ஆசிரியர் குறிப்பு:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையைச் சேர்ந்தவர். திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர். ஏற்கனவே பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதிய இவர், நீண்ட இடைவெளிக்குப் பின் எழுத ஆரம்பித்து, இப்போது யாவரும் பரிசு வென்ற குறுநாவலையும், Zero degree பரிசு வென்ற இந்த நாவலையும் எழுதியிருக்கிறார்.
தான் பிறந்து வளர்ந்த ஊரையே, கதைக்களமாக வைத்துக் கொள்வதன், மொத்தபயன்களையும் இந்த நாவல் பெற்றிருக்கிறது. ராமச்சந்திரன் நாயரின்,
நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி நாவல், மேசையின் அந்தப்பக்கத்தில் என்றால், இந்த நாவல் அதன் எதிர்பக்கத்தில் நடக்கும் கதை. நாற்பது வருடங்களுக்கு முன், நக்சல்பாரி எனச் சொல்லப்பட்ட ராமலிங்கம் என்பவரைத்தேடி காவல்துறை விசாரணை செய்வதில் நாவல் ஆரம்பிக்கிறது.
ஜோலார்பேட்டையில் இருக்கும் சிற்றூரின் நில அமைப்புகள், அந்த மக்களின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை, கவலைகள், வலிகள் என்று எல்லா விசயங்களுமே அவ்வளவு இயல்பாக வந்திருக்கின்றன.
தில்லானா மோகனாம்பாள் வந்து மூன்று வருடங்கள் என்றால் கதை நடப்பது எழுபதுகளின் ஆரம்பம். திரைப்படத்தில் ஜமீன்தாருக்கு மோகனா கிடைப்பதில்லை ஆனால் நாவலின் ஜமீன்தாருக்கு எல்லா மோகனாக்களும் கிடைத்து விடுகிறார்கள். பணம், அதிகாரம், அரசு இயந்திரத்தின் பக்கபலம் இருந்தால் ஒருவன் சமூகத்தில் எவ்வளவு கேடு விளைவிப்பான் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.
காவல்துறையின் விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து இறுதிப்போட்டிக்கு வந்த நாவல்களில் பெரும்பான்மையாக வருவது, சமீபகால வரலாற்றைப் பார்த்து Subconsciousல் தங்கியதன் விளைவாக இருக்கக்கூடும். ஓட்டுக்கேட்பது, சிக்கினால் தொலைத்து விட வேண்டும் என்பது எல்லாம் தமிழ்நாட்டில் எப்போதும் மாறப்போவதில்லை.
நடராஜன் நாவலின் முக்கிய பாத்திரம். நவீன ராபின் ஹூட். டீக்கடை ராமசாமி ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். பிரச்சனைக்கு நடுவில் ஜாதியைக் கொண்டு வருவது, பெண்களின் வம்புப்பேச்சுகள், அத்துமீறல்கள், தெரிந்தே சில மீறல்கள் என்று சுவாரசியத்துக்கு பஞ்சமில்லாது, அடுக்கடுக்காய் வரும் சம்பவங்கள், அப்பாவி ஜனங்களின் வாழ்க்கை என்று விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.
நாவலுக்கு வேகத்தடைகள் சித்தாந்தத்தைத் திரும்பத்திரும்பப் பேசுவதும், இரகசியக் கூட்டங்களில் நடப்பதை விவரிப்பதும். ஜமீனுக்கு எதிராக ஒரு கூட்டம் வேலைசெய்கிறது என்பதைக் கோடிகாட்டிக் கடந்திருக்கலாம். அதே போல் லாஜிக்கல் கேள்விகளை எழுத்தாளர் நாவலை முடித்த உடன் ஒவ்வொரு இடத்திலும் தனக்குத்தானே கேட்டுக் கொள்வது அவசியம் . உதாரணத்திற்கு டீச்சரின் குழந்தையும், வேலைக்காரப்பெண்ணும் வெளியே போய்விடுகிறார்கள் என்று கதையில் முன்னரே அழுத்தம் திருத்தமாகப் பதிவாகி இருக்கிறது. அதே போல் ராமலிங்கம் டீ குடிக்கும் காட்சி. இது போன்ற சில Ambiguitiesஐ எடிட்டிங் மூலம் சரிசெய்து கொள்ளலாம். பின்கதைச் சுருக்கமும் ஆசிரியர் கூற்றாக வந்திருக்க வேண்டியதில்லை. அதே போல் ஜமீன்தாரைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் நிதர்சனத்தை விடக் கற்பனையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.
இவற்றைக் கடந்து பார்த்தால், மொத்தத்தில் இந்த நாவல் ஒரு சிற்றூரின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கிறது. பெருநகரங்களில் சாதிக்கொடுமை ஒழிந்தது போல் பாவனை காட்டினாலும், சிற்றூர்களில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. சமத்துவம் எப்போதும் அரசுகளின் அறிக்கைகளில் மட்டும் இருக்கிறது. எதிர்ப்பவனை நக்ஸலைட் என்று முத்திரை குத்துவது இன்றும் இந்தியா முழுதும் இருப்பது. ஆர்வமான வாசிப்பை வழங்கும் நாவல்.
பிரதிக்கு:
எழுத்து பிரசுரம் (Zero Degree) 89520 61999
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 320.