ஆசிரியர் குறிப்பு:
மதுரை மாவட்டம் சோழவந்தான், தென்கரையில் பிறந்தவர். விகடன் மாணவப் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தவர். தற்போது சுயாதீன பத்திரிகையாளராகவும், திரைத்துறையிலும் பணியாற்றி வருகிறார். இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இது அண்மையில் வந்த சிறுகதைத் தொகுப்பு.
நூலிலிருந்து:
” நீரினுள் போகப்போக உற்சாகமானாள். மூக்கை எக்கிக் கொண்டு நீந்தியது கன்று. எண்ண முடியாத தாமரையல்லியின் சொரசொரப்பான கொடிகள், கன்றையும், மகளையும் சுருட்டி உள்ளிழுத்தது. அவள் பயப்படவில்லை. பாதி மூழ்கியவள் எட்டத்திலிருந்த தூணைப்பற்றும் வேகத்தில் கைகளை விளாசினாள். கரையிலிருந்த கன்னிமார்களுக்கும், பறக்காத தாழக்கோழிக்கும் நடுவே மிச்சமின்றி மூழ்கினாள்.”
‘நீர்ச்சுழி’ மூலம் பரவலான கவனத்தைப் பெற்ற முத்துராசா குமார், இந்த சிறுகதைகளின் மூலம் புதிய கதையுலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார். இந்தக் கதாபாத்திரங்களுடன் நமக்குப் பரிட்சயமில்லை. மதுரை வட்டார வழக்குச் சொற்கள் கதைகளுக்குக் கூடுதல் பரிமாணத்தைக் கொடுக்கின்றன. முத்துராசாவின் மொழிநடை, மண்ணின் மணத்தை, மறந்த பலவிசயங்களை, நாட்டார் கதைக்கூறுகளை கலந்து வருகிறது.
சில எழுத்தாளர்களின் மொழிநடையை Replicate செய்வது கடினம். முத்துராசாவும் அதில் ஒருவர். இந்தக் கதைகள் முழுக்கவே நமக்கான கதைகள். நம்மைத்தவிர வேறு எந்த நாட்டினரும், இந்தக் கதைளை முழுதாகப் புரிந்து கொள்ளவோ, கதைக்குள் புகுந்து வெளிவரவோ இயலாது. முழு ஒப்பாரி கதையின் நடுவில் வருகையில், முன்பின் ஒப்பாரியைக் கேட்டிராத தமிழரும் கூட அந்த வேதனையை முழுதாக உள்வாங்குதல் கடினம்.
பாவப்பட்ட ஜனங்களின் கதைகள் இவை.
பாவைக்கூத்து அழிந்து விடக்கூடாது என்று வருமானத்திற்கு வழியில்லாமல் கலையை இறுக்கிப்பிடித்திருக்கும் தம்பதியர், வயல் எலிகளைப் பிடிக்க இடுக்கி வைத்துப் பிழைப்பைக் கழிக்கும் ஆண்டி, சோகத்தை உள்ளடக்கி நேர்த்திக் கடனுக்கு பொம்மைகள் செய்யும் தம்பதி, ஒப்பாரி, கும்மிகளை சேர்ந்தே பாடும் தோழியர் இருவர், புறாக்களுக்கு வீடு கொடுத்து அழகுபார்க்கும் அழகப்பன், அமுதலக்கு, பால்ய தோழியை வீட்டை எதிர்த்து மணமுடித்து வெளிநாடு சென்ற தர்மன், குடிகாரனுக்கு மணவயதுக்கு முன்பே வாக்கப்பட்ட அமராவதி, ஊரார் எல்லோரும் கைவிட்ட ஊரை விடாமல் தனியாகப் பிடித்திருக்கும் பூவலிங்கம் என்று எல்லோருமே வஞ்சனையில்லாத மக்கள்.
பழிபாவத்திற்கு அஞ்சி விதிகாட்டிய வழியே
மறுப்பேதும் சொல்லாது வாழ்க்கையைக் கடப்பவர்கள்.
ஒன்பது சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. சிறுகதைகளில் வாசகர்களைப் புதிய உலகத்திற்குக் கூட்டிச்செல்வது கடினம், அதை எளிதாகச் செய்திருக்கிறார் முத்துராசா. நாம் எவ்வளவு வசதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்காமல் இந்தக் கதைகளைப் படிக்க
முடியவில்லை. எளிய மனிதர்களைச் சுற்றி நடக்கும் எளிய நிகழ்வுகள் இந்தக் கதைகள்.
முத்துராசாவின் கதையுலகின் சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது. தவறவே விடக்கூடாத சிறுகதைத் தொகுப்பு.
பிரதிக்கு:
சால்ட் & தன்னறம் 89394 09893
விற்பனை உரிமை தமிழ்வெளி 9094005600
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.160.