ஆசிரியர் குறிப்பு;
சேலத்தில் பிறந்தவர். விமானப் பொறியியல் பட்டதாரி. 2012ல் இருந்து எழுதும் இவரது இரண்டு நாவல்களும், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இது இவரது சமீபத்திய நாவல்.
வீடு என்பது பாதுகாப்பானது, வெளியில் நடக்கும் அவமானங்களை பிரியமெனும் மெல்லிய துவாலையைக் கொண்டு, துடைத்து எடுப்பது, நிம்மதியான நித்திரைக்கு உதவுவது, அடுத்த நாள் வெளியில் செல்ல தைரியத்தைத் தருவது. வீடு கைவிட்டதென்றால் என்ன செய்வது?
குடும்பத்தில் பரஸ்பர வெறுப்பும் அதன் விளைவுகளுமே நாவலின் கரு.
கதையின் போக்கை மாற்றும், ஆண் என்பவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற காலங்காலமான நம்பிக்கை ஒரு முக்கியமான விசயம். அமைதியாகப் பேசும் ஆண், பலவீனமானவன் என்று இன்றும் பல பெண்கள் நம்புகிறார்கள். அதே போல் சமையல் தொழிலை செய்வது கேவலம் என்ற கருத்து, வீட்டில் இருப்போருக்கு இருப்பது. இவை எல்லாம் நாவலில் நுட்பமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. உணவை விற்று பணம் சம்பாதிப்பதில் குற்றஉணர்வு கொள்ளும் ஹோட்டல் முதலாளிகளையும் நான் பார்த்ததுண்டு. உணவில் மட்டுமே ஒருவரை திருப்தியாகப் போதும் என்று மனதாரச் சொல்ல வைக்கமுடியும். வேறு எதைக் கொடுத்தாலும் வாங்குபவருக்கு அந்த திருப்தி வருவதில்லை.
நல்ல கதைக்கரு மற்றும் விவாதத்திற்குரிய விசயத்தை, கிருஷ்ணமூர்த்தி நாவலில் மேம்போக்காக கடந்து சென்றதாகவே எனக்குத் தோன்றுகிறது. கதாபாத்திரங்கள் எதுவும் இப்படித்தான் என்ற வடிவமே ஏற்படுத்திக் கொள்ள முடியாமல், காய்ந்த மண்ணில் பிள்ளையார் பிடிக்க நினைத்தது போல் ஆகின்றன. கதையின் சம்பவங்கள், கதைக்கு வலுவேற்றாமல் எல்லாத் திசையிலும் பயணம் செய்கின்றன. முத்தாய்ப்பாக செல்வம், அர்ஜூனனின் அஞ்ஞாதவாசம் போல் ஒன்றே கால் வருடம் சமைப்பதற்காகப் போய் இருப்பதும், கஜேந்திரன் அப்பாவைத் தேடி வேறு ஊர் போகும் அதே கணத்தில் அவர் அறை வாங்குவதும் (பத்துமுறை போனில் கூப்பிட்டுச் சொல்லிய காதலியே அந்த நிமிடத்தில் வந்து நிற்க மாட்டேங்குறா சார்) பிரேமலதா தங்கநகைகளைப் பொட்டலத்தில் கட்டிக் கொடுப்பதும்….. கிருஷ்ணமூர்த்தி திறமை வாய்ந்த எழுத்தாளர், எழுத்தில் பரிசோதனைகள் செய்பவர். கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து, இதுபோன்ற நாவலை, உண்மையிலேயே எதிர்பார்த்திருக்கவில்லை நான்.
பிரதிக்கு:
யாவரும் பப்ளிஷர்ஸ் 90424 61472
முதல் பதிப்பு அக்டோபர் 2021
விலை ரூ. 155.