குறுகிய இடைவெளியில் வெளியான இரண்டாவது நாவல். Double நாவல் தஸ்தயேவ்ஸ்கியைப் பொறுத்தவரையில் ஒரு சூதாட்டம். நல்ல பாராட்டைப் பெற்ற முதல்நாவலுக்குப்பின் பரிட்சார்த்தமான நாவலிது. அடிப்படையில் தஸ்தயேவ்ஸ்கி ஒரு சூதாடி. சூதாட்டத்தில் மட்டுமே குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க முடியும் என்று நம்பிய தஸ்தயேவ்ஸ்கி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் சூதாட்டத்தில் ஈடுபட்டார். ஒருமுறை இளம் மனைவியின் திருமணமோதிரத்தை வைத்தும் சூதாடித் தோற்றிருக்கிறார். பின்னர் ஒருநாள் திடீர் ஞானோதயத்தில், தேவாலயத்தைத் தேடிச்சென்றவர், இருட்டில் வழி தவறி, யூதர்கள் வழிபாட்டு ஆலயம் முன் சென்ற உடன் முகத்தில் குளிர்ந்த நீரை யாரோ வீசிஅடித்தது போல் உணர்ந்திருக்கிறார். அதன்பிறகு அவர் வாழ்க்கையில் சூதாடவில்லை.
Double முதல் நாவல் சென்ற பாதையான Realismல் இருந்து விலகியது. முதல் நாவலை
பெரிதும் பாராட்டிய Belinskyயின் கடுமையான விமர்சனத்தை தஸ்தயேவ்ஸ்கி இந்த நாவலுக்காக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பின்னாளில் தனது நாட்குறிப்பில் தஸ்தயேவ்ஸ்கி, இது ஒரு நல்ல தீம் என்றும் நாவல் வடிவத்தில் தோல்வி அடைந்ததாகவும் எழுதியிருந்தார்.
இது இவரது முக்கிய நாவல்களில் ஒன்றாக எப்போதும் குறிப்பிடப்பட்டதில்லை, நாவல் வெளியான போதும் ருஷ்ய இலக்கிய வட்டாரத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்த நாவல் இது.
கீழ்நிலையில் பணிசெய்யும் ஒருவனது Ego அவனை எங்கே கொண்டு செல்கின்றது என்பதே இந்த நாவல். Golyadkin வறுமையில் தவிக்கவில்லை, நிரந்தர வேலையிருக்கிறது. ஆனால் அலுவலகத்தில், நண்பர்கள் மத்தியில் பெரிதாக அவனுக்கு மரியாதையில்லை. அவனது வேலைக்காரன் அவனை ஏமாற்றுகிறான். வர்க்கநிலையில் பின்தங்கி இருப்பதால் தான் தனக்கு இது நேர்கிறது என்று தன் சக்திக்கு மேல் தன்னைக் காட்டிக்கொள்வதும், உயரதிகாரியின் பெண்ணின் மனம் கவரும் முயற்சிகளிலும் ஈடுபடுகையில் அவனைப் போலவே அச்சுஅசலாக இருக்கும் ஒருவன் இவன் வாழ்க்கையில் நுழைகிறான்.
காலத்திற்கு முன் எழுதப்பட்ட நாவல் இது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல்பாதியில் வெளிவந்த நாவலில் Split personalityஐ ஒருவன் உருவாக்கிக் கொள்வது எத்தனை பேருக்குப் புரிந்திருக்கும்? அதே போல் பல சம்பவங்கள் இவனுடைய கற்பனை என்பது நல்ல வாசிப்பனுபவம் இல்லாத வாசகர்கள் இன்றைய தேதியில் புரிந்து கொள்வதும் கடினமே. உதாரணத்திற்கு Klaraவின் கடிதம் முழுவதும் படிக்கிறான், அவளுடன் ஊரைவிட்டு ஓட அவள் சொன்ன இடத்திற்கு வாடகையூர்தி எடுத்துக்கொண்டு சென்று மணிக்கணக்கில்
கடுங்குளிரில் காத்திருக்கிறான். அவள் வரவில்லை. கோட்பைக்குள் கைவிட்டுப் பார்த்தால் அந்தக் கடிதமும் இருப்பதில்லை. எல்லாமே இவனுடைய கற்பனை. அதை அவன் நிஜம் என உறுதியாக நம்புகிறான். இது போல் பல சம்பவங்கள். எந்த இடத்திலும் இது உண்மை அல்லது மனப்பிறழ்வு என்று தஸ்தயேவ்ஸ்கி விளக்கம் சொல்வதில்லை.
Golyadkinஆல் என்னவெல்லாம் செய்ய முடியவில்லையோ அதை எல்லாம் Double செய்கிறான். மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுகிறான். பெண்களைக் குறித்து Comment செய்கிறான். பணத்தைப் பற்றிக் கவலைப்படாது பத்து Pies சாப்பிடுகிறான். அவன் மட்டும் சிறிதுகாலம் முன்பு தோன்றியிருந்தால், யார் கண்டது ஒருவேளை Klara அவனைக் காதலித்திருக்கவும் கூடும். ஆனால் Golyadkinக்கு ஏனோ அவனை அப்படியே உயிர்ப்புடன் வைத்திருக்கப் பிடிக்கவில்லை.