கலாப்ரியாவின் மற்றாங்கே தொகுப்பு வெளிவந்தபோது, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பருவம். அந்த வயதுக்குரிய தேடலில், கலாப்ரியாவின் கவிதைகளில் இருந்த வரிசையான காட்சி சித்தரிப்புகளும், காமமும் கவர்ந்திழுத்ததில் ஆச்சரியமேயில்லை. சில விசயங்கள் சில பருவங்களில் கிடைப்பது போன்ற உணர்வு வேறெப்போதும் வாழ்க்கையில் கிடைப்பதில்லை. காலங்காலமாக காதலித்துக் கொண்டிருந்த பெண் இருவரின் எழுபதுகளில் கிடைக்கையில் முதல் முத்தத்திற்குக் கூட அர்த்தமில்லாததை மார்க்கேஸ் விவரித்திருப்பார்.
எழுபதுகளில் கவிதை எழுதத் தொடங்கிய, பலகாலம் கவிஞராகவே அறியப்பட்ட கலாப்ரியா கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காத்திருந்து முதல்நாவலை 2017ல் வெளியிட்டதும் தமிழ் இலக்கிய உலகில் ஒரு ஆச்சரியம். இது குறுகிய காலத்தில் வெளிவரும் நான்காவது நாவல். காலங்கடந்த முத்தம் போல் இல்லை புனைவு, ஆட்வுட் தனது எண்பதாவது வயதில் வெளியிட்ட டெஸ்டமன்ட்ஸ் புக்கர் விருதை வென்றது.
மாக்காளை நெல்லையப்பர் கோவிலில் வளர்ந்துகொண்டே போகும் சிலை. இந்தக்கதையில் விசுவலிங்க அண்ணாச்சி சொல்வதை எல்லாம் கேட்டுக்கொள்ளும் மௌனசாட்சி. விசுவம் அண்ணாச்சி வாழ்ந்து கெட்டவர். நிலம்புலம் பணம் இழந்து, தியேட்டரில் கடையில் வேலைபார்த்துக் காலத்தைக் கழிப்பவர். அவரைச் சுற்றி நகரும் நாவல் தான் இது.
சினிமாப் பாடல்கள், காட்சி, வசனம் எல்லாவற்றையும் மூளையில் சேகரித்து வேண்டும் நேரத்தில் வெளியே விடும் சமூகம் இருந்தது. அப்போது கூகுள் பிறக்கவில்லை.கலாப்ரியா அந்த சமூகத்தைச் சேர்ந்தவர். இப்போது கூட அவரால் பல சினிமாக்களை, குறிப்பாக எம்.ஜி.ஆர் சினிமாக்களைக் குறித்துப் பல தகவல்களைத் தரமுடியும். அது தமிழர் வாழ்வில் சினிமா பெரும்பங்கு வகுத்த காலம். இருபெரும் நடிகர்கள் திரைரசிகர்களை அவர்களுக்குள் பிரித்துக் கொண்டார்கள். தியேட்டரில் முதல்காட்சிக்கு ஆண்பெண் பேதமின்றி அடித்துக்கொண்டு படம் பார்த்தார்கள் என்பதை நேரில் பார்த்தது போன பிறவி போலத் தோன்றுகிறது. படகோட்டி, நவராத்திரி படங்கள் 1964ல் வெளிவந்தன. கதை ஆரம்பிக்கும் காலமும் அதுவே.
சினிமா மட்டுமல்ல, திருநெல்வேலியின், அறுபதுகளின் வாழ்க்கை கண்முன்னே விரிகிறது. மொரார்ஜி தேசாய் தங்கக்கட்டுப்பாடை திடீரென கொண்டு வருகிறார். தேவதாசி தடைச்சட்டம் அமுலுக்கு வந்து இருபது ஆண்டுகள் ஆகாத நிலையில் தங்கமும் வைரமும் புழங்கிய வீடுகளில் ஏழ்மை வந்து வரவேற்பறையில் உட்கார்கிறது. வடநாட்டு சேட்டுகள் தமிழ்நாட்டின் தென்கோடியில்
இடங்களை வாங்குகிறார்கள். அறுபதுகள் ஒரு கலாச்சாரம் மாற ஆரம்பிப்பதன் தொடக்கம். அலைபேசி போல் சட்டென்று ஒரு மாற்றத்தை மக்களிடம் கொண்டு வராமல், சினிமா கொஞ்சம்கொஞ்சமாகக் கொண்டு வந்தது.
