வேதாளம் – ஜெயமோகன்:
“சின்னப்பிள்ளைகள் தூக்கச் சொல்லி செல்லமாகக் கூப்பிடுவது போல” என்ற வரி ஏற்படுத்தும் அதிர்வலைகளுக்கு எல்லையே இல்லை. துப்பாக்கியை வேதாளம் என்றும், அதைத் தூக்கிக் கொண்டே நடந்து சலித்த சடாட்சரம் என்று நம் கவனத்தை முழுதுமாகத் துப்பாக்கிக்கு திருப்பிவிட்டு, நாம் சுதாரிப்பதற்குள் கதை திடீரெனத் திரும்புகிறது. Billஐ செட்டில் பண்ணுவதில் இருக்கும் சுணக்கம், போலிஸ்காரரின் அவலவாழ்வு, அது வெளியே தெரியாமல் வடிவேலு போல் மிரட்டிப்பார்ப்பது, கமலம்மையுடன் நடத்தும் இரட்டை அர்த்த உரையாடல் எல்லாம் கலைந்து ஏன் என்ற கேள்வி மட்டும் தொக்கி நிற்கிறது.
வருகை – சு.வேணுகோபால்:
வருகை சுதந்திரத்திற்கு முன் நடக்கும் அக்கிரஹாரக்கதை. எத்தனை சிறுமிகள், விதவை என்ற பெயரில் மொட்டிலேயே கருகி இருப்பார்கள். ஸ்வாமி பக்தியும், உச்சந்தலையில் கொட்டிக்கொள்ளும் கிணற்றில் சேந்திய வாளி நீரும் உடல்தேவையுடன் சண்டையிட்டு ஜெயிக்க முடியாத பலவீனர்கள். ஒடுக்கப்படும் காமம், இன்னும் அதிக வலுக்கொண்டு வெடித்துக் கொண்டு வெளியேற வழிபார்க்கும். காந்தியின் வருகை ஊருக்குள் நடக்கையில் இன்னொரு வருகையும் நிகழ்கிறது. தளையசிங்கத்தின் தொழுகை போல் கதையைக் கொண்டு செல்லவில்லை. அடுத்து கதையில் வராத பாத்திரம் கடைசியில் வந்து கதையை வேறு
தளத்திற்கு எடுத்துச்செல்வது. நல்ல கதை.
திரும்புதலற்ற பாதை –
எம்.கோபாலகிருஷ்ணன்:
திருப்பூர் உழைப்பாளிகளுக்கு வேலைஇல்லை என்று சொல்வதேயில்லை.
நானிருந்த திருப்பூர் இருபது வருடங்களுக்கு முந்தையது.அப்போது மதுரை மற்றும் தெற்கத்தி ஊர்களில் இருந்து வரும் தொழிலாளிகளின் ஆதிக்கம். தீபாவளி, பொங்கல் வாரங்களில் எல்லோரு ஊருக்குச் செல்லத் திருப்பூர் மயானஅமைதி கொள்ளும். இப்போது மற்ற தொழில்களைப் போலத் திருப்பூரிலும் வடக்கத்தி ஆதிக்கம் நிறைந்து விட்டது போலும். திருப்பூர் என்று சொல்லத் தெரியாது அந்த ஊருக்கு வருவதில் இருந்து கடைசிவரி வரை வெகு நுட்பமாகச் சொல்லப்பட்ட கதை. சமூக மாற்றத்திலும் மாறாததை கோபாலகிருஷ்ணன், வழக்கமான அலட்டாத தொனியில் சொல்லிக் கொண்டே போகிறார். அதனாலேயே இந்தக்கதை இலக்கியமாகிறது. பிரச்சாரத்திற்கும் இலக்கியத்திற்கும் விரற்கடை இடைவெளி.
யாருக்காகவும் பூக்காத பூ – அரவின் குமார்:
ஒரு கதையில் நிறைய விசயங்களை உள் நுழைக்கையில், சிறுகதை வடிவம் கெடாது, எழுதத் தனித்திறமை வேண்டும். ஆங்கிலம் கற்றுத் தருவது, ரொட்டி, பரிசுப்பொருட்கள் என்று ஒருபக்கம் மதமாற்ற முயற்சிகள் நடக்கிறது. சிறுவர் உலகம் நன்கு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சிறுவன் ஒருவனின் அம்மா இன்னொருவனுடன் ஓடி அந்த சிறுவன் சகஜவாழ்க்கைக்குப் போராடுகிறான். இன்னொரு சிறுவனின் வீட்டில் பெற்றோர் ஏழைகள், கடுமையான உழைப்பாளிகள் ஆனால் மதம்மாறக் கூடாது எனப் பிடிவாதமாக இருக்கிறார்கள். ஆங்கிலேயரைக் கவர இங்கே தேவாலயம் சிறார் நிகழ்ச்சிகள் வைத்துப் போராடுகிறது. ஆனால் கதையில் இதையெல்லாம் தாண்டி ஒரு Melancholy கீதம் இசைக்கப்படுகிறது.
