பேரிடர் தொடர்காலமாகிய 2021ல் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு, ஓரளவு வழக்கமான வாழ்க்கை திரும்பிய போதும், தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தவரை, 2020க்கும் இந்த வருடத்திற்கும் பெரிதாக வித்தியாசம் ஏதும் சொல்வதற்கில்லை. இவ்வருடமும் ஏராளமான சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன. இணைய இதழ்களின் வளர்ச்சி, புதிய சிறுகதை எழுத்தாளர்களுக்கும் ஒரு மேடையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தமிழுக்கே உரித்தான புற்றீசல் கவிதைகள், இந்த வருடத்திலும் ஏமாற்றம் தரவில்லை. புதிய மொழிபெயர்ப்பாளர்களும், அதிக அளவில் மொழிபெயர்ப்பு நூல்களும் வெளியாகிய வருடமிது. அதே போலவே முந்தைய வருடங்களைப் போலவே, விரல்விட்டு எண்ணும் அளவிலேயே குறிப்பிடத்தக்க நாவல்கள் வெளியானதிலும் மாற்றமில்லை.
உலக அளவில் ஒவ்வொரு மாதமும் ஏராளமான அறிமுக எழுத்தாளர்களின் நாவல்களும், பரிட்சார்த்த நாவல்களும் வெளியாகும் காலகட்டத்தில், தமிழில் ஒரு தேக்கநிலையே நாவல்களைப் பொறுத்த வரையில் நிலவுகிறது. இந்திய அளவில் பார்த்தாலும், JCB awardன் நீண்ட பட்டியல்களில் பெருமாள்முருகன் மட்டுமே வருகிறார். அவர் மட்டுமே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகிறார் போலிருக்கிறது. எப்படியாயினும் இது ஆரோக்கியமான சூழல் இல்லை.
2021ல் டிசம்பர் 20க்குள் நான் வாசித்த, என் வாசிப்பு ரசனையில் சிறந்தது என்று எனக்குத் தோன்றிய நூல்களைக் குறித்து ஓரிரு வரிகள் தருவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். வாசிக்கத் தவறியவை, தனிப்பட்ட வாசிப்பு அனுபவம் போன்ற போதாமைகள், குறைகளை உள்ளடக்கியதே இந்தக் கட்டுரை. சிறுகதைகளில் ஜெயமோகனின் பங்களிப்பு இந்த ஆண்டிலும் கணிசமாக இருக்கின்றது. கல்குருத்து போன்ற சிறுகதைகள், எந்தத் தமிழ் எழுத்தாளரையும் பொறாமையில் ஆழ்த்துபவை. குறுங்கதைகளில் பெருந்தேவியைத் தவிர வேறு எவருமே வடிவத்தை உணர்ந்து எழுதியதாக எனக்குத் தோன்றவில்லை.
சிறுகதைத் தொகுப்புகள்:
கடலில் எறிந்தவை- யுவன் சந்திரசேகர்:
நேர்க்கோட்டுக்கதை என்று பெரும்பாலும் இருப்பதில்லை யுவன் சந்திரசேகரின் கதைகளில். ஆனால் சொல்வதற்கு நிறைய விசயங்கள் இருக்கும். மெல்லிய நகைச்சுவை அதில் மறைந்திருக்கும். அகஉலகத்தை விட புற உலகத்தில் அதிக கவனம் செலுத்த வைக்கும் தகவல்கள் மெல்ல நம்மை அகஉலகத்தை நோக்கி செலுத்தும் ஆனந்தம் யுவன் சந்திரசேகரின் கதைகள்.
விஷக்கிணறு – சுனில் கிருஷ்ணன்:
சுனில் கிருஷ்ணன் ஒரு கதாபாத்திரம் வாயிலாக இரண்டு Mutually exclusive worldஐ அழிவு என்ற ஒரு சங்கிலியால் இணைத்துத் தொடர்பு ஏற்படுத்துகிறார். பகவத் கீதையே அழிவிற்கு முன் சொல்லப்பட்டது தான். ஹெர்பர்ட்டின் கவிதைகள் ஆன்மாவின் அலைக்கழிப்பு.