கலாப்ரியாவின் கவிதைகள் காவிரியாற்றின் பாய்ச்சல் என்றால், அவரது புனைவுலகம் தாமிரபரணியின் மிதமான ஓட்டம். நெல்லை வட்டார வழக்கில் கிட்டத்தட்ட மறந்து போன சொலவடைகளுடன், ஆர்ப்பாட்டமின்றி நகரும் கதையின் மூலம் தென்தமிழ் நாட்டின் அறுபதுகளின் வாழ்க்கையை மீட்டுருவாக்கம் செய்கிறார். கதையில் நடமாடும் பாத்திரங்கள் எல்லோருக்குமே இதற்கு முன் நாம் எங்கோ பார்த்த சாயல்.
சிக்கலான குணாதிசயக் கதாபாத்திங்கள் சுந்தராம்பா, கண்ணம்மாவை விட்டுவிடுவோம். எளிதான கதாபாத்திரங்கள் வேம்பு மற்றும் வள்ளி. வேம்பு நல்லெண்ணெய் தலையில் வைப்பதில் ஆரம்பித்து, கண்ணம்மாவுடன் இரவுக்காட்சி முடிந்து வருகையில் சொல்வது, கிணற்றில் இருந்து தூக்கிவிட்டவன் வேண்டுமென்றே எல்லா இடத்திலும் தொட்டான் என்று உறுதியாக நம்புவது என்று இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிறந்த தமிழ்பெண் வடிவம்.
வள்ளி அடுத்த தலைமுறை. ஆசையும் அச்சமும் கலந்த கலவை. அவள் போன்ற பெண்களே இந்த அலைபேசியுலகில் எளிதில் ஏமாறுவது.
அறுபத்து நான்கில் தொடங்கி அறுபத்தைந்தில் முடியும் நாவல் இது. எந்த கதாபாத்திரமும் முழுதும் நல்லவர்களாகவோ அல்லது முழுதும் கெட்டவர்களாகவோ வரவில்லை. தனுஷ்கோடி புயல் போன்ற வரலாற்று நிகழ்வுகளும் பதிவாகி இருக்கின்றன.
நாவல் என்பதே புனைவு எனும் முயலைத் துரத்தி, துளைக்குள் விழுந்து, கதை என்னும் திரவத்தைப்பருகி, வேறொரு உலகத்தில் புகுவது தானே!
மாக்காளை ஐம்பது வருடங்களுக்கு முந்தைய கலாச்சாரத்தை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி என்ற வகையில் வித்தியாசமான நாவல். மாக்காளை அசை போடுதல் போல காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்து நினைவுகளை அசைபோடுகிறார் கலாப்ரியா. உரையாடலை விட நனவோடை உத்தியில் அதிகம் நகரும் கதை. வள்ளியிடமிருந்தோ, வடிவிடமிருந்தோ அல்லது வேறு யாரிடமிருந்தேனும் இந்தக் கதையை மீண்டும் ஆரம்பிக்க முடியும். பக்க அளவில் நாவல்கள் முடிந்து விடுகின்றன. கதைகள் எப்போதும் முடிவதில்லை. கலாப்ரியாவிடம் சொல்லாத கதைகளும் ஏராளம் என்றே தோன்றுகிறது. அடுத்த நாவலுக்கு அதிகம் காத்திருக்க வேண்டியதில்லை.
பிரதிக்கு:
சந்தியா பதிப்பகம்
முதல் பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.300.