ஆசிரியர் குறிப்பு:
கனகராஜ் கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்தவர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர். தற்போது சவுதி அரேபியாவில் ஆங்கில இலக்கியம் கற்பித்துக் கொண்டிருக்கிறார். கன்னடத்தில் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் கொண்டு வந்துள்ளார். இந்திரா பார்த்தசாரதியின் ஔரங்கசீப் நாடகத்தை கன்னடத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார். தற்போது தமிழிலும் கதைகள் எழுதி பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. ஒரு குறுநாவல் அமேசான் கிண்டிலில் வெளியாகி உள்ளது. வாட்டர்மெலான் என்ற கன்னடக்கதைகளின் மொழிபெயர்ப்பு தமிழில் வந்துள்ளது.
ஆங்கிலப்பள்ளிகளில் படித்த பலர் தமிழ் எழுதப்படிக்கத் தெரியாது என்று சொல்லும் நிலையில், கனகராஜ் கர்நாடகாவில், கன்னடத்தில் படித்து வளர்ந்தவர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், பத்துவயதிற்குப் பிறகு வீட்டில் தமிழ் கற்றுக் கொண்டு, பின் கன்னடத்தில் தொடர்ந்து கதைகள் எழுதி, சென்ற வருடத்தில் இருந்தே தமிழில் கதைகள் எழுதத்தொடங்கியவர் ஒரு முக்கியமான குறுநாவல் போட்டியில் முதல் பரிசை வெல்வது என்பது மிகக்கடினமான விசயம். Jhumba Lahiri போன்ற வெகு சிலருக்கே இது முடிந்திருக்கிறது.
வெளிநாடுகளில், வேற்றுக் கலாச்சாரங்களின் நடுவில் வாழ்பவர்கள், தாங்கள் பார்க்கும் வாழ்க்கையை, கதைகளில் கொண்டு வருகையில் தமிழ் புனைவுலகின் எல்லையை விரிவாக்குகிறார்கள். இந்த நாவல் அரபுநாட்டு பதூவீக்கள் சமூகத்தின் நம்பிக்கைகள், ஆசாபாசங்கள், வன்மங்கள், உணவுப்பழக்கங்கள்,அலைக்கழிப்புகள், போராட்டங்களைப் பின்நவீனத்துவ கதைசொல்லலில் சொல்வது. உள்ளடக்கத்தினால் மட்டுமல்ல,
Presentationனாலும் இது தமிழ்புனைவிற்குப்
புதியது. பழங்குடிகளின் வாழ்வு நவீன உலகில் சிக்கலுக்குள்ளாவதைக் குறித்து பல நூல்கள் ஆங்கிலத்தில் வந்திருக்கின்றன. இவ்வருட புலிட்சர் பரிசை வென்ற Night Watchman கூட அமெரிக்கப் பழங்குடிகள் நவீன உலகில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த நாவல். சோளகர் தொட்டி போல விரல்விட்டு எண்ணும் நூல்கள் பழங்குடிகளைப் பற்றி வந்திருப்பினும் வேற்றுநிலத்தைச் சார்ந்தவர்களின் கதை தமிழில் இதுவே முதன்முறையாக இருக்கும்.
நாவல் நெடுகிலும் கவிதைகள் ஒரு கதாபாத்திரத்தைப் போலவே வருகின்றன.
Jinniகள் மனிதருக்குள் புகுந்து கொண்டு கவிதை, கதைகளின் ஊற்று வற்ற விடாமல் பார்த்துக் கொள்கின்றன. இந்தியாவிலிருந்து பிழைக்க அரேபியாவிற்குப் போனவர்களின் வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாகிறது. காமத்திற்கு வடிகால் இல்லாது தவிக்கிறார்கள். தாய்நாட்டில் இருக்கும் மனைவியின் நடத்தை குறித்து சந்தேகத்தில் புழுங்குகிறார்கள்.
நாமறியாத அரபி இஸ்லாம் சமூகம் பற்றிய ஏராளமான விசயங்கள் நாவலினூடே கலந்து வருகின்றன. பாலைவனம் தன் ரகசியங்களைச் சற்றே திறந்து காட்டுகிறது.
jinniகள் கதை சொல்கின்றன. ஒட்டகங்கள் கதையில் பயணித்துக் கொண்டே இருக்கின்றன. புத்திரசோகத்தைத் தணிக்க, கழுத்தை வளைத்து அணைத்துக் கொள்ளும் ஒட்டகம். கனகராஜ்ஜின் கதைசொல்லலில் நவீனம் பெரும்பங்கு வகிக்கிறது. பாரம்பரியக் கதை சொல்லலில் இந்தத் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. புதுவெள்ளம் போல் தமிழில் இது போல் பல படைப்புகள் வரவேண்டும்.
நாவல்கள்
பிரதிக்கு:
எழுத்து பிரசுரம் (Zero Degree) 89520 61999
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.320.