தஸ்தயேவ்ஸ்கியை இதுவரைப் வாசிக்காதவர்களுக்கு நான் முதலில் பரிந்துரை செய்யும் நாவல் (உண்மையில் இது நீண்ட சிறுகதை) இதுவே. தமிழிலேயே இந்த நாவலை, மூன்று பேருக்கு மேல் மொழிபெயர்த்தது மட்டுமன்றி, கிளாஸிக் பதிப்பாகவும் வெளிவந்துள்ளது. இப்போதும் Kindleல் இலவசமாகக் கிடைக்கிறது. ஒரு கனவுலக சஞ்சாரிக்கும், காதலில் தோல்வியுற்ற பெண்ணுக்கும் வளரும் சிநேகிதமே கதை.
நான்கு இரவுகளில் நடக்கும் கதை இது. தஸ்தயேவ்ஸ்கியின் முழுமையான Romance Novel இதுவே. இரண்டு அந்நியர்கள் மெல்லமெல்லக் காதலில் விழுவதற்கு சந்தர்ப்பம் அமைத்துத்தரும் நெருக்கம் மட்டுமே வேண்டியதாய் இருக்கிறது.
முதல் இரவில் அந்நியர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து அறிந்து கொள்கிறார்கள். இரண்டாம் இரவில் ஒரு நெருக்கம் உருவாகுகிறது. மூன்றாவது, நான்காவது இரவுகளில் அவன் காதலில் 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் பொழுது அவள் ஐம்பது கிலோமீட்டரில் பயணம் செய்கிறாள்.
நான்கு இரவு முடிந்து வரும் பகல் அதையே நிரூபிக்கிறது.
ஒரு Dreamer St.Petersperg தெருக்களில் இலக்கில்லாமல் சுற்றித் திரிவதும், பின் அவளைச் சந்திப்பதும், அவள் கதையைக் கேட்பதும், முதலில் தோன்றும் இரக்கம் பின் காதலாய் மாறுவதும் நிதர்சனத்தை விட்டுக் கொஞ்சமும் விலகாது கவிதை போல் விரிகிறது. காதலனுக்குக் கடிதம் அனுப்புவது கூட கதைசொல்லியின் குணாதிசயத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. தஸ்தயேவ்ஸ்கியின் அனைத்து நாவல்களிலுமே கதாநாயகன் Happy go lucky ஆக வருவது இந்த நாவலில் மட்டும் தான்.
Nastenka வின் கதாபாத்திரம். Oh boy! எத்தனை ஆயிரக்கணக்கான வருடங்களாக இது நடந்து வருகிறது. அவளுடைய எந்தக் காதல் Infatuation அல்லது எந்தக் காதல் Calculative? Nastenka புத்திசாலியும் இல்லை. முட்டாளும் இல்லை. பாட்டியிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியா வாடகைக்கு இருப்பவனிடம் நெருங்கியது? காதல் தோல்வி தரும் வேதனையில் இருந்து தப்பிக்கவா இந்தக்காதல்? எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும் Nastenkaவை சந்தர்ப்பவாதி என்று தூற்ற மனம் வரவில்லை. ஆடு மேய்ப்பனை நம்பாமல் கசாப்புக்கடைக்காரனை நம்புவது அதன் இயல்பு. அதற்காக நாம் தூற்றி என்னவாகப் போகிறது. ஆனால் சில மாதங்கள் இடைவெளியில் வெளிவந்த Wuthering Heights கதாநாயகனுக்கும், White Nights கதாநாயகனுக்கும் எவ்வளவு வித்தியாசம்!
இருவருக்கும் அவர்கள் செயலைக் காதலே தீர்மானிக்கிறது. காதல் ஒரு திரவம் போலிருக்கிறது, பாத்திரத்திற்குத் தக்கத் தன் வடிவத்தை மாற்றிக் கொள்கிறது.
English
.