ஆசிரியர் குறிப்பு:
கன்னியாகுமரியில் பிறந்து கோவையில் வசிப்பவர். கிராமப்புற மாணவர்களுக்கான கல்விப்பணியில் இருப்பவர். மூங்கில் என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்துள்ளது. இது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.
ஜெயமோகனின் அதே வட்டார மொழி, அமானுஷ்ய சாயல், Open ending முதலிய ஒற்றுமைகள் இருந்தாலும் சுஷில் குமாரின் மொழிநடை தனித்துவம் வாய்ந்தது. அது போலவே இவரது கதைகள் மையக்கருவைச் சுற்றியே நகர்பவை. ஜெயமோகன் பல விசயங்களைக் கதையில் நுழைத்திருப்பார்.
“இவளுக்க உருட்டக்கம் ஒருநாளும் ஓயாது போலல்லா இருக்கு. செரியான ஓட்ட கையாக்கும்” என்று அப்பா சொல்கையில் அது காதலினால் என்பதை நம்மால் உணர முடிகிறது. அதுவே மிகப்பெரிய வித்தியாசம்.
சப்தா வர்ணம் போன்ற கதைகளிலேயே சுஷில் குமாரின் கலைநுட்பம் அதிகபட்சம் வெளிப்படுவதாக, நான் நம்புகிறேன். அதிர்ச்சி மதிப்புக்காக எழுதும் கதைகளில் இருந்து விலகி, அதிர்ச்சியை வாசகர் தலை முதல் பாதம் வரை செலுத்தி ஸ்தம்பிக்க வைக்கும் கதை. இலக்கியம் படித்து முடித்ததும் மறைந்து விடுவதில்லை. இந்தக் கதையை படித்தபின் காதுகளில் ஒலிக்கும் ஏன் ஏன் ஏன்களை கவனிக்காது கடக்க முடிவதில்லை. பாப்பாத்தி ஏன் சுப்பிரமணியை இப்போது நினைக்கிறாள்? மாசிலாமணி இந்தக் குடும்பத்தோடு சம்பந்தப்படப் போகிறான் என்று முதலில் தெரியாமல் தனியாக ஒரு கதை நகர்வதும் பின் அடுத்த தண்டவாளத்தில் இரயில் திடீரென்று சேர்வது போல கதையில் இணைவதும். Shirley Jacksonன் Lotteryல் இருக்கும் Global தன்மை இந்தக் கதையிலும் இருக்கிறது. நல்ல மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்தால் சிறந்த கவனத்தை உலக அரங்கில் பெறக்கூடிய கதை.
சௌவாலிகா போன்ற கதைகளே என்வரையில் சுஷில்குமார் தவிர்க்க வேண்டியது. அமானுஷ்யம் போல் இருப்பதும் இல்லாமல் இருப்பதும், ஒருவர் நம்புவதும் மற்றவர் நம்பாமல் இருப்பதும் என்ற Templateல் இருந்து வெளிவர சுஷில் முயல்வதில் தவறில்லை. ஆனால் இது போன்ற கதைகள் சரித்திரத்தில் பாதியை எடுத்து, புனைவின் வலுவின்றி நிவர் போலவே சோர்ந்து விழுகின்றன. அமானுஷ்ய சாயலே இல்லாத யூதாஸ், சிப்பி போன்ற கதைகளுமே நன்றாக வந்திருக்கின்றன.
பன்னிரண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. அநேகமாக எல்லாமே இணைய இதழ்களில் வந்தவை. இரண்டு கதைகளைத் தவிர எல்லாக் கதைகளுமே, நுட்பமும், கலையழகும் கூடியவை. பெண்களின் வேதனைகளை இவர் எழுத்தில் நுணுக்கமாகக் கொண்டு வருகிறார். (தோடுடையாள், மந்தாரம், மண்ணுள் உறைவது, சப்தா வர்ணம்). வட்டார வழக்கு உரையாடல்கள் இவர் கதைகளுக்கு சிறந்த பலம். “பின்ன இன்னிக்கு வந்து சாமியப் பாத்தா, தாலிபாக்கியம்னு சும்மாவா சொல்லி வச்சிருக்கானுகோ”. முன்னும் பின்னும் நகர்த்தி, திரைக்கதை போல் எடிட் செய்த சிப்பி கதையும் நன்றாக வந்திருக்கிறது. எந்தவித Biasம் இல்லாது, எதிர்கால நம்பிக்கை என்று பத்துபேரைத் தேர்ந்தெடுத்தால் அதில் சுஷிலும் ஒருவர்.
பிரதிக்கு:
யாவரும் பதிப்பகம் 90424 61472
முதல் பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 200.