ஆசிரியர் குறிப்பு;
சாந்தன் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் எழுதுபவர். யாழ்ப்பாணத்தில் வசிக்கிறார். சாகித்ய அகாதமியின் விருது, இலங்கையின் சாகித்ய ரத்னா விருது போன்ற விருதுகளைப் பெற்றவர். சாந்தனின் படைப்புலகம் என்ற மொத்தபடைப்புகள் அடங்கிய 976 பக்கப்புத்தகத்தைத் தொடர்ந்து வரும் புதிய நாவல் இது.
கதைகளை நாம் இணையத்திலோ, வேறெங்குமோ தேடி அலைய வேண்டியதில்லை. நம்மைச் சுற்றியே கதைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நாம் தான் கவனிக்கத் தவறுகிறோம். நல்ல கதைகள், படித்துமுடித்த பிறகும், வாசகரை பாதி உணவு சாப்பிட்டவனைப் போல் இன்னும் என்ன என்று தேடவைக்கும்.
யாழ்பாணக் கிராமம் ஒன்றில், ஐம்பதுகளில்,
ஆரவாரமில்லாது தொடங்கும் நாவல் முதல் அத்தியாயத்திலேயே நம்மை உள் இழுத்துக் கொள்கிறது.
சித்தன் சரிதம் மூன்று பாகமாக பால்யம், வாலிபம், முதுமை என்று சித்தனைச் சுற்றியே நகர்ந்தாலும் கோபல்ல கிராமம் போல் ஏராளமான மக்கள் நாவலில் வந்து போகிறார்கள். பிஞ்சியின் கதை போல் பலப்பல குட்டிக் கதைகளும் வந்து போகின்றன. யாழ்ப்பாணம் குறித்த எக்கச்சக்கமான தகவல்களை உள்ளடக்கிய நாவல். மேசையில் சிந்திய மையை காகிதத்தில் ஒற்றியெடுத்தது போல நாவலில் யாழ்பாண வாழ்க்கை ஒற்றியெடுக்கப்பட்டிருக்கிறது.
கிராமபோனில் தியாகராஜ பாகவதர் பாடல் ஒலிக்கையில் நமக்கும் Goosebumbs ஏற்படுகிறது. கடவுள்களின் பெயர் சாத்திரமுறைக்கு ஏற்ப மாற்றப்படுகிறது. 1927ல் காந்தி யாழ்ப்பாணம் வருகிறார். பெட்ரோல் தட்டுப்பாடு கார்களை விற்கும்படி செய்கிறது. 1958லேயே தமிழர் மீது தொடுக்கப்பட்ட கலவரத்தால் கொழும்பில் இருந்து யாழ்பாணத்திற்குப் பலர் பெயர்கிறார்கள். காரில் ஒலிபெருக்கியைக் கட்டிக்கொண்டு புதுப்பட விளம்பரத்திற்கு நோட்டீஸை அள்ளி வீசுகிறார்கள். அரசாங்க வேலையில் சேர, இருப்பவர்கள் தொடர, சிங்களம் கற்றுக் கொள்வது கட்டாயமாகிறது. சித்தன் சரிதம் தனிமனிதனின் கதையைச் சொல்வது போல் ஒரு இனத்தின் நூற்றாண்டு வரலாற்றைச் சொல்வது.
1998ல் நாவலை முடித்து விட்டதாகவும், இப்போதே பதிப்பிக்க முடிந்ததாகவும் சாந்தன் குறிப்பிட்டிருக்கிறார். பேரழிவிற்குப் பத்து வருடங்கள் முன்பே முடித்திருக்கிறார். எனினும் நாவல் நடக்கும் காலகட்டத்திலும், உயிருக்குப் பயந்து உடைமைகளை விட்டு ஓடுகிறார்கள். தமிழ் இளைஞர்களுக்கு இயக்கம் அல்லது வெளிநாடு என்ற இரண்டு பாதைகளைத் தவிர மீதி எல்லா வழிகளும் அடைக்கப்படுகின்றன. நாவல் முழுதும் யாரோ கதைசொல்ல நாம் கேட்கும் பாணியில் படர்க்கையில் நகர்ந்து போகிறது. தமிழ் திரையிசை, இந்த நாவலில் பிரிக்கவே முடியாது ஒன்றறக்கலந்து வருகிறது. அமைதி இல்லாதென் மனமே பாடல் மதுராவை நினைவுறுத்துவது போல், இலங்கை வர்த்தக ஒளிபரப்பைக் கேட்டவர்களில், அவரவர்க்கு அவரவர் பாடல்கள், நினைவுகள். நாவலின் கதாபாத்திரங்கள் பக்கத்து வீட்டு மனிதர்களை வர்ணிப்பது போல் திருத்தமாக வந்திருக்கின்றன. அட்டைப்பட மரக்குதிரை சித்தனின் பால்யத்தின் முக்கிய அங்கம். நல்ல வாசிப்பின்பத்தை வழங்கும் நாவல். இந்த நாவலைத் தவற விடுபவர்கள், யாழ்பாணக்கிராம வாழ்வை சிலமணிநேரமேனும் வாழும் வாய்ப்பை இழக்கிறார்கள்.
நாவல்கள்
பிரதிக்கு:
காலச்சுவடு பதிப்பகம் 4652-278525
முதல்பதிப்பு அக்டோபர் 2021
விலை ரூ.450.