இசூமியின் நறுமணம் & பிற கதைகள்- ரா.செந்தில்குமார்:
பன்னிரண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. மூன்றில் இரண்டு பங்குக் கதைகள் ஜப்பானைக் கதைக்களமாகக் கொண்டவை. இது போன்ற கதைகளே நவீன தமிழ் இலக்கியத்தின் எல்லைகளை விரிவு படுத்தும். Cross culture கதைகள் என்பது வேறு நாட்டில் வேறு கலாச்சாரத்தில் வாழ்ந்தவர்கள் இந்தியப் பார்வையுடன் பார்க்கும் கதைகள்.
கூடு – கலைச்செல்வி:
பெரும்பாலான கதைகள் இந்தத் தொகுப்பில், நனவோடை யுத்தியில் நகர்கின்றன. கதாபாத்திரங்களை வெகு நுட்பமாகச் சித்தரித்துப்பின் புறதகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விவரணைகள் செய்து கத்தி நுனியால் முதுகைத் தொடும் உணர்வு போல் கதை எதிர்பாரா நேரத்தில் கடந்து செல்கின்றது.
மூங்கில்- சுஷில்குமார்:
சுஷில் தனக்குத் தெரியாத, அனுபவப்படாத, பார்த்திராத, கேட்டிராத எதையும் கதைக்குள் கொண்டு வருவதில்லை. அதுவே இவர் கதைகளை நல்ல கதைகளாக்கும் முதல் விசயம். இரண்டாவது நாஞ்சில் வட்டார வழக்கு, வலிய இழுக்காமல் எல்லாக் கதைகளிலும் இயல்பாய் இழைந்தோடுகிறது.
பிச்சியின் பாடு – பி.உஷாதேவி:
அநேகமாக எல்லாக்கதைகளிலுமே தனிமையும், துயரும் நிரம்பியிருக்கின்றன. கதாபாத்திரங்கள் அடிக்கடி நனவுலகில் இருந்து நழுவி நினைவுலகில் விழுகிறார்கள். இவரது மொழிநடை நான் ஒன்னும் அழுகல என்று சொல்லி முகத்தைக் காட்டாது மறைக்கும் பெண்போல துயரைச் சொல்லாமலேயே சொல்கிறது.
நூறு ரூபிள்கள் – மயிலன் ஜி சின்னப்பன்:
நூறு ரூபிள்கள் தொகுப்பு மயிலனுக்கு மிகச்சிறந்த அறிமுகத்தைத் தந்திருக்கிறது. தொகுப்பை அசோகமித்ரனுக்கும், ஆதவனுக்கும் சமர்ப்பணம் செய்துள்ளார். அவர்கள் போலவே அலட்டிக்கொள்ளாது நல்ல கதைகளை வழங்கும் எழுத்து மயிலனுடையது.
நிழற்காடு – விஜயராவணன்:
மொழிநடையை எடுத்துக் கொண்டால், அதுவும் கதைகளுக்கேற்றாற்போல் மாறுகிறது. குறிப்பாக சவப்பெட்டி, பேசும் தேநீர் கோப்பைகள், போதிசத்வா ஆகிய மூன்று கதைகளையும் எழுதியவர் ஒருவரே என்று கண்டுபிடித்தல் கடினம். வளரும் எழுத்தாளருக்கு மிகமுக்கியமான Positive trait அது.
ரோவெல் தெரு மனிதர்கள் – உமா கதிர்:
பத்து கதைகளிலும் கூடுமானவரை வித்தியாசமான கதைக்கருக்களை முயற்சி செய்திருக்கிறார். ஒரே கதைக்களத்தில் (சிங்கப்பூர் ரோவெல் தெரு) நடக்கும் கதைகளில் வித்தியாசம் காட்டுவது கடினம். மொழிநடையில் ஒரு Spontaneous flow நம்மை வேகமாக இழுத்துச் செல்கிறது.
திமிரி – ஐ.கிருத்திகா:
கிருத்திகாவின் பலம் அவருடைய அவதானிப்பு. சுற்றி நடக்கும் பல விசயங்களை கூர்ந்து நோக்கி, நினைவுப் பெட்டகத்தில் சேகரம் செய்து கொள்ளல். இவருக்குத் தெரியாத கதை உலகத்தில் இவர் புகுவதேயில்லை அதனால் இவர் கதைகளுக்கு ஒரு உயிரோட்டம் கிடைத்துவிடுகிறது.
