ஆசிரியர் குறிப்பு:
இலங்கையின் அக்கறைப்பற்றைச் சேர்ந்த இலக்கியச் செயல்பாட்டாளர், கவிஞர், ஈழப் பின்நவீனத்துவ எழுத்துக்கான களத்தைக் கட்டமைத்த முன்னோடி. ஐந்து கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள், ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இது இவரது அண்மையில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்பு.
நவீனகவிதை மனம் என்ற தலைப்பில் பன்னிரண்டு கட்டுரைகள் நவீனகவிதைகள் பற்றிய கூடுதல் புரிதலுக்கு விளக்கமளிக்கிறது. முதல் கட்டுரையில் ‘கன்னியாகுமரியில்’ என்ற பசவய்யாவின் கவிதை குறித்து விளக்குகிறார். ஆட்டுக்குட்டி பார்வைக் கோணத்தை மறைப்பதை அழகுமுகம் பார்வைக்கோணத்தில் மறைபடுவதுடன் பொருத்திக் கொண்டால் கவிதை இன்னும் விளங்கும்.
கவிதையில் விளக்கம் தேவையா என்றால், இல்லை அது ஒரு அனுபவம் அல்லது தேர்வு. காலையில் காப்பியா, தேநீரா அல்லது வெந்நீரா என்பது போல. கவிஞர் தன் அக அல்லது புற அனுபவத்தை அல்லது கற்பனையைக் கவிதையில் வடிக்கையில் அத்தனையையும் அப்படியே வாசகர் வாங்கிக் கொள்வது என்பது இயலாத காரியம். விஜி என்ற பெயரைச் சொல்லலாம், ஆனால் அது எனக்குள் எழுப்பும் வீணையின் நாதத்தை எப்படி வார்த்தைக்குள் சேர்ப்பது, அதை நீங்கள் எவ்வாறு கேட்பது?
கலாப்பிரியா மற்றும் கல்யாண்ஜியின் குளக்கவிதைகளை ஒப்பிட்டிருக்கிறார் றியாஸ். கல்யாண்ஜி கவிதை காட்டுவது ஒரு பிரியம், மனிதநேயம் வழிந்து அனைத்து உயிர்களையும் சேர்த்து அணைத்துக் கொள்வது. அது தான் பிஞ்சுத்தவளையின் (என்ன ஒரு Terminology!) பதற்றத்தைக் கண்டு பரிதாபப்பட வைப்பது. கலாப்ரியாவின் கவிதையில் கால்களைத்
தேய்ந்த நீர்வட்டம் (சொற்றொடர்!) தொடுகிறது. அது குளத்தில் எறிந்த கல்லினால் ஆரம்பிக்கிறது. இதைக் குளத்தின் நீரலையைப் பார்த்த கவியின் அனுபவம் என்றால் கவிதை அங்கே ரசனையுடன் முடிந்து விடுகிறது. ஒருவேளை குளம் என்பது மனமா என்று சிந்திக்க ஆரம்பித்தால் அங்கே உங்களுக்கான கவிதை அனுபவம் பிரத்தியேகமாக உருவாகிறது. ஒரு கட்டழகன் அல்லது கட்டழகியின் முகமும் அங்கே சேர்ந்து கொள்கிறது. “நீதானே என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது”
கவிதைகளை எடிட் செய்வது ஒரு Continuous process. பிரசுரமான கவிதைகளில் கூட இன்னும் எடிட் செய்திருக்கலாம் என்று கவிஞர்கள் கூறியிருக்கிறார்கள். றியாஸ் பலரது கவிதையை இதில் எடிட் செய்து இருக்கிறார். கவிஞர் சுகுமாரன் மட்டும் எதிர்வினை செய்துள்ளார். தனிப்பட்ட முறையில் அடுத்தவரின் கவிதையை எடிட் செய்வது குறித்த Reservation எனக்கும் இருக்கிறது.
பாலஸ்தீனத்தின் தேசியக்கவியின் கவிதை ஒன்றின் மொழிபெயர்ப்பு குறித்த இவரது கட்டுரை முக்கியமானது. புனைவை மொழிபெயர்ப்பவர்களே இதை எதற்காக சொல்லி இருப்பார் என்று ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு திணறுகிறார்கள். நமக்கு சற்றும் பரிட்சயமில்லாத சூழலை தமிழ்படுத்துகையில், எவ்வளவு நன்றாக நமக்கு இருமொழியிலும் பாண்டித்யம் இருப்பினும் கவிதை அந்நியமாகும் அபாயம் இருக்கிறது.
அத்துமீறும் வாசிப்பு, நவீன கவிதைகளைச் சுற்றி, கவிதை மனம், மாற்றுப்பிரதி, கவிதை வடிவம் போன்ற பல விசயங்களைச் சுற்றி நகர்கிறது. இரண்டு கவிஞர்களின் ஒரே விசயத்திற்கான இருபார்வையையை இவர் நினைவில் இருந்து கொண்டுவந்து கொடுத்திருப்பது சுவாரசியமான விசயம்.
றியாஸ் கவிஞர் மட்டுமல்ல, தொடர் வாசிப்பாளர். கவிதை நூல்கள் அதிகம் வெளிவரும் நேரத்தில், கவிதைகள் குறித்து
பேசும் நூல்களும் தமிழில் அதிகம் வரவேண்டும்.
பிரதிக்கு:
புது எழுத்து 98426 47101
முதல் பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 150