ஆசிரியர் குறிப்பு:
திருவாரூர் மாவட்டம் அருகிலுள்ள புள்ளமங்கலம் கிராமத்தில் ஆசிரியப் பெற்றோருக்குப் பிறந்தவர். சிறுவயதிலேயே இசையிலும், இலக்கியத்திலும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர். தமிழின் மிகப்பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவியார். இந்த நூல் இவருடைய முதல் நூல், சமீபத்தில் வெளிவந்த அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு.
அதிகம் வாசித்து, அதிகம் எழுதாதவர்களின் மொழிநடையில் எப்போதுமே ஒரு வசீகரமுண்டு. அருண்மொழி எழுதாமலேயே, வாசிப்புடன் இருந்து, இத்தனை காலத்திற்குப் பிறகு எழுத ஆரம்பித்திருக்கிறார். இவரது மொழி சரளமாக இருக்கிறது. முதல் அத்தியாயத்திலேயே இது பாசாங்கில்லாத எழுத்து என்ற முடிவு வந்துவிடுகிறது. உடன் ஒரு சிறுபெண்ணின் டயரியைப் படிக்கும் பரபரப்பும் தொற்றிக் கொள்கிறது.
சிறுவயதில் படித்து அரைகுறையாகப் புரிந்து கொள்வது ஒரு சுகானுபவம். எதிர்பாலினத்தின் கையைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்று படித்து நானும் பரவசமாகி இருக்கிறேன். பின்னால் எத்தனை பெண்களின் கைகளைத் தொட்டும் மின்சாரம் ஏதும் பாயவில்லை.
அப்புறம் மெக்சிகோ தேசத்து சலவைக்காரி ஜோக்கைக் கடைசியில் சுஜாதா முழுதும் சொல்லியதாக நினைவு.
பாலகுமாரனின் மூன்று நாவல்கள் படித்ததும் சலிப்பு ஏற்பட்டு விட்டது என்று இவர் சொல்வதைத் தேர்ந்த வாசகர்கள் எல்லோருமே அனுபவரீதியாக உணர்ந்து இருக்கக்கூடும். மையுடன் பாசாங்கு கலந்த எழுத்து. அசோகமித்ரனை வாசித்ததும் ஜிலுஜிலு எழுத்தாளர்கள் நுரைக்குமிழிகளாய் மறைவதும் இயல்பே. அது வாசிப்பின் அடுத்த படிநிலை.
பூசி மெழுகி ஒரு விசயத்தைச் சொல்வது என்பதே இவர் எழுத்தில் இல்லை. நாயர்களுக்குக் காது கிடையாது என்று சு.ரா சொல்லும் சம்பவம் ஆகட்டும், செய்முறை விசயத்தில் அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும் நடக்கும் சண்டையைச் சொல்வதாகட்டும் வாசகர் முடிவுக்கு விட்டு ஒதுங்கிக் கொள்ளும் நடை. சிறுவயது நினைவாதலால் சித்தப்பாவிற்காகப் பேசுவது போல் இருந்தாலும், நமக்குப் புரிகிறது. அதே போல் பையனும், பெண்ணும் பார்த்துக் கொள்ளாமலேயே
திருமணம் உறுதிசெய்யப்படுகிறது. பெண்ணுக்கு ‘ முன்னப்பின்ன இருந்தாலும் அனுசரித்துப் போ’ என்ற அறிவுரையும், ஆணுக்கு அதுவே ‘உன்னை நம்பி வந்தவ’ என்றும் மாறும்.
ஒவ்வொரு அத்தியாயத்தையும் சிறுகதையாகவும் எழுதலாம்.கட்டுரையாக எழுதியதால் ஒன்றும் குறைந்து விடவில்லை. ராஜம்மா பாட்டி அரசியாகவே வாழ்ந்தார். அரசிகள் யாரிடமிருந்தும் ஆணைகளை ஏற்பதில்லை. அதனாலேயே அவர் மணவாழ்வு அப்படியாகி இருக்கிறது.
சின்னக்குழந்தைகளையும் கட்டிப்பிடித்துக் கொஞ்சாதது, பேத்தியுடன் ரகசியமாக சினிமாவுக்குப் போவது, அடுக்களையில் அமரவைத்து, வேலைக்காரப் பெண்ணுக்கு நெய்தோசை போடுவது, சித்தப்பாவை அவமானப்படுத்தியதும் அவருடன் வீட்டை விட்டுக் கிளம்புவது…….. ராஜம்மா பாட்டி நாவலின் நாயகி.
புத்தகங்களுடனான தொடர்பு, இசை தழுவிக் கொண்டது, உற்றவர்கள், நண்பர்கள், ஆசைகள், அபிலாஷைகள், தாய்மையை அம்மாவிடமும், அத்தையிடமும் இருந்தும் வாங்கிக்கொண்டது, பின் பிள்ளைகளுக்குக் கொடுத்தது, நடைச்சித்திரம் போல் பட்டாணி, ராவுத்தர் என்று வந்து மறையும் மனிதர்கள் என்று சிறுவயது நினைவுகளை மீட்டெடுத்து எழுதி இருக்கிறார். தடையே இல்லாது பாயும் நதி போல, விரைந்து ஓடும் எழுத்து. அருண்மொழியின் நெடுங்கால சொந்தப் புத்தகக் கனவு நிறைவேறியிருக்கிறது. இன்னொரு வகையில் இவரது நூலைப் படிக்கும் பெண்களுக்கும், தங்களது பால்யத்தின் நினைவுகளை அச்சில் காணும் ஆவல் வர வேண்டும். Print on demandல் புத்தகங்கள் வெளியிடுவது எளிதாகி இருக்கிறது. நினைவுகளுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பதும், காற்றுவெளியில் கரைப்பதும் அவரவர் விருப்பம்.
பிரதிக்கு:
எழுத்து பிரசுரம் (Zero Degree) 89520 61999
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 380