பேரீச்சை – அனோஜன் பாலகிருஷ்ணன்
புலம்பெயர்ந்த இளைஞர்கள் கதை எழுதுவதில் சில நல்ல விசயங்கள் என்னவென்றால், அறிந்தோ அல்லது அறியாமலோ அந்த நாட்டில் அவர்கள் வாழும் கலவைக் கலாச்சாரத்தைக் கதைகளில் பிரதிபலிக்கிறார்கள். அடுத்தது புதிய குரல்களில் மனத்தடை, விழுமியங்களைக் கடந்த ஒரு Openness அவர்களது எழுத்தில் வந்துவிடுகிறது.
நாவல்கள்:
அஷேரா – சயந்தன்:
சயந்தனின் செறிவான மொழிநடை, பலமடிப்புகள் கொண்ட கதையை எளிதாகச் சொல்லும் யுத்தி, உணர்வுகளின் அலைகள் கரையைத் தட்டித்தட்டி சோர்ந்து மீள்வது போல் காமம், பாலைவனத்தில் சுனையாய் கண்ணுக்குத் தெரிந்து கைக்கப்படாமல் போவது என்று பலஅம்சங்களினால் நாவலைவிட்டு வெளியே வரவிரும்பாது அதற்குள்ளேயே கிடக்கும் மனம். நிறைவான வாசிப்பைத் தரும் நாவல்.
புத்திரன் – வாசு முருகவேல்:
வாசு முருகவேலின் முதல் இரண்டு நாவல்களில் இருந்து மாறுபட்டது இந்த நாவல். பெரிய திருப்பங்கள் ஏதுமில்லாத கதை. நயினா தீவில் மக்களின் வாழ்க்கை, பொழுதுபோக்கு, வழிபாடுகள், இராணுவக் கட்டுப்பாடுகள், மக்களின் நம்பிக்கைகள் இவற்றை சொல்லிக்கொண்டே போகும் கதை கடைசிப்பகுதியில் பாதைமாறி பயணிக்கிறது. போரும் வாழ்வும் சேர்ந்த வாழ்க்கையைப்பற்றி எழுதும் இலக்கியங்கள் பக்கஅளவை வைத்துக் கணிக்கப்படுவதில்லை, அது வாசகர் மனதில் விதைக்கும் உணர்ச்சிகளை வைத்துத்தான் மதிப்பிடப்படும்.
தீர்த்த யாத்திரை- எம்.கோபால கிருஷ்ணன்:
தீர்த்த யாத்திரையில் உடல் நிகழ்காலத்திலும், மனம் கடந்த காலத்திலும் பயணம் செய்கிறது. நினைவுகள் பின்னோக்கி நகர்வது நிம்மதியிழத்தலின் அறிகுறி. சங்கரி, மனோகரி, ஜெயந்தி, அர்ச்சனா என்பது முரளி கடந்து வந்த பெண்கள். பெயர்களில் என்ன இருக்கிறது? ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் காலமெல்லாம் நினைவில் சுமந்து, இறந்தகாலத் தவறுகளை சரிசெய்துவிடத் துடிக்கிறார்கள். எச்சில் தொட்டு சிலேட்டில் அழிக்கும் எழுத்தல்லவே பழையகாலக் குற்றங்கள்.
டைகரிஸ் – ச.பாலமுருகன் :
தமிழின் வெகுசில அசல் Historical Fictionல் இதுவும் ஒன்று. வரலாற்று நாவல்களிலும் முழுக்கவே போர் குறித்த நாவல்கள் தமிழில் வந்திருப்பதாக என்னளவில் தெரியவில்லை. புயலிலே ஒரு தோணி போன்ற நூல்களில் போர் ஒரு பகுதி. பாக்தாத் தெருக்களில் சாணம் இறைந்து கிடந்தது, பெரும்பாலான வீடுகள் காரைப்பூச்சு இழந்து செங்கல்கள் துருத்திக் கொண்டிருந்தன என்பது போல் நூற்றுக்கணக்கான நுணுக்கமான தகவல்களை எங்கு எடுத்திருக்கக்கூடும் என்று தெரியவில்லை.
