ஆசிரியர் குறிப்பு;
ஓய்வுபெற்ற ஆங்கிலப் பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூல் காஃப்கா, கால்வினோ, கான்சியுயி போன்றவர்களின் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு.
காஃப்காவின் பட்டினிக் கலைஞனுக்கும், அசோகமித்ரனின் புலிக்கலைஞனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பட்டினிக்கலைஞனை Marketing செய்வோர்,
நாற்பது நாட்கள் என்று Fix செய்ததில் ஒரு முக்கியமான பாயிண்ட் இருக்கிறது. பத்து நாட்கள் என்றால், யாருமே இருக்கமுடியும் என்றாகிவிடும். நாற்பது நாட்களுக்கு மேல் பார்வையாளரின் ஆர்வம் போய்விடும். கலைஞனுக்கு நாளாக ஆக இன்னும் இன்னும் பாராட்டு வேண்டும் என்ற அவாவும், நாளாக ஆக பார்வையாளரின் கவனம் வேறொன்றுக்குத் திரும்புவதும் எப்போதும் மாறாத விசயங்கள். கலைஞன் கடைசியில் சொல்லும் ஒருவிசயம் மொத்தக் கதையையும் திருப்பிப் போடுகிறது. மாஸ்டர் நூறுவருடங்கள் முன் எழுதிய கதை இன்றும் புதுக்கருக்கு கலையாமல்!
கால்வினோவின் கதை, நிலா பூமிக்கு அருகில் தொட்டுவிடும் தூரத்தில் இருந்த காலக்கதை. படகில் ஏறி நிலவுக்குத்தாவி பால்குழம்பை எடுத்துவருவதாகத் தொடங்கும் கதை பின் முக்கோணக்காதல் கதை ஆகிறது. கால்வினோ ஆணின் காதலுக்கும் பெண்ணின் காதலுக்குமுண்டான வித்தியாசத்தைச் சொல்ல இந்தக் கதையை பயண்படுத்துகிறார். ஆண், விரும்பிய பெண்ணின் அருகாமை, தனிமை கிடைத்ததும் வேறொன்றுக்கு ஏங்கத் தொடங்குகிறான். பெண் விரும்பியது தன்னை விரும்ப, தன்னை இழக்கவும் தயாராக இருக்கிறாள்.
I Live in the Slums என்னும் Can Xueவின் தொகுப்பு இந்த வருட புக்கர் பட்டியலில் இடம்பெற்றது.அதில் வந்த ஒரு கதையே தலைப்புச் சிறுகதை. Xue எழுத்தில் பரிசோதனை செய்பவர். ஒரு Odd friendshipஐ Superficial layer கலந்து சொல்லும் கதை க்ரோ மவுன்டன். ஒவ்வொரு முறையும் நோபல் பட்டியலில் இடம்பெறும் பெயர்களில் ஒன்று Can Xue. Sarrன் சிறுகதை ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது. Sarr அவரது Brotherhood நாவலுக்காக பிரான்ஸின்உயரிய இலக்கிய விருதைப் பெற்றவர்.
தொகுப்பாகக் கதைகளைக் கொண்டுவரும் பொழுது, அவை ஒரே தரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது முக்கியம். முகம்மது அல் முர் கதை, மங்கையர்மலர் கதைகளின் ரகம். இதை ஆரம்பிக்கும் போதே முடிவு தெரியும், அதைத் தாண்டி ஒன்றுமில்லை. சிந்தியா டானியல் எழுதிய குப்பையை மொழிபெயர்ப்பது இவரது விருப்பம், ஆனால் காஃப்கா, கால்வினோ கதைகளுடன் இதுவும் தோளுரசி நிற்கும் போதுதான் நாம் கேள்வி கேட்க வேண்டியதாகிறது. இலக்கியம் ஏன்றால் என்னவென்றே தெரியாது கதை எழுதும் சிந்தியா போன்றவர்கள் நாளிதழ் தலைப்புச் செய்தியைப் பார்த்த அடுத்தநிமிடம் கதை எழுதுபவர்கள். அதே போல் இலங்கை எழுத்தாளரின் காமன்வெல்த் பரிசுக் கதையை இருவருக்கும் மேல் மொழிபெயர்த்து, பத்திரிகைகளில் வந்து விட்டன. ஒரு கதையை எத்தனை பேர் வேண்டுமானாலும் மொழிபெயர்க்கட்டும் ஆனால் பலர் மொழிபெயர்த்த கதை ஒன்றை தன் பதிப்பக நூலில் சேர்ப்பதில் பதிப்பகத்தார் கண்டிப்பு காட்ட வேண்டும். தமிழில் எடிட்டர் இல்லாத குறை பூதாகரமாகத் தெரிகிறது. அதே போல் எழுத்துப்பிழைகள். ” முரட்டுத்தனமாக அரைந்தாள்” என்றால் Smack என்பதற்குப் பதிலாக பாலியல் சம்பந்தப்பட்ட ஒன்று என்ற விபரீதக் கற்பனைக்கு வாய்ப்பு இருக்கிறது.
மேற்குறிப்பிட்ட குறைகளைத் தாண்டி, காஃப்கா, கால்வினோவின் புகழ்பெற்ற கதைகள் இந்தத் தொகுப்பில். அத்துடன் Can Xue,, Mohamed Mbougar Sarr போன்ற Contemporary writersன் கதைகளும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழில் மட்டுமே படிப்பவர்களுக்கு இவர்கள் இருவருமே சிறந்த அறிமுகம். வின்சென்டின் மொழிபெயர்ப்பும் தெளிவான, திருத்தமான மொழிபெயர்ப்பு. காப்புரிமை இல்லாததால் ISBN இல்லை. ISBN இல்லாததால் Goodreads கணக்கில் சேராது. இருந்தாலும் சிறந்த எழுத்தாளர்களைத் தாய்மொழியில் வாசிக்கும் ஆனந்தம் ஒன்றிற்காகவே படிக்கலாம்.
பிரதிக்கு:
கடல் பதிப்பகம் 86808 44408
விற்பனை உரிமை தமிழ்வெளி 90940 05600
நவம்பர் 2021
விலை ரூ.140.