ஆசிரியர் குறிப்பு:
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அக்கறைப்பற்றை பிறப்பிடமாகக் கொண்ட சப்னாஸ் ஹாசிம், கவிஞராகவும் எழுத்தாளராகவும் தனது இலக்கிய ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார். பின் நவீனத்துவ இயங்கியலிலும் குறிப்பாக அபுனைவுகளில் ஆர்வம் காட்டி வருகின்றார். எழுத்தாளுமைகளை மீள் வாசிப்பு செய்து ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.
ஏற்கனவே ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்ட இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது.
சப்னாஸின் கவிதைகள் வித்தியாசமானவை. புறக்காட்சிகளில் திரியாது, அகத்தின் ஆழத்தில் இருக்கும் உணர்வுகளை வார்த்தையில் வடிக்க முயல்பவை. வார்த்தைக்காக தவம் இருக்கும் மத்தியில் இவர் வார்த்தைகளை வஞ்சிக்கப் பழகுபவர். புதிய சொற்களைத் தேடித்தேடிக் கொண்டு வந்து கவிதைக்குள் சிறைவைப்பது நல்ல கவிதையா!
” கொடூர பரவசக்காரனாய்
என் உணர்கொம்புகளில்
புதுச்சொற்கள் பளபளத்தன
கவிதைகளில் எனக்கு
கண்களைமூடி நடக்கின்ற பழக்கமிருக்கிறது.
தட்டுப்படும் சொற்களை
நான் வஞ்சித்தேயாக வேண்டும்.”
காதலில் தர்க்கம் கிடையாது. சரணாகதியே காதல். ஐந்து ரூபாய் ஆரஞ்சுமிட்டாய்க்கு ஐயாயிரத்தைத் தயங்காமல் கொடுத்து வாங்காதவர்கள் காதலால் சபிக்கப்பட்டவர்கள். மாலை ஆறு முதல் ஏழு வரை காதலிக்கலாமா என்று நேரக்கவனம் கொண்டவர்களைக் காதல் தன் முதல்எதிரி என்று அடையாளம் கண்டு கொள்ளும்.
” குறுக்குவெட்டில் ஊடும்பாவுமாக
காதலின் தத்துவம்
என்னில் முரண்படுகிறது.
காதலின் தர்க்கவடிவத்திலிருந்து
ஓர்மையான உணர்வொழுங்கு
என் காதலுக்கு இருந்தது அல்லது
உணரப்பட்டது
எனவே திட்டவட்டமான காதல்
என்னிலிருந்து பிடுங்கப்பட்டது”
அக்மார்க் காதல் கவிதைகளும் தொகுப்பில் இடையிடை வருகின்றன. “நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா?”
“எனக்கு சுடும்போதெல்லாம்
தவழ்ந்து வந்து
நீரூற்றும் உன் உருவம்
ஒரு கருவிலேற்றும் புதிய
நாளங்களைப் போல
படர்ந்திரையும் மூச்சொலிக்கும் சொல்
உன் வாஞ்சை வெளியினில்
தத்திக்கோடு கீறும் என் மனம்”
கற்பனையாய் ஒரு Alter egoவை உருவாக்கி நிதர்சனத்தில் இருந்து தப்புபவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்கு அச்சமில்லை,தோல்வியில்லை, துன்பமில்லை, எல்லாம் சுகமே.
“வானத்தின் சுயபிம்பமாய்
எனக்கு முன்னால்
இன்னொரு சிறிய நான்’ஐ
நடக்கவிடுகிறேன்
கொன்றுண்ணிகளை
அவன் அணைத்துக்கொள்கிறான்
அவனுக்கு அச்சமில்லை
தோழிகளில்லை
பசி இல்லை
முன் குவியும்
எந்தச் சிரிப்புமில்லை
அவனுக்குப் பின்னால்
எனது எல்லா இயலாமைகளையும்
சிறிய அவனின்
உருமாறிய நிழலில்
ஒளித்து வைக்கிறேன்.”
பின் நவீனத்துவக் கவிதைகளில் Randomness, absurdism, fragmentation கலந்த collage styleல் எழுதுபவர்கள் தமிழில் வெகுசிலரே. இந்த Mix சரியான விகிதத்தில் கலக்காது, முழுக்க Randomness அல்லது Absurdism என்று வந்தால் கவிஞருக்கும் வாசகருக்கும் இடைவெளி அதிகமாகி, புரிதலில் பிரச்சனை உருவாகி, கவிதைகள் கைவிடப்படுகின்றன.
சப்னாஸ் பின்நவீனத்துவக் கூறுகளைத் தெளிவாகப் புரிந்து கவிதைகள் எழுதியிருக்கிறார். இவரது சிறுகதைகளைப் போலவே, கவிதைகளிலும் இவரது தனித்துவம் தெரிகிறது. நல்ல கவிதைத் தொகுப்பாக இது மலர்ந்திருக்கிறது.
பிரதிக்கு:
தாயதி, இலங்கை
விற்பனை உரிமை பாரதி புத்தகாலயம்
044-24332924
முதல்பதிப்பு அக்டோபர் 2021
விலை ரூ.100.