தருநிழல் – ஆர். சிவக்குமார்:
சிவக்குமார் வாசித்த பல மேலைநாட்டு நூல்களின் சாயலோ சிறிதும் இன்றி, மிக எளிய நடையில், நேர்க்கோட்டில், சம்பவங்களின் கோர்வையாக ஒரு குடும்பத்தின் கதை நகர்கிறது. பார்வையாளர் கதைசொல்லும் தொனியில் குடும்பக்கதை நகர்வதும், எங்கெல்லாம் மார்க்சியம் குறித்த விசயங்கள் வருகின்றதோ, அவை உரையாடல், விவாதங்கள் மூலம் நகர்த்துவதும் நல்ல யுத்தி.
பெருந்தொற்று – ஷாராஜ்:
கொரானா காலத்தில் மதங்களை முன்னிலைப் படுத்தி வெளிவந்த நாவல் என்ற வகையில் இது முக்கியமானது. பாரம்பரியக்கதை வடிவம் இல்லாது, சமகால உலக இலக்கியங்கள் பலவற்றில் காணப்படும் அல்புனைவு பாணியில் நாவலை எழுதி இருக்கிறார். இதில் வரும் தகவல்கள் எல்லாமே நாம் அறிந்தவை. பரிட்சார்த்தமாக விவேகானந்தர் இஸ்லாம் குறித்துப் பேசியது, நபிகள் நாயகம் quotesஐ நாவலின் நடுவில் சேர்த்திருக்கிறார்.
கதீட்ரல்- தூயன்:
ஆங்கிலக் காலனியாதிக்க காலத்தில் நடைபெறும் இந்த நாவலில் மேலைச் சிந்தனைகளும் இந்தியத்தத்துவ மரபும் இடைவிடாது ஒரு உரையாடலை நடத்திக் கொண்டே இருக்கின்றன. இரண்டின் கலவையான பிரதிநிதியாக அவந்திகை.
தூயனின் மொழிநடை இது போன்ற நாவல்களை எழுதுவதற்கு மட்டுமன்றி, புனைவுவெளியின் எல்லைகளை வாசகர்கள் அவரவர் விருப்பம்போல் விரித்துக்கொள்ளும் வண்ணமும் கச்சிதமாக அமைந்திருக்கிறது.
சித்தன் சரிதம் – சாந்தன்;
சித்தன் சரிதம் மூன்று பாகமாக பால்யம், வாலிபம், முதுமை என்று சித்தனைச் சுற்றியே நகர்ந்தாலும் கோபல்ல கிராமம் போல் ஏராளமான மக்கள் நாவலில் வந்து போகிறார்கள். பிஞ்சியின் கதை போல் பலப்பல குட்டிக் கதைகளும் வந்து போகின்றன. யாழ்ப்பாணம் குறித்த எக்கச்சக்கமான தகவல்களை உள்ளடக்கிய நாவல். மேசையில் சிந்திய மையை காகிதத்தில் ஒற்றியெடுத்தது போல நாவலில் யாழ்பாண வாழ்க்கை ஒற்றியெடுக்கப்பட்டிருக்கிறது.
அல்கொஸாமா- கனகராஜ் பாலசுப்பிரமணியம்:
நாமறியாத அரபி இஸ்லாம் சமூகம் பற்றிய ஏராளமான விசயங்கள் நாவலினூடே கலந்து வருகின்றன. பாலைவனம் தன் ரகசியங்களைச் சற்றே திறந்து காட்டுகிறது.
jinniகள் கதை சொல்கின்றன. ஒட்டகங்கள் கதையில் பயணித்துக் கொண்டே இருக்கின்றன. புத்திரசோகத்தைத் தணிக்க, கழுத்தை வளைத்து அணைத்துக் கொள்ளும் ஒட்டகம். கனகராஜ்ஜின் கதைசொல்லலில் நவீனம் பெரும்பங்கு வகிக்கிறது. பாரம்பரியக் கதை சொல்லலில் இந்தத் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. தமிழின் முதல் Hystetical realism நாவல் இது.
கவிதைகள் :
பெருந்திணைப்பூ தின்னும் இசக்கி- வெய்யில்:
காமம் யாகத்தீயானால் ஆகுதி நம் இளமை. காமம் பெருநதியானால் சுழிகள் நம் இரவுகள். காமம் கரு வான் என்றால் நீ என் நிலா.
