது வயது ஆணும் ஒரே கதையைப் படிப்பதில்லை.
ஜப்பான் – பாலாஜி பிரசன்னா:
இதற்கு முன் ஒரு சிறுகதையை மட்டுமே எழுதியிருப்பவர் என்பதே வெளியில் தெரியாது இவரது மொழிநடை சரளமாக இருக்கிறது. உள்ளடக்கமும் நாளை மற்றும் ஒரு நாளேயைப் போன்றது.
இது ஒரு வாழ்க்கை. மதுரையில் பிறந்தவர்கள் பலமுறை பார்த்த வாழ்க்கை இது. பிறரை அடிக்கவும் தயங்காது, அடிவாங்குதலில் அவமானமும் அடையாது திரியும் கூட்டம். கஞ்சா ராஜபோதை, அது கற்பனை உலகத்தில் மிதக்கவைத்து அப்படியே அமிழ்த்தி விடும். குடியில் இருந்து தப்பிப்பவரும் கூட கஞ்சாவிடம் தப்பிப்பது கடினம். எந்த பிசிறும் இல்லாமல் கச்சிதமாக எழுதப்பட்ட குறுநாவல். பாலாஜி தொடர்ந்து எழுத வேண்டும்.
மைனிகள் -எம்.எம்.தீன்:
உறவுகள் அருகி வரும் காலத்தில் சிறுவயது நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்தது இந்த நாவல். பதின் பருவத்தில் அண்ணன்களின் மனைவிகள், பாலியல் குறித்து பூடகமாகப் பேசிச் சிரிப்பதைக் கேட்டிருந்தவர்கள் இந்தக்கதையுடன் அவ்வளவு ஒன்றமுடியும். அண்ணிகள் கொழுந்தனிடம் எடுத்துக் கொள்ளும் உரிமை, உடல்ரீதியானதில்லை, கணவனின் சின்ன வடிவமாக, கணவனை போல் அதிகாரம் செய்யாமல், தன்னை வியந்தோதும் சிறுவனைப் பார்த்து வரும் பாசம்.
ஒரு சிறிய பயணம் இரண்டு அண்ணிகளுடன், அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல், காணும் காட்சிகள், சந்திக்கும் மனிதர்கள், மைனிகள் சொல்லும் குட்டிக்கதைகள் இவ்வளவே இந்தக் குறுநாவல். அதற்குள் ஒரு அழகான உலகத்தை நமக்குக் காட்டுகிறார் தீன். இஸ்லாமியக் குடும்பத்தின் நம்பிக்கைகள், கட்டுப்பாடுகள் கூடவே வருகிறது. எல்லாவற்றையும் விட அண்ணி என்ற உறவு காட்டும் பிரியம், அவள் தொடுகையில் ஏற்படும் குறுகுறுப்பு இரண்டுமே மனதில் நிற்கிறது. நிறைய எழுதுங்கள் தீன்.
மென்முறை- நாராயணி கண்ணகி:
வாதி எழுதியவருக்கும் இதற்கும் ஒரே பெயர் என்று சொல்லாவிட்டால் யாருக்குமே தெரியாது. நிர்வாணநகரத்தின் சிவராஜூ போல் கொஞ்சமாக பயந்த ஒருவன், வாடகைவீடு மாறி, புதுவீட்டுக்கு எதிரிலிருக்கும் ரவுடியைப் பார்த்துப் பயந்து போவதே கதை.
தற்காலிக வேலையில் இருப்பவனின் பிரச்சனைகளில் ஆரம்பிக்கும் கதை, மனைவி மீது கொஞ்சம் மையல் என்று மாறி, புதுவீட்டுக்குக் குடிபோவது என்றவுடன் ஐந்தாம் கியரில் கதை ஓட ஆரம்பித்து விடுகிறது. வாய்விட்டு சிரிக்காமல் படிக்க முடியவில்லை. எந்தக் குறையும் சொல்லமுடியாத Perfect presentation. இதை விடப் பொருத்தமான Endingம் இருக்க முடியாது. பிரேமாவும் செல்வியும் அடிக்கும் லூட்டியிலும் கதையை Trackஐ விட்டு நகராமல் பார்த்துக் கொள்ளும் சாமர்த்தியமான கதைசொல்லல். நாராயணி கண்ணகியின் இனிவரும் நூல்களைத் தவறவிடக்கூடாது என மனதில் குறித்துக் கொண்டேன்.
பிரதிக்கு:
யாவரும் பதிப்பகம் 90424 61472
முதல் பதிப்பு நவம்பர் 2021
விலை ரூ. 750.