ஆசிரியர் குறிப்பு:
திரைத்துறையில் பணிபுரிகிறார். அது குறித்து ஆறு நூல்கள் எழுதியுள்ளார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு நாவலும் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இது இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு.
பேசாப்பொருளைப் பெரும்பாலும் பேசுவதே,
மணியின் கதைகள். அவை வலிய இழுத்து வரப்படாமல், அதிர்ச்சிமதிப்புக்காகச் சொல்லப்படாமல், கதைகளாய் மனதில் நிற்கச் செய்வதே இவரது பலம். நத்திங் கதையில் போலிஸுக்குப் பதிலாக சுந்தரியே விடுவிக்கச் சொல்லி சொல்லிவிட்டு அதன்பின் மொத்த Flash back வந்தால் மிக அழுத்தமாக இருந்திருக்கும் என்று முதலில் படிக்கையில் தோன்றியது. இப்போதும் அப்படித்தான் தோன்றுகிறது. எது எப்படி இருந்தாலும், உலகத்தின் பார்வையில் ஒட்டுமொத்தமாக எல்லோரும் மோசம் என்று சொல்லும் ஒரு செயலின் பின்னால், சிலசமயம் இருக்கும் ஒரு பரிவு. சுந்தரி வெளியில் சொல்லாதவரை ரவி செய்தது எதற்கு என்று யாருக்கும் தெரியாது.
மணியின் கதைகளை அதிகம் படிக்கும் ஆண்கள் யாருமே பெண்களை ஜாக்கிரதையாக அணுக முடிவு செய்திருப்பார்கள். வாசிப்பவர் பெண்களாக இருக்கும் பட்சத்தில் நூற்றாண்டுகளாக இருக்கும் ஜாக்கிரதை உணர்வின் திரியைத் தூண்டி விட்டுக் கொள்வார்கள். அதே சமயத்தில் பாவப்பட்ட பெண்களும் இவர் கதையில் அடிக்கடி வருவதுண்டு. கொச்சையான பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டு, பலநேரம் இணங்கிக் கொண்டு, சிலநேரம் நழுவிக் கொண்டு எப்படியோ வாழ்க்கையைக் கடத்துகிறார்கள்.
திரைத்துறை இவரது அநேகமான கதைகளுக்கு backdrop. திரையுலகின் இரகசியங்கள் பல கதைகளாகிப் போகின்றன. அபிதாவில் இருந்து எத்தனையோ கதைகளில் அம்மாவின் சாயலில் மகள், என்றாலும் நாதம் என் ஜீவனே பாட்டுடன் வரும் கதை புதிய பரிமாணத்தை ஏற்படுத்துகிறது. தசரதம், தடம் பார்த்து நின்றேன், ஆஷஸ் அண்ட் டைமண்ட்ஸ் கதை எல்லாம் உண்மையிலேயே சினிமா உலகில் நடந்தது தான் என்று யாரேனும் ஒருநாளில் சொல்லவும் கூடும்.
அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று கதையில் சம்பந்தப்படாத நாம் சுதாரிப்பாக இருப்போம், ஆனால் யார் பாதிக்கப்படப் போகிறார்களோ அவர்கள் அசட்டையாக இருப்பதை நம்மைப் பார்க்க வைப்பது இவரது இன்னொரு யுத்தி. உதாரணத்திற்கு ஹேப்பி நியூஇயர் தேவகி.
முத்தம் கொடுக்குமுன் எங்கே இருக்கீங்க என்று கணவனை விசாரிக்கும் அப்பாவி.
எல்லா எழுத்தாளர்களுக்கும் விட்டகுறை தொட்டகுறையாக முன்னோர் யாருடைய சாயல் இருக்கிறதோ இல்லையோ, இவருக்கு சத்தியமாகக் கிடையாது. தனித்துவமான எழுத்து. எடிட்டிங் கத்தரி காட்சிகளைக் கத்தரிப்பது போன்ற கதை சொல்லும் பாணி. மங்களம் முதல் வரியில் பாவாடையை நெஞ்சில் ஏற்றிக் கொண்டு வெளியே வருகையில் குணா பார்த்தான் என்று முதல் பக்கத்தில் சொல்லிவிட்டு, மூன்றாம் பக்கத்தில் எழுத்தாளர் வாசகருக்கு மறந்திருக்கும் என்று நினைவுபடுத்தி எழுதுவதைப் படித்துப், பழக்கப்பட்ட வாசகர்கள், முதலில் மணியைப் படிக்கையில் தாவித்தாவிச் செல்லும் கதை சொல்லும் பாணியைப் பார்த்து அச்சப்பட்டு விட்டுவிடாது தொடர்ந்து படித்தால் பழகிக் கொள்ளலாம்.
மணியின் கதாபாத்திரங்களுக்கு Sexual poverty என்பது இருக்காது, ஆனால் பலர் வயிற்றுப்பசியின் அகோரகொடுமையை உணர்ந்தவர்களாக இருப்பார்கள். எளிதில் இணங்கக்கூடிய பெண்கள் அடிக்கடி வருவார்கள். ஆனால் இதயத்தைப் பூட்டி அதற்குள் யாரோ ஒருவரை வைத்திருப்பார்கள். The Seven Husbands of Evelyn Hugoவில் Evelyn எண்ணற்ற ஆண்பெண்களுடன் உறவுகொண்டு விட்டு, கடைசியில் நான் எப்போதும் உண்மையாய் காதலித்தது என்று ஒரு பெண்ணை அடையாளம் காட்டுவாள். இது போல் உலகமா, மனிதர்களா என்று மணியின் கதைகளைப் படித்து ஆச்சரியப்படுபவர்கள் பாக்கியவான்கள். தர்மர் பார்த்ததைப் போல உலகில் நல்லவற்றை மட்டுமே பார்க்கும் சித்தி அவர்களுக்குக் கூடிவந்திருக்கிறது.
பிரதிக்கு:
யாவரும் பப்ளிஷர்ஸ் 90424 61472
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.160