ஆங்கிலப்பள்ளிகளில் படித்த பலர் தமிழ் எழுதப்படிக்கத் தெரியாது என்று சொல்லும் நிலையில், கனகராஜ் கர்நாடகாவில், கன்னடத்தில் படித்து வளர்ந்தவர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், பத்துவயதிற்குப் பிறகு வீட்டில் தமிழ் கற்றுக் கொண்டு, பின் கன்னடத்தில் தொடர்ந்து கதைகள் எழுதி, சென்ற வருடத்தில் இருந்தே தமிழில் கதைகள் எழுதத்தொடங்கியவர் ஒரு முக்கியமான குறுநாவல் போட்டியில் முதல் பரிசை வெல்வது என்பது மிகக்கடினமான விசயம். Jhumba Lahiri போன்ற வெகு சிலருக்கே இது முடிந்திருக்கிறது.

வெளிநாடுகளில், வேற்றுக் கலாச்சாரங்களின் நடுவில் வாழ்பவர்கள், தாங்கள் பார்க்கும் வாழ்க்கையை, கதைகளில் கொண்டு வருகையில் தமிழ் புனைவுலகின் எல்லையை விரிவாக்குகிறார்கள். இந்த நாவல் அரபுநாட்டு பதூவீக்கள் சமூகத்தின் நம்பிக்கைகள், ஆசாபாசங்கள், வன்மங்கள், உணவுப்பழக்கங்கள்,அலைக்கழிப்புகள், போராட்டங்களைப் பின்நவீனத்துவ கதைசொல்லலில் சொல்வது. உள்ளடக்கத்தினால் மட்டுமல்ல, Presentationனாலும் இது தமிழ்புனைவிற்குப்
புதியது. பழங்குடிகளின் வாழ்வு நவீன உலகில் சிக்கலுக்குள்ளாவதைக் குறித்து பல நூல்கள் ஆங்கிலத்தில் வந்திருக்கின்றன. இவ்வருட புலிட்சர் பரிசை வென்ற Night Watchman கூட அமெரிக்கப் பழங்குடிகள் நவீன உலகில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த நாவல். சோளகர் தொட்டி போல விரல்விட்டு எண்ணும் நூல்கள் பழங்குடிகளைப் பற்றி வந்திருப்பினும் வேற்றுநிலத்தைச் சார்ந்தவர்களின் கதை தமிழில் இதுவே முதன்முறையாக இருக்கும்.

ஆடுஜீவிதம் போன்ற நாவல்களில் இருந்து அல்கொஸாமா எப்படி வேறுபடுகிறது? முதலாவது உள்ளடக்கம். இது சவுதிக்கு புலம்பெயர்ந்த இந்தியர் வாழ்வை மட்டுமல்லாது, அங்கிருக்கும் பழங்குடிகள் பதூவீக்களின் ஒட்டுமொத்தக் கலாச்சாரத்தையும் சேர்த்து சொல்வது. பதூவீக்களின் வாழ்க்கையை இந்திய நோக்கில் பார்க்கும் பொழுது ஒரு அறியாத உலகத்திற்குள் வாசகரைப் புகுத்த முடிகிறது. புலம்பெயர்ந்த இந்தியர்களின் பிரச்சனையைச் சொல்லி இருந்தால், அது வழக்கமானதாகவோ அல்லது பதூவீக்கள் வாழ்க்கையை மட்டும் சொல்லி இருந்தால் அல்புனைவாகவோ மாறி இருக்கும். Cross Cultureன் மொத்த பயன்களையும் நாவல் தன்னகத்தே எடுத்துக் கொள்கிறது.

இரண்டாவது, நாவல் சொல்லப்படும் யுத்தியில் இருக்கும் நவீனம். நேர்க்கோட்டில் நகரும் நாவலல்ல இது. சம்பவங்கள், வாய்மொழிக்கதைகளை இருவேறு கலாச்சாரத்தில் முன்னும் பின்னும் நகர்த்தி, உணர்ச்சிவசப்படாத மொழியில் சொல்லிப் போவது. கொஞ்சம் சறுக்கியிருந்தால் நாவலின் மொழி தட்டையானது என்று குற்றம் சாற்றப்படும் கத்திமுனைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்திருப்பது.
கனகராஜ் ஆங்கில இலக்கியம், குறிப்பாகப் பின்நவீனத்துவத்தை மாணவர்களுக்குக் கற்பிப்பவர். அந்தப் பயிற்சி நாவலுக்குப் பேருதவியை செய்திருக்கிறது.

மூன்றாவது, நாவலில் அங்கங்கு வந்து போகும், இயல்பான மேஜிக்கல் ரியலிசம், ஜின்னிகள் சொல்லும் கதைகள், இடையே வரும் கவிதைகள். மேஜிக்கல் ரியலிசத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றான நிதர்சனத்தின் அழுத்தத்தைக் கூட்டுவதற்கு மட்டுமே அதை உபயோகித்திருக்கிறார். ஜின்னிகள் சொல்லும் கதைகள் வாய்மொழி அரபுக்கதைகளின் நீட்சி. இஸபெல் அலண்டே அவரது சமீபத்திய நாவலான A Long Petal of the Seaல் அங்கங்கே நெருடாவின் கவிதைகளை இணைத்திருப்பார். இவர் அங்கங்கே பொருத்தமாக இவரது கவிதைகளை, நாவலின் போக்குக்கேற்ப இணைத்திருப்பதும் நாவலின் சுவாரசியத்தைக் கூட்டுகிறது.

அடுத்தது காமத்தைப் பற்றிப் பேசுகையில், அது Profanityஆகவோ அல்லது பாலியல் உணர்வைத் தூண்டும் வகையிலோ அல்லாது, பரிதாபத்தைத் தூண்டும் வகையில் அமைத்திருப்பது. அண்ணன், தம்பி இருவர் மீதும் பரிதாபமே இந்த விசயத்தில் எழுகிறது.

கடைசியாக Zadie Smith என்ற Hysterical realism எனும் யுத்தியை ஆரம்பித்த எழுத்தாளரின் Quoteஉடன் ஆரம்பிக்கும் நாவல், அதன் முக்கிய கூறான Absurd prose மற்றும் Detailed investigation of social phenomenonஐத் தொடர்ந்து நாவலில் மேற்கொள்கிறது. அந்த வகையில் இது தமிழின் முதல் Hysterical realism novel ஆகிறது.

முழுநாவலாக இதை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. குறுநாவல் போட்டிக்கேற்ப பின்னால், எடிட்டிங் செய்தது இன்னும் கவனமாக செய்திருக்கலாம் என்ற ஒன்று மட்டுமே நான் வைக்கும் எதிர்மறை விமர்சனம். குறிப்பாக, ராஜேந்திரன் தூக்குப் போடுவதில் இருக்கும் இடைவெளி, மற்றும் கதையின் அழுத்தத்தை ஏற்படுத்தும் Magical realismன் சிலபகுதிகள் திருத்தப்பட்ட பதிப்பில் இல்லாதது. இந்த சிறுவிசயங்களைத் தாண்டி, தமிழுக்கு இந்தப் புனைவு வாசகரைப் புதிய உலகுக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமன்றி, சமகால உலக இலக்கியத்தின் சாயல்களையும் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s