கதைசொல்லிக்குப் பாட்டில் எது குறைகிறது என்று தெரிவதில்லை. நமக்குத் தெரிகிறது.
பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப்பூனை- லதா:
பூனைகள் குறித்து ஜப்பானில் மூன்று நாவல்கள் சமீபத்தில் வந்துள்ளன. கதையில் சொல்வது போல் Poe, Murakami முதலியோர் புகழ்பெற்ற கதைகள் எழுதியிருக்கிறார்கள். பச்சைக்கண் கொண்ட கருப்புப்பூனை, அரிதாகி வருகிறது. அதனாலேயே தனித்துத் தெரிகிறது. பூனையை விரும்புபவர்கள் ஏராளம். பூனையை விரும்பாத சிலருக்குக் கறுப்புப்பூனை துர்சகுனம். லதா திறமை வாய்ந்த எழுத்தாளர். ஒரு அமானுஷ்யச் சூழலை பின்னணியாகக் கொண்ட பூனைக்கதை இது. நன்றாக வந்திருக்கிறது.
பெட்டகம் – ரா.செந்தில்குமார்:
வாழ்ந்தவர் கெடும் கதைகள் ஒரு பரிதாபத்தைப் பொதுவாக ஏற்படுத்துபவன. ஆனால் இந்தக் கதை கடைசி வரை ஒரு சஸ்பென்ஸை தன்னகத்தே கொண்டு பரபரப்பாக நகர்கிறது. லலிதாவின் பால்யமும், கனவுகளில் வாழ்வதும், அம்மன் அவள் மேலேறி வருவதும் நுட்பமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அன்னப்பறவைகள் டாலரை சிறுவயதில் அடிக்கடி பார்த்ததுண்டு. ஒன்றை நோக்கி ஒன்று கொஞ்சுவது போல் வேகமாக நகர்வதும் பின் வேகத்தடையால் நிற்பதும்.
கதையில் அன்னப்பறவை டாலர் எங்கிருக்கிறது தெரிகிறதா? செந்தில்குமாரின் மற்றுமொரு சிறந்த கதை.
வீட்டு நாற்காலி- விஜயகுமார்:
சம்பாதிப்பது வேறு அதைப் பாதுகாப்பது வேறு. கணவன் மனைவிக்கிடையே ஈகோ நுழையும் போது, கை பட்டாலும் கால் பட்டாலும் குற்றம் தான். இந்த இரண்டுக்கிடையே நகர்ந்து முடியும் கதை.
மனைவி சாமர்த்தியசாலி, தன்னை விட உயரம், தன்னைக் காட்டிலும் அதிகம் சம்பாதிக்கிறாள் என்பதை ஏற்றுக்கொள்ளவோ, தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் இருப்பதோ பெரும்பாலான ஆண்களால் முடிவதில்லை. மனைவியின் கம்பீரத்தை ரசிக்கும் ஆண் அழகு.
ராம மந்திரம் – வைரவன் லெ.ரா:
வங்கியில் கடைநிலை ஊழியரும், எழுத்தர்களும் சொந்த ஊர்க்காரர்களாக இருப்பார்கள். தமிழகத்தைத் தலைமையகமாகக் கொண்ட சிறு வங்கிகள் வெளி மாநிலத்தவரை நம்புவதில்லை. அதனால் அலுவலர், குறிப்பாக மேலாளர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பெங்களூரில் கலவரத்தில் வங்கிக்குக் கூட்டமாக வந்தவர்கள், இதே கேள்வியைத் தான் கேட்டார்கள். எங்கிருந்தோ வந்த நீ AC Roomல் உட்கார, நீ சொல்லும் வேலையை இங்கே பிறந்தவர்கள் செய்ய வேண்டுமா? அந்தப் பதற்றத்துடன் நின்று விடாமல் வைரவன் கதையை அடுத்த தளத்திற்கும் எடுத்து செல்கிறார். நன்றாக வந்திருக்கிறது.
தீர்வை – ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்:
வரலாற்றில் புனைவை ஏற்றி, கதையின் நம்பகத்தன்மையைக் கூட்டும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறார் நவீன். ஒவ்வொரு கதையிலும் மொழிநடை, அந்தக்கதைக் களத்திற்கே நம்மைக் கொண்டு செல்கிறது. இந்தக்கதையில் நம் கண்முன் ஆக்ரோஷமான சிலம்புச்சண்டை
நடக்கிறது. ஆங்கிலேயருக்கான பிரித்தாளும் குயுக்தி வெளிப்படுகிறது. ஜமீனின் மேட்டிமைத்தனம் வெளிப்படுகிறது. காட்டிக்கொடுப்பவர்களும் நம்மிடையே எப்போதும் உண்டு. இதனாலேயே நாம் அழிந்தோம். உண்மைக் கதைகளின் சாயலில் நல்ல கதைகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார் நவீன்.