ஆசிரியர் குறிப்பு:
ஓசூரில் வசிப்பவர். தொடர் வாசகர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நான்கு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். இது இவருடைய முதல் கட்டுரைத் தொகுப்பு.
வாசிப்பு என்பது தனிப்பட்ட மகிழ்பனுபவம் என்பது உண்மை. பல எழுத்தாளர்கள், வாசித்தாலும், வாசிப்பனுபவத்தை எழுதுவதில்லை. அடுத்தவர் மீது அநாவசியமாக நாம் ஏன் வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டும் என்ற நல்லெண்ணம் மட்டுமே காரணம். அப்படியே எழுதினாலும் புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி என்று உபத்திரவமில்லாமல் எழுதுவது. இந்த சூழலில் நான்கு கவிதைத் தொகுப்புக்குப் பின், தன் வாசிப்பனுபவத்தை இந்தக் கட்டுரைத் தொகுப்பின் மூலம் பகிர்ந்து கொள்கிறார் பெரியசாமி.
கவிதைத் தொகுப்புகளுக்கு சரிபாதிக்கு மேல் பக்கங்கள் ஒதுக்கியிருப்பது ஒரு முக்கியமான விசயம். கவிதை நூல்கள் வருமளவிற்கு கவிதைகள் குறித்த நூல்கள் வராத காலகட்டத்தில், கவிஞர்களுக்கு சிறிதேனும் ஆறுதலை இந்தத் தொகுப்பு கொடுக்கக்கூடும். கவிஞர்கள் என்றால், ந.பி, சி.மணி இல்லை. எல்லோருமே சமகாலத்தில், இப்போது எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்கள்.
தற்செயலாக அமைந்த சீனிவாசன் பாலகிருஷ்ணனின் இரண்டு நூல்களான, விடம்பனம் மற்றும் மதுவின் மயக்கம் குறித்த விமர்சனங்கள் இரண்டுமே ஒரே ரீதியில் சொல்கின்றன. விடம்பனம் நூல் குறித்த தலைப்புக்கும் உள்ளடக்கத்திற்கும் சம்பந்தமேயில்லை.
பிரதியை முன்வைத்த விமர்சனம் நூலுக்கு நூல் மாறுபடும். ஒரு நல்ல நூலை எழுதியவர் என்பதற்காக நன்றியுணர்வுடன் அடுத்த நூலுக்கு சலுகை காட்ட வேண்டியதில்லை. ஆனால் இப்போது எழுத்தாளர்களை முன்வைத்துத்தான் விமர்சனங்கள் அதிகம் வருகின்றன. இன்னொன்று புனைவில் குறிப்பிடப்படும் மாற்று சித்தாந்தங்கள். நாம் எதை உறுதியாக நம்புகிறோமோ அதே போல் இன்னொன்றை நம்ப அடுத்தவருக்கு உரிமையுண்டு. புனைவில் சொல்வதை எல்லாம் வாசகர் அப்படியே எடுத்துக் கொண்டால், மு.வரதராசனாரைப் படித்த தமிழர்கள் மணிமணியாக இருந்திருக்க வேண்டும். நாம் சொல்வதையே மற்றவர் சொல்ல வேண்டும் என்பது கிருத்துவ எதிர்பார்ப்பு.
பாக்கியம் சங்கரின் நான்காம் சுவர், தி.பரமேசுவரியின் தனியள், கண்டராதித்தனின் திருச்சாழல் போன்றவை
அவற்றின் உள்ளடக்கத்திற்குரிய கவனத்தை, பரவலான வாசிப்பை சென்றடையவில்லை. இவை ஒவ்வொன்றைக் குறித்தும் விளக்கமாக எழுதப்பட்ட ஒவ்வொரு கட்டுரையும் முக்கியமானவை.
நாற்பது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. இதில் குறிப்பிட்டிருக்கும் சில நூல்களைத் தவிர, மீதி அனைத்துமே சிறந்த வாசிப்பனுபவத்தை வழங்குபவை. வெய்யிலின் அக்காளின் எலும்புகள் தொகுப்பு எல்லோரையும் கவர்ந்து இழுக்கக்கூடியது, அது குறித்த கட்டுரையும் நன்று. பல கட்டுரைகளில், வெங்கியைப் போல (வெங்கடேஷ் ஸ்ரீநிவாசகம்) சொந்த அனுபவங்களையும் சேர்த்துக் கொண்டு வருவது சுவாரசியமாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
பிரதிக்கு:
தேநீர் பதிப்பகம் 9080909600
முதல்பதிப்பு ஏப்ரல் 2021
விலை ரூ.180.i