ஆசிரியர் குறிப்பு:
திருச்சி உத்தமர் கோவிலில் பிறந்தவர். வேதியல், தத்துவம் இரண்டுமே முதுகலையில் படித்து, இரண்டிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். நாரணோ ஜெயராமன் கவிதைகள் கசடதபற
முதலிய பத்திரிகைகளில் வந்திருக்கின்றன.
க்ரியா மற்றும் டிஸ்கவரி பேலஸ் வெளியீடுகளாக அவரது கவிதைத் தொகுப்புகள் வந்துள்ளன. 1970களில் எழுதுவதை நிறுத்திய நாரணோ ஜெயராமனின் முதல் சிறுகதைத் தொகுப்பு, இப்போது, அவரது எழுபத்தாறாவது வயதில் முதன்முதலாக வெளியாகிறது.
ஒன்பதுகதைகள் கொண்ட சிறிய தொகுப்பு. எல்லாக் கதைகளுமே எழுபதுகளில் எழுதப்பட்ட கதைகள், கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் ஆகியிருக்கின்றன. நாரணோ ஜெயராமனின் கதைகள் ஒரு சின்ன விசயத்தை மையமாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கின்றன. புதிதாக பூட்ஸ் வாங்கியவன், உளரீதியாக, உடல்ரீதியாக சற்றே பாதிக்கப்படுவதைச் சொல்வதைப் போல, அநேகமாக எல்லாக் கதைகளுமே பாரம்பரியக் கதைசொல்லல் இல்லாது பிரச்சனைகளைச் சொல்லும் கதைகள்.
எல்லாக் கதாபாத்திரங்களுமே ஆண்கள். எப்போதும் ஒரு பதற்றத்துடன் அலைகிறார்கள். எல்லோருக்குமே Indecision தான் பிரச்சனையாக இருக்கிறது. பக்கத்து வீட்டுப்பெண்ணின் முகம் பார்க்க விரும்புகிறவன் அதற்குரிய யத்தனங்கள் எதையும் மேற்கொள்ளாது குரலை மட்டுமே கடைசிவரை கேட்கிறான். பேருந்தில் நெரிசல் இருக்கையில் சிரமப்பட்டு உட்கார்ந்திருப்பவன் எழவேண்டும், எழ வேண்டும் என்று அவனுடைய நிறுத்தம் வரும் வரையிலும் எழாமலேயே இருக்கிறான். இது போன்ற முடிவெடுக்கத் தடுமாறுவதே இவர்கள் வாழ்க்கையில் பெரிய நிம்மதியின்மையை ஏற்படுத்துகிறது. இந்தக்கதைகள் அது குறித்தே பேசுகின்றன.
எந்தக் கதையிலும் துர்குணம் கொண்ட கதாபாத்திரங்கள் இல்லை. காதல் இல்லை, அதனால் தோல்வியும் இல்லை. நேரடியாக அப்புறம் என்ன நடந்தது என்று கேட்கும்படியான கதைசொல்லல் இல்லை. ஒரு பிரச்சனையை மையப்படுத்தி அதன் விளைவாக வரும் அகநெருக்கடிகளைச் சொல்லும் கதைகள். வாசிகள் போலவே பல கதைகளில் புறவர்ணிப்புகள், காட்சிகள் மூலம் கதைகள் நகர்கின்றன. இவருடைய கதைகள் தனி பாணி. எதுவாகினும் முதல் தொகுப்புக்கு ஐம்பது வருடங்கள் காத்திருப்பது என்பது ஒரு நியாயமான விசயமாகத் தோன்றவில்லை.
சிறுகதைகள்
பிரதிக்கு :
அழிசி பதிப்பகம் 70194 26274
முதல்பதிப்பு செப்டம்பர் 2021
விலை ரூ. 110.