கல்லாப்பிழை- க.மோகனரங்கன்:
மோகனரங்கனின் கவிதைகள் முழுசரணாகதி அடைந்த போதிலும், பெண்கள் பிரதிபலனாகச் செய்வது விலகிப்போவது, கசந்து போவது, புறங்காட்டுவது, அக்கரையில் நிற்பது என்று அல்லாதன அனைத்தும் செய்கிறார்கள். அப்படியே தப்பித்தவறி உடன் இருக்கும் இரண்டு பெண்கள் சாளரம் வழி வெட்டவெளியையோ அல்லது இருளையோ வெறிக்கிறார்கள்.
சமகாலம் என்னும் நஞ்சு – சமயவேல்:
காமம் பல கவிதைகளில் சவ்வூடு பரவல் நடத்தியிருக்கிறது. எவ்வளவு எடுத்தாலும் எடுத்ததை விட எப்போதும் மீதியாய் நிறைய இருக்கும், கண்முன் சர்ப்பமாய் நெளியும் காமம். உயிர்சுவையை அறியத்துடிக்கும் துடிப்பு. எண்பத்து ஏழில் இவரது முதல் தொகுப்பு. இது ஏழாவது எனும் போது சராசரியாக ஐந்து வருடங்களுக்கு ஒரு தொகுப்பு என்பது குறைவாக எழுதுவதே.
உன் சின்ன உலகத்தைத் தாறுமாறாகத்தான் புணர்ந்திருக்கிறாய்- பெருந்தேவி:
சொற்களை சொக்கட்டான் உருட்டுவது போல் உருட்டுகிறார், அபலையாய், அகங்காரியாய் தன் கவிதைகளில் பலமுகங்கள் எடுக்கிறார், சாந்தோம் கடற்கரையில் தனியாக நிற்கிறார், அமெரிக்காவில் கனவுகளை துணைக்கு வைத்துக்கொள்கிறார், காலத்தில் பின்னகர்ந்து அம்மா அப்பாவின் அதிகபுன்னகையின் காரணத்தைக் கண்டுபிடிக்கிறார். Absurdism பெருந்தேவியின் கவிதைகளில் அடிக்கடி வந்து போகும். தமிழ் நவீன கவிதைகளுக்குப் பெருந்தேவியின் பங்களிப்பு தொடர்கிறது,
ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும்
திரும்புகிற பொழுது – பொன்முகலி:
இந்த வாழ்க்கையின் அபத்தங்களை, அநித்யங்களை, பாசாங்குகளைக் குறித்தே அதிகமான கவிதைகள் இருக்கின்றன. கவிஞர்களுக்கு அடிப்படைத் தேவையான Variety இவர் கவிதைகளில் இயல்பாக இருக்கிறது. எது எப்படியானாலும் நிலவெரியும் இரவுகளில் என்னை விட்டுச் சென்றது நியாயமா என்று இறைஞ்சும் பெண்ணை பொன்முகலியின் கவிதைகளில் பார்க்க முடியாது.
மொழிபெயர்ப்புகள்:
அந்திமகாலத்தின் இறுதி நேசம்-தக் ஷிலா ஸ்வர்ணமாலி- தமிழில் ரிஷான் ஷெரிப்:
அம்மா ஒருவர் விட்டு ஒருவரைத் திருமணம் செய்வதை மகன் கோணத்தில் சொல்வது, அப்பாவின் Extramarital affairஐ மகள் கோணத்தில் சொல்வது மட்டுமன்றி அவற்றை அழகான கதைகளாக Present செய்கையில் தான் அவை இலக்கியமாக முடியும். இவருக்கு இலக்கியத்தில் மிக நல்ல எதிர்காலம் இருக்கிறது.
அந்திராகம் – இஷிகுரோ, குந்தர் கிராஸ், மார்க்கேஸ்- தமிழில் ஜி.குப்புசாமி:
மூன்று ஆசிரியர்களுமே உலக இலக்கியத்தில் முக்கிய அந்தஸ்தைப் பெற்றவர்கள். இஷிகுரோவை ஜப்பானியர் என்று சொல்வதை விட இங்கிலாந்துக்காரர் என்றே சொல்ல வேண்டும். ஐந்துவயதில் இங்கிலாந்து சென்று ஐம்பத்தைந்து வருடங்களுக்கு மேல் அங்கேயே இருக்கிறார். குந்தர் கிராஸ் ஜெர்மனியர்களின் இலக்கிய மனசாட்சி. மார்க்கேஸ் மாஜிக்கல் ரியலிசத்தில் பல பரிசோதனை முயற்சிகளை செய்தவர்.
