Sarr, Diourbel, Senegalல் பிறந்தவர். பின்னர் படிப்புக்காக பிரான்ஸில் குடியேறியவர். மூன்று நாவல்களையும், பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். முதல் நாவலான இந்த நூல் பலத்த பாராட்டையும், செவாலியர் விருதையும் இவருக்குப் பெற்றுத் தந்தது. 2021ல் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது.

சமீபகாலத்தில் புலம்பெயர்ந்த ஆப்பிரிக்கர்களின் கொடி பறக்கிறது. ரஸாக் நோபல் பரிசைப் பெற்று சிறிய இடைவெளியில் இவருடைய சமீபத்திய நாவலுக்கு பிரான்ஸின் ஞானபீட விருதான 2021க்கான, Prix Goncourt Awardஐ பெற்றிருக்கிறார். 1903ல் இருந்து வழங்கப்படும் இந்த உயரிய விருது, பரிசுத்தொகையால் கறைபட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தினால் வெறும் 10 Euroஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைப் பெறும் முதல் ஆப்பிரிக்கர் இவரே.

Kalep என்ற கற்பனை நகரத்தில் நடக்கும் கதை. இஸ்லாமியத் தீவிரவாதம் மற்றும் Moral Policing உச்சத்தில் இருக்கும் நகரம். நாவலின் ஆரம்பமே, பதினெட்டு வயதுப் பெண்ணும், இருபது வயது ஆணும் திருமணபந்தம் இல்லாது உறவில் ஈடுபட்டார்கள் என்று நிர்வாணமாக அடித்து அழைத்து வரப்படுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் முன்னிலையில், Brotherhoodன் தலைவன் மரணத்தண்டனை விதிக்க, நகர மக்களின் ஆரவாரத்தோடு, காதலர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இது அடிக்கடி நிகழும் நிகழ்ச்சி. மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் கொலை. ஆனால் இந்தக் கொலை எப்போதும் போல குடும்பத்தினரால் மறக்கப்பட்டுப் போகப் போவதில்லை. காதலர்களின் தாயார் இருவரும் அவர்கள் உணர்வை இரகசியக் கடிதங்கள் மூலம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிறார்கள். அத்துடன் மனிதாபிமானத்தில் நம்பிக்கை கொண்ட எழுவர் அணி Brotherhoodக்கு எதிராகத் திட்டங்கள் தீட்டத் தொடங்குகிறது.

ஒரு பெண் விபச்சாரி எனக் குற்றம் சாட்டப்பட்டு, இடுப்புவரை புதைக்கப்பட்டு, ஊர்மக்களால் கல்லால் அடிக்கப்பட்டுக் கொல்லப்படுகிறாள். வீட்டில் இருக்கும் முதியவள், தலையைத் துணியால் மூடவில்லை என்று சவுக்கால் விளாசப்படுகிறாள். இருபத்தைந்து வருடமாக, தரையில் மயங்கி விழும் வரை அடிக்கும், கணவனை விட்டு மனைவியால்
விலக முடிவதில்லை. பெண்களுக்கெதிரான இது போன்ற குற்றங்கள் இதுபோன்ற புனைவில் வருவதை விட, அரபுப் பெண் எழுத்தாளர்களின் உண்மைக் கதைகளில் அதிகம் இடம்பெறுகின்றன.

Islamic Fundamentalists பற்றிய நாவல் மட்டும் அல்ல இது. ஒருபுறம் குடும்ப உறவுகள், குறிப்பாக அப்பா-மகன் உறவு கேள்விக்குள்ளதாகின்றது. இன்னொரு பக்கம் எது சரி Radical Islam or Moderate Islam என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அகவாழ்ராய்ச்சியில் பண்டைய நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டதும், சர்வதேச நிறுவனம் அதை World heritage site ஆக அடையாளப்படுத்தியதும், மக்கள் பெருமை கொள்கிறார்கள். ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய புத்தகங்கள் எரிக்கப்படுகின்றன. யார் மிகக் கொடூரமானவனோ அவன் நட்பை நாம் சொல்லும் கற்பைப் போல் மனதில் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்கிறான். இது போல் இன்னும் எத்தனையோ கிளை நதிகள் பிரிந்தும் நாவல் கட்டுக்கோப்பை இழக்காது சீரான ஓட்டத்தில் செல்கிறது.

Sarrன் நாவலில் கதாபாத்திரங்களின் உரையாடல் சில நேரங்களில் தத்துவார்த்தமாக, சில நேரங்களில் ஆன்மீகமாக, சிலநேரங்களில் உண்மைச் சம்பவத்தை நாம் நேரில் பார்ப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. 1990ல் பிறந்தவர், இந்த நாவலை 2015ல் எழுதியிருக்கிறார். எனில் 25 வயதில் எழுதிய நாவலில் இவ்வளவு முதிர்ச்சி ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த நாவல் Goncourtன் சிறந்த முதல் நாவலுக்கான பரிசை வென்றது.
Sarrன் புதிய நாவலான La Plus Secret Mémoire des hommes அவர் விருதைப் பெற்ற செய்தியைக் கேட்டதுமே எல்லாப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்ததால் மீண்டும் 300,000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. Sarrன் எல்லா நூல்களும் ஆங்கிலத்தில் வருகையில், அவர் நிச்சயமாக உலக வாசகர்கள் மத்தியில் ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார். La Plus Secret Mémoire des hommes குறித்து, அனைத்து Reviews மற்றும் உலகப் புத்தகக்குழுக்களில் சிறப்பான நூல் என்ற தகவல்கள் பரிமாறப்படுகின்றன. யாரேனும் பிரெஞ்சில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தால் நாம் ஆங்கிலத்தில் மற்றவர்கள் படிக்கும் முன்பே படித்து விடலாம் இல்லையா?

English

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s