அக்கமகாதேவி பன்னிரண்டாம் நூற்றாண்டின் சைவபக்தி இலக்கியத்தை வளர்த்தவர். கர்நாடகாவின் ஷிமோகாவில் பிறந்தவர். ஆண்டாளுக்கு மாதவன் போல் அக்கமகாதேவிக்கு சென்ன மல்லிகார்ஜூன்.

பெருந்தேவி, கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர், அமெரிக்கப் பல்கலை ஒன்றில் இணைப்பேராசிரியர். புனைவென்றாலும், கவிதையென்றாலும் மொழியில் தொடர்ந்த பரிசோதனைகளைச் செய்து வருபவர்.

சைவம் தென்இந்தியா முழுவதுமே தன் இருப்பைப் பலமாகத் தக்க வைத்திருக்கிறது. குறிப்பாக கர்நாடகாவில் லிங்காயத்துகள் (சிவனைத் தவிர வேறு யாரையும் வழிபடாதவர்கள்) திங்கள் கிழமைகள் எல்லாவற்றையும், சிவநாளாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் அக்காவின் (அக்கமகாதேவி, கன்னடத்திலும் அக்கா தான்) வசனங்கள் அவர்கள் மனதுக்கு நெருங்கியவை. ஒரு தமிழராக நாம் பெருமிதப்படுவதற்கு தேவாரம், பாசுரம் போல் பக்தி இலக்கியம் மிகவளமாக இருக்கின்றது. அப்பரைப் போல் யார் உருகப் போகிறார்கள்?

அக்கமகாதேவியைப் படிக்கச் சொல்லிப் பலர் சொல்லியும் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்ததே, A K Ramanujanஐ மொத்தமாகப் படித்தபோதும் இவற்றை Choiceல் விட்டாயிற்று. தமிழ்செல்வி, மதுமிதா ஏற்கனவே அக்காவை மொழிபெயர்த்த நூல்களையும் நான் தவற விட்டிருக்கிறேன். பெருந்தேவியின் தமிழோடு இப்போது அக்கா.

ஆறாவது வசனத்திற்கும் அப்பரின் ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே என்பதற்கும் இருக்கும் தொடர்பை ரசியுங்கள்.

அக்காவின் காதல் பத்து நூற்றாண்டுகள் கடந்தும் இளமையாக இருக்கிறது.

” உன்னை அறியும் நரகமே மோட்சம்
உன்னை அறியாத மோட்சமே நரகம்”

” மூச்சே நறுமணமானால் யாருக்குப் பூ வேண்டும்”
( மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச் சுவையும் நாற்றமும்…….)

” பட்டுப்புழு தன் சிநேகத்தால் கூடுகட்டி
தன் நூல்களாளேயே தன்னைச் சுற்றிச்சுற்றி
மடிவதைப் போல
மனதுக்குள் தோன்றுவதை
விரும்பி விரும்பி வேகிறேன்”

” வனமெல்லாம் நீயே
வனத்தின் தேவதருவெல்லாம் நீயே
தருக்களிலாடும் பறவை மிருகமெல்லாம் நீயே”

” காமத்தில் கற்பனையில் கருகி
அமர்ந்திருந்தேன் அம்மா
மோகித்து முத்தமிட்டு
மடைச்சியானேன் அம்மா”

” வினைபுரிவோனுக்கு ஒரு சிந்தை
எனக்கு என் சிந்தை
தனக்குத் தன் காமத்தின் சிந்தை
மாட்டேன் போ,
முந்தானையை விடு பைத்தியமே”

“என் குடமுலைகளோடு சேர்த்து
எப்போது உன்னைத் தழுவிக் கொள்வேன்
என் உடலழிய மனமழிய உன்னை
ஒருமுறை எப்போது கூடுவேன்”

அக்கமகாதேவியின் வரிகளில், காதலை விடப்பலமடங்கு தத்துவார்த்தம் கலந்திருக்கிறது. அதற்கு அவர் தேர்ந்தெடுத்து வாழ்ந்த வாழ்க்கைகூட காரணமாக இருக்கலாம். காமுற்று பார்க்கும் ஆண்களை அண்ணா என்று விளிப்பது அக்காவின் காலத்திலேயே ஆரம்பித்து விடுகிறது.