பத்து இரவுகளின் கனவுகள்- நாட்சுமே சொசெகி- தமிழில் கே.கணேஷ்ராம்:
ஒரு நோக்கில் பார்த்தால், காத்திருப்பு, அறிதல், பழிவாங்குதல், வீடுபேறு, தந்திரம், கலைத்திறன், இருமனம் (Indecision) , மூடநம்பிக்கை, பயம் முதலிய மையக்கருத்தைக் கொண்டவை. ஆனால் வாசகஅனுபவத்தின்படி விரியவும், சுருங்கவும் செய்யும் கதைகள்.
பாதி இரவு கடந்து விட்டது – அமிதபா பக்சி- தமிழில் இல.சுபத்ரா:
முதல் கதை சாகித்ய அகாதமி விருதுபெற்ற பிரபல இந்தி எழுத்தாளர் விஸ்வநாத், தனது மகன் இறந்த புத்திரசோகத்தில் தன் வாழ்வில் செய்த தவறுகளை, சம்பந்தப்பட்டவரிடம் எல்லாம் பாவமன்னிப்பு கேட்கும் தொனியில் கடிதம் எழுதுவது. இரண்டாவது கதை விஸ்வநாத் கடைசியாக எழுதிய முற்றுப்பெறாத நாவல். அதற்குள் லாலா மோதிசந்த் அவரது இரு மகன்கள் மற்றும் மருமகள்களின் கதைகள். முதல் கதையின் சாயல் இரண்டாவது கதையில் படிகிறது. இல்லை இரண்டிலுமே இராமாயணத்தின் சாயல் படிகிறது.
வாட்டர்மெலன் – கனகராஜ் பாலசுப்பிரமணியம்- தமிழில் கே.நல்லதம்பி:
பதினோரு கதைகள் கொண்ட தொகுப்பு. அநேகமான கதைகள் இருத்தலுக்காகப் புலம் பெயர்ந்தவர்களின் அலைக்கழிப்புகள்.
ஆடுஜீவிதம் போன்ற வழக்கமான துயரக் கதைகள் இல்லை இவை சொல்லிய முறையிலும், பின்நவீனத்துவ பாணி, சர்ரியல் பாணி என வித்தியாசப்படுபவை.
ஆவியின் வாதை – ஹஸன் அஸிஸூல் ஹக்- தமிழில் தாமரைச் செல்வி:
ஹஸன் அடித்தட்டு மனிதர்கள் பற்றியே இந்த தொகுப்பு முழுவதுமுள்ள கதைகளை எழுதியிருக்கிறார். துக்கத்தின் நிலவறை, கழுகு, மந்திரவாதி, மின்னும் தண்டவாளம், புதிர்பாதையை ஊர்ந்து கடக்கும் மரவட்டை போன்ற கதைகள் இவரை சிறந்த சிறுகதை எழுத்தாளராக அடையாளம் காட்டுகின்றன.
அந்த நாளின் கசடுகள் – மார்ட்டின் ஓ’ கைன்- ஆங்கிலத்தில் ஆலன் டிட்லி – தமிழில் ஆர்.சிவக்குமார்:
காஃப்காவின் K போல இந்த நாவலின் கதாபாத்திரம் N. அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளில் அதிருப்தியும், சமூகத்தின் மீது அவநம்பிக்கையும் கொண்டவன். பல நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த அவன் மனைவி இறந்ததால் ஈமக்கிரியைகளுக்கு தயார் செய்யச்சொல்லி மனைவியின் சகோதரியிடம் இருந்து அலுவலகத்தில் இருக்கையில் தொலைபேசி அழைப்பு வருகிறது. அடுத்த இரண்டு நாட்களில் அவன் சந்திக்கும் மனிதர்களும் பிரச்சனைகளுமே இந்தக் குறுநாவல்.
