ஆசிரியர் குறிப்பு:
இவர் மதுரையில் வசிக்கிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு – தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகக்கூட்டம் எனும் கவிதை நூல் ஏற்கனவே வெளியாகியுள்ளது. இது சமீபத்தில் வெளியான இரண்டாவது கவிதைத்தொகுப்பு.
தினம் நடக்கும் காட்சியை வார்த்தைகளை மடித்து, மாற்றிப் போடுகையில் அழகான அனுபவமாக மாறிப்போகிறது.
” மழையூறி நனைத்த மண்ணுழவில்
சிறகுகளைப் பிசைந்து பறந்து காட்டும்
கருங்காகத்தின் கிளைவாகிற்கு
பக்கபலமாக
ஜன்னல் கம்பிகளுக்குப் பின்னால்
கண்வைத்து நிற்கிறேன்……..”
கவிஞருக்குத் தேவை வித்தியாசமான பார்வை. சாதாரண பார்வைக்குத் தனித்த வீடுகளின் அமைதி உறுத்தும். ஆனால் இவருக்கு….
” திறந்து மூடும் கண்ணாடிக் கதவுகளிருக்கும்
வாசலிலும் ஒரு செடி
தனித்துத்தானிருக்கிறது”
ஓடுவதும், ஊர் வாயில் விழுவதும், சொறிந்தும் உதிராமல் இருப்பதும் மனம் நடத்தும் கண்ணாமூச்சி.
” கதவு திறக்கிற போதெல்லாம்
ஓடிவிடுகிறது
கட்டுக்குள் நிற்பதில்லையென
ஊர் வாய் விழுகிறது
உடல் முழுக்கச் சொறிந்தும்
உதிரவில்லை காயங்கள்
நாயைக்கொண்டுவந்து
நடுமனையில் வைக்க முடியுமா
மாடி முழுக்கக் கொத்தனார்கள்”
நுட்பமான படிமங்கள் வந்து விழும் கவிதைளுக்குரிய வசீகரமே தனி தான்.
” தலை குப்புற விழுகின்ற
எண்ணெய் குப்பியென்ன ஒளிவிளக்கா
விழுந்தணைந்தபின்
குப்பென்று பற்றியடங்கும்
உயிரென்ன மெல்லிய இருளா?”
கவிதைமொழி நன்றாக வசப்பட்டிருக்கிறது அம்பிகாவர்ஷிணிக்கு. அன்றாடம் பார்க்கும் காட்சிகள், நிகழ்வுகள் கவிதையாகியிருக்கின்றன. சில கவிதைகளில் சிறுகதைக்கான கரு ஒளிந்து கொண்டு இருக்கிறது. ‘அம்மாவோடு சேர்ந்து தயாரித்தது’ போன்ற அவலநகைச்சுவையும் இடையிடை வந்து போகிறது.
ஒரு வசதிக்காக மூன்று பகுதிகளாகக் கவிதைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த இரவு ஒரு சிறிய நூலகம் என்ற தலைப்பிட்ட கவிதை அனுபவங்களின் கோர்வை. அப்பாவின் நூலகம் திடீரென்று ஏன் நின்றது என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.
ஓ ஹென்றியின் கதைகளில் கடைசிவரியில் தோன்றும் திருப்பம் பல கவிதைகளின் இறுதிவரியில் வருகின்றது. சகுனப்பறவை,
நோய்மையென… போன்ற நுட்பமான கவிதைகளும் தொகுப்பில் இருக்கின்றன.
“ஒரு நாகம் வெளிப்படுவது போல கற்பனை வருகிறது” என்பது போல் வாசகர் கற்பனையை விரிக்கும் வரிகளும் சட்டென்று வந்து போகின்றன. தொடர்ந்து எழுத வாழ்த்துகள். அடுத்தமுறை தோட்டனேரியைப் பார்த்து வரவேண்டும்.
பிரதிக்கு:
ஆகுதி பதிப்பகம்
முதல் பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.100.