” செகதலத்தின் கூட்டங்களை
பிரம்பை உயர்த்தித்
துன்புறுத்துகிறது மாயை”

” உலக இயக்கங்களுக்கு
கதிரவனே விதை
கரணங்களின் இயக்கங்களுக்கு
மனமே விதை”

“கண்ணால் காண விரும்பி
காரிருளுக்குள் சென்றால் எப்படி”

“தேடிக் காணாத உடலையும்
முயங்கிப் பெறாத சுகத்தையும்
எனக்கருள்க”

” மூலாதாரத்தின் வேரை மிதித்து
பூமண்டலம் ஏறினேன்
ஆசாரத்தின் வேரைப் பிடித்து
ஐக்கியத்தின் உச்சிக்கு ஏறினேன்”

பெருந்தேவியே குறிப்பிட்டிருப்பது போல, திராவிட மொழிகள் ஒன்றுக்கொன்று நெருங்கியவை. அதை ஆங்கிலத்தில் மாற்றிப்பின் தமிழுக்குக் கொண்டு வருவதில் ஆபத்து இருக்கிறது. ஆனால் பெருந்தேவியின் முனைப்பும், மொழிவளமும் அந்த ஆபத்தைக் கடந்திருக்கின்றன. மூலத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் அதே Lyrical தன்மை, இங்கேயும் வந்திருக்கிறது. “ஆலிங்கனமே ஆடை, முத்தமே ஊட்டம், காதல்பேச்சு தாம்பூலம், உணர்ச்சி மோகனம், கலத்தல் பரமசுகம்”.

இதுதான் முதலாவது மொழிபெயர்ப்பு நூல் பெருந்தேவிக்கு. (அங்கங்கே கட்டுரைகள், கவிதைகள் செய்திருந்த போதிலும்) Proseஐ விடக்கவிதை மொழிபெயர்ப்பு கடினமானது என்பது பெரும்பாலோரினரை விடப் பெருந்தேவிக்குத் தெரியும். அதற்கான கடினஉழைப்பு, வினயசைதன்யாவின் Unceasing supportம் இதை சாத்தியமாக்கி, நாம் மொட்டிலிருந்து பட்ட சிரமங்கள் எதுவுமறியாது கனியை மட்டும் காண்கிறோம்.

அடுத்தது, எது எங்கிருந்து வருமென்பது, எப்போதும் தெரியாதது. தூங்கு பனிநீரை வாங்கு கதிரோனே என்று கம்பனுக்கு எடுத்துக்கொடுத்தது யார். வாங்கிக் கொள்ளும் மனம், பலகுறைகளைத் தாண்டி Near perfectionஐ நோக்கி நகர ஆரம்பிக்கும்.
அமெரிக்காவில் படிக்கும், இயேசுவை வணங்கும், ஆப்பிரிக்க மாணவி கூட ஒளியைத்தரக்கூடும்.

வசனங்கள் குறித்த துணைக்குறிப்புகள் மற்றும் பின்னுரை பெருந்தேவி இந்த நூலுக்கு அளித்திருக்கும் கடினஉழைப்பை, ஆய்வைக் குறித்து தோராயமாகவேனும் ஒருசித்திரத்தை வழங்கக்கூடும். 2018ல் ஆரம்பித்த வேலை இப்போது புத்தகவடிவை அடைந்திருக்கிறது. ஒரு புத்தகம் இப்படித்தான் உருவாக முடியும். மாதம் ஒரு புத்தகம் வழங்கும் தமிழ் அறிவுஜீவிகளைக் கண்டிப்பாக காலம் புறம் தள்ளும். இது போன்ற Genuine booksஐத் தேடிப் படித்து, விவாதித்து, பாதுகாக்கும் வாசகர்கள் நிறைய வேண்டும் என்று சொல்வதைத் தவிர எனக்கு வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.

பக்தி இலக்கியத்தில் இரண்டு சம்பந்தமில்லாத நிலங்களில் ஒற்றுமைகள் நிறைய. வைஷ்ணவம் சொல்லும் கண்ணன் ஒருவனே ஆண் என்பதை, அக்கா அதேவரிகளில் ஆனால் முற்றிலும் வேறு அர்த்தத்தில் உபயோகிக்கிறார். படிக்கையில் நிறைய ஒப்பீட்டு வரிகள் வந்து போயின. அக்கமகாதேவியை விட ஆண்டாளின் வீச்சும், வேகமும் மிக அதிகம். இங்கே ஒப்பீட்டுக்காக சொல்லவில்லை. அக்கமகாதேவியைப் படிப்பவர்கள், ஆண்டாளையும் படித்துப் பாருங்கள். மொழிபெயர்ப்பென்றால் கூட ஆவியுடன் ஆழக் கூடினேன் என்பது போல் பெருந்தேவியின் வரிகளைப் பார்ப்பது, விசித்திர உலகத்தில் இருக்கும் அனுபவத்தைத் தருகிறது. இது ஸ்ரீவள்ளிக்கு மிகவும் பொருத்தமான மொழியும், உள்ளடக்கமும். Great job. A new feather in your cap. Kudos Perundevi.

பிரதிக்கு:

காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் 4652-278525
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.225.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s