தஸ்தயேவ்ஸ்கி சைபீரிய சிறைத் தண்டனையை முடித்து விட்டு வந்த பிறகு முதலில் எழுதிய நூல் இது. Jeffrey Archer நான்கு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அதில் பாதியும் முடிக்காது விடுதலையானார். சிறையில் பல பிரபலங்கள் அவரைச் சந்தித்தனர், ஆக அது ஒரு வீட்டுச்சிறை போன்ற அனுபவம். அதற்கே அவர் Prison Diaries மூன்றுபாகமும், ஒருசிறுகதைத் தொகுப்பும் சிறை அனுபவத்தை வைத்து எழுதினார். தஸ்தயேவ்ஸ்கி கடுமையான சிறை அனுபவம் முடிந்து வந்ததும் எழுதிய இந்த நாவல், அவரது வார்த்தைகளில் சொன்னால் ஒரு Comical novel. அதனால் தஸ்தயேவ்ஸ்கியைப் புரிந்து கொள்வது என்பது எளிதான விசயமல்ல. பின்னாளில் தன் சிறை அனுபவங்களை Idiotல் ஒரு பகுதியாக, House of Dead ல் பெரும்பங்காக எழுதினார். அவரது நாட்குறிப்பிலும் அந்த அனுபவங்கள் வருகின்றன.
வாழ்வு எவ்வளவு குறுகியது, அநித்யமானது,
கணிக்க முடியாதது என்பதும், மனிதர்களின் அளவுகடந்த ஆசைகள் விதியின் முன்னால் நீர்க்குமுழி வெடித்து மறைவதைப் போலக் கரைவதையும் சொல்லும் நாவல். உரையாடல்களில் தஸ்தயேவ்ஸ்கியின் வழமையான நடைக்கு மாறாக மெல்லிய நகைச்சுவை இருந்தாலும் இது Comical Novel அல்ல. அடுத்தடுத்து வரும் சம்பவங்கள் உங்களை சிரிக்க வைத்தாலும், போகப்போக நீங்கள் அறியாமலேயே உங்கள் சிரிப்பு மறைந்து முகம் இறுகுகிறது. உடலின் ஒவ்வொரு பாகத்தையும் வேறுவேறு காதலில் இளவரசர் இழப்பதும், வயோதிகத்தில் ப்ரக்ஞைக்கும், மயக்கநிலைக்கும் மாறிமாறிப் போய் வருவதும் ஒருவருக்கே நேருமெனில் நாம் இந்த உலகில் எதைத்தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்?
Maria Alexandrovna மற்றும் Prince இருவரது கதாபாத்திரங்கள் தஸ்தயேவ்ஸ்கியின் Master touch. Gossip என்பது அன்றைய ருஷ்ய சிறுநகரத்தில் எப்படி இருந்தது, சாதாரண மக்களின் வாழ்வு, குறுக்குவழியில் மேல் வரத்துடிப்பது என்பது ருஷ்யாவிற்கோ அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கோ மட்டும் சொந்தமில்லாது, எல்லா நாடுகளுக்கும், எல்லாக் காலங்களுக்கும் பொருந்தக்கூடியது.
பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம், சிலநேரங்களில் பணத்தைக் குறிவைத்து நடப்பதும் எல்லா நாடுகளிலும் நடப்பது. மகள் நான்கு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம் என்று காரணம் சொல்வார்கள்.
தஸ்தயேவ்ஸ்கி தான் எழுதியதில் மோசமானது என்று இந்த நாவல் குறித்து நாட்குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார். மாஸ்டரின் மோசமான நாவலையும், எழுதி நூற்று அறுபது வருடங்கள் கழித்து உண்மையிலேயே ரசித்துப்படித்தேன். எவ்வளவு நுட்பம் இவர் எழுத்தில்! தஸ்தயேவ்ஸ்கியின் கதைகளிலேயே அதிகம் மேடையேற்றப்பட்ட நாடகம் Uncle’s Dream தான். இருநூறு வருட நிறைவுக்கு உலகின் பலபகுதிகளில் நடத்தப்பட்டது. தஸ்தயேவ்ஸ்கியின் பெண்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதப் பலவருடங்களாக ஆசை. ஆனால் அது பிரிய தஸ்தயேவ்ஸ்கிக்கு செய்யும் துரோகமாக முடியும் என்பதனால் அதை அடக்கிக்கொள்ள வேண்டியதாகிறது.