அல்புனைவுகள்;
மணல் கோடுகளாய் ..- R.P. ராஜநாயஹம்:
மணல் கோடுகள் அனுபவத்தின் காலடித்தடங்கள். அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் என்பது ஐம்பதைக் கடந்த பெரும்பான்மையினருக்குத் தோன்றும். If ifs and buts were candies and nuts we’d all have a very Merry Christmas. இவரது இந்த நூல், தன் அனுபவங்களைப் பார்வையாளன் கோணத்தில் அதிகம் Judgemental இல்லாமல் சொல்லிக் கொண்டே போவது.
தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள், நேர்காணல்கள்- தொகுப்பாசிரியர் மங்கையர்க்கரசி ப்ரகாஷ்:
“என்ன ஆச்சு? ஏதேனும் வித்ததோ என்பார் க.நா.சு. ம்ஹூம் ஒண்ணும் ப்ரயோஜனமில்லை! வேற யாரானும் ஆள் பிடிக்கணும் என்பார் எம்.வி.வி. ஒரு ஐஸ்க்ரீம் கம்பனிக்காரன் புதுசா பதிப்பகம் ஆரமிச்சுருக்கான். சாயங்காலமாய் போய் பாருங்களேன்! என் புத்தகம் ஒண்ணு எடுத்துட்டு ஐம்பது ரூபா கொடுத்தான் என்பார் க.நா.சு”
எழுதித்தீராப் பக்கங்கள் – செல்வம் அருளானந்தம்:
பாரிஸூக்குப் பிரயாண ஆயத்தங்களில் ஆரம்பிக்கும் நூல் கனடாவிற்குப் புலம்பெயர்வதுடன் முடிகிறது. கனடாவிலேயே முப்பதாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து விட்டார். பல விசயங்களைப் பேசும் இந்த நூல் புலம்பெயர்ந்த ஒருவர் உலகிற்குத் தெரியத் தரும் ஒரு ஆவணம். அதிகம் எழுதாத எழுத்துக்கு இருக்கும் வசீகரம் இவர் எழுத்திலும்.
இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம்- தொகுப்பு பா.பிரபாகரன் & யமுனா ராஜேந்திரன்:
இந்த நூலில் நாவல்களைப் பற்றிய பதிவுகளில் கட்டுரைகளை எழுதியவர்கள் யாருமே மேலோட்டமாகப் பேசவில்லை, எல்லோருமே அந்தப் பிரதியை முழுமையாக வாசித்து அவர்களது பார்வையை முன் வைக்கிறார்கள். நீங்கள் உடன்படலாம் அல்லது எதிர்கருத்து சொல்லலாம். ஆனால் மொழியை மட்டுமே நம்பிக் கிடைத்த தகவல்களைக் கொண்டு எழுதப்படும் நாவல்கள் ஜெயமோகனுடையது.
உயிர்த்த ஞாயிறு – ஸர்மிளா ஸெய்யித்:
True Storyகள் பெரும்பாலும் பத்திரிகையாளர்கள் ஆய்வு செய்ததன் பேரில் எழுதப்படுகின்றன. இவரது விசயத்தில் இவரே பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆகையால் தன்மையிலேயே கதை சொல்லப்படுகிறது. இஸ்லாமியத் தீவிரவாதத்தைப் பற்றி எழுதியதால் இவர் உயிருக்கு அச்சுறுத்தல் விடப்படுகிறது.
இவ்வருடத்தின் கடைசிப்பகுதியில் வந்த கதீட்ரல் மற்றும் டைகரீஸ், அல்கொஸாமா போன்றவை தமிழில் நாவல்கள் குறித்த எதிர்கால நம்பிக்கையை விளைவிக்கின்றன. ஆனால் இதை எழுதியவர்கள் மிகக் குறைவாக எழுதியவர்கள். நாவல்களைப் பொறுத்தமட்டில், குறைந்தது இரண்டு வருட ஆய்வும், உழைப்பும், கருணையில்லாத எடிட்டிங்கும், இல்லாது எழுதப்படும் நாவல்கள் காலவெள்ளத்தில் கரைந்து போகின்றன. அதே போல் அல்புனைவுகளிலும் தரமான நூல்கள் தமிழில் வெகு குறைவு. இனிவரும் வருடங்களில் இந்தக் குறைகள் களையப்பட,
எழுத்தாளர்கள் பங்களிப்பு இருக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்.