ஆசிரியர் குறிப்பு:
1977-ல் கணையாழியில் முதல் படைப்பாக ஒரு புதுக் கவிதை பிரசுரமானதோடு முருகனின் எழுத்துலகப் பயணம் தொடங்கியது. அது சுஜாதாவினால் பாராட்டப்பட்டு, பரவலான அறிமுகத்தைத் தந்தது. முதலில் கவிஞராக அறியப்பட்டு பின் சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக, கட்டுரையாளராக பலதளங்களிலும் இயங்க ஆரம்பித்தார். மென்பொருள் துறைபற்றி இவர் எழுதிய ‘மூன்று விரல்’ நாவல்தான் இவரது முதல் நாவலாகும். முப்பது நூல்களுக்கு மேல் வெளியிட்டிருக்கிறார், வெகுசமீபத்தில் மிளகு என்ற 900+ பக்கங்கள் கொண்ட நாவலை முடித்திருக்கிறார். இது சமீபத்தில் வந்த சிறுகதைத் தொகுப்பு.
இரா.முருகனின் கதைகள் தனித்துவமானவை. இவரிடம் சுஜாதாவின் சாயல் இருக்கிறது என்போருக்கு, தொழில்நுட்பம் குறித்த விசயங்கள், எதையும் சுவாரசியமாக எழுதுவது என்பதோடு அந்த சாயல் முடிந்து போகிறது. முதல் கதையைப் படித்தபோது, ஏழெட்டு வயதில் ஞாயிற்றுக்கிழமை மதியத்தில், நண்பர்களுடன் ஒரு வீட்டுக் கதவை பலமாகத் தட்டிவிட்டு ஓடியது சட்டென்று நினைவுக்கு வந்தது. நாங்கள் ஏன் அப்படி செய்தோம்? ஒவ்வொருமுறையும் அந்த மாமா ஏன் கதவைக் கோபமாக வந்து திறந்தார்? ஒரு உதாரணம் இது. இது தான் இவரதுகதைகளில் அங்கங்கே வந்துபோகும் Trigger points. அத்துடன் சில கதைகளில் மாஜிக்கல் ரியலிசமும் கலந்து கொள்கிறது.
அநாவசியத் தகவல்களே இவரது சிறுகதைகளில் இருப்பதில்லை. நெற்றியில் துளிமுடி வந்து விழாது இழுத்துக்கட்டிய இரட்டைசடை போல ஒரு கச்சிதம். பத்து பக்கங்களில் முடியும் ” கல்யாணி மட்டும்”, கதையில் எத்தனை உணர்வுகள் அடைந்து கிடக்கின்றன. முடிவில் ஒரு அபஸ்வரமா இல்லை அன்னம்மா காண வேண்டியதைக் கண்டுவிட்டாள் என திருப்தி கொள்வதா!
பொடி சிறுகதை, ராமோஜியம் என்ற முழுநீள
நாவலானது போல், மயில்மார்க் குடைகள் போன்றவை நாவலாக விரியும் உள்ளடக்கத்தைக் கொண்டவை. ராலே சைக்கிளுக்கும் துரைசானிக்குமான ஒப்பீடு, காத்தி நர்ஸ் திடீரென்று கண்டிப்பான தாதியாக மாறுவது, மதி ஸ்கூட்டர் பின்சீட்டில் மனநிம்மதியோடு பாடுவது என்று subtlety
கதைகள் எங்கும் இறைந்து கிடக்கின்றது. தேடுங்கள், கண்டடைவீர்கள்.
இருபது கதைகள் கொண்ட தொகுப்பு. 1930, 40,60,80 என்று காலச்சக்கரம் முன்னும் பின்னும் ஓடுகிறது. எடப்பாடியும் வந்து போன பிறகு, பக்தவச்சலம், வெங்கட்ராமன் பதவி ஏற்கப்போகிறார்கள் என்று படிப்பது சர்ரியல் உணர்வைக் கூட்டுகிறது. தேங்காய் மூடி திரைப்படக் கம்பெனி கதையில் இருந்து, ஒற்றைப்பயணி வரும் ரயில் போன்ற True storiesல் இருந்து, மாஜிக்கல் ரியலிசத்தின் இருபரிமாணங்களான, தீவு மற்றும் அழகுப்பிள்ளை வரை வித்தியாசமான கதைகள். எடின்பரோவில் நடக்கும் கதையும் வருகிறது, 1940களின் சென்னையைக் களமாகக் கொண்ட கதையும் வருகிறது. பெண்களை மையமாக வைத்து நகரும் கதைகளில் அன்னம்மா, பார்கவி, ரத்னா (ராமோஜியை யார் கண்டது?) ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வித்தியாசம்! ரத்னா ஒருவாரத்திற்கான அல்வாவை ஒரே பகல்பொழுதில் முடித்தது போல் இருபது கதைகளையும் ஒரு பகல் பொழுதில் படித்து முடிக்கலாம்.
பிரதிக்கு:
எழுத்து பிரசுரம் (Zero Degree) 89520 61999
முதல்பதிப்பு ஜூன் 2021
விலை ரூ. 270