டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்:
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர். கவிஞர், நாடகாசிரியர். பதினைந்து நாவல்களை எழுதியுள்ளார். Problemski Hotel, The Misfortunates ஆகியவை இவரது முக்கிய நாவல்கள்.
லதா அருணாச்சலம் :
கவிஞர், மொழிபெயர்ப்பாளர். நைஜீரியாவில் ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்தவர். தீக்கொன்றை மலரும் பருவம் என்ற ஆப்பிரிக்க நாவலை மொழிபெயர்த்ததுடன், பல ஆப்பிரிக்க எழுத்தாளர்களை சிறுகதைகள் மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்தவர்.
செல்வம் அருளானந்தமுடைய எழுதித் தீராப் பக்கங்களில் ஈழத்தில் இருந்து பெல்ஜியம் சென்று அங்கிருந்து வேறுநாடுகளுக்குப் புகலிடம் போவதைப்பற்றிக் கூறியிருப்பார்.
Belgium பல ஆண்டுகளாக Asylum seekersக்கு ஒரு Transit point ஆகவே இருந்து வருகிறது.
அங்குள்ள சட்டம் புகலிடம் தேடுவோருக்கு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதால் பல புகலிட மையங்களை அங்கே நடத்துவதும் தவிர்க்க முடியாததாகிறது. அப்படியான ஒரு இல்லத்தில் (பிராப்ளம்ஸ்கி விடுதி) இருப்பவர்களைப் பற்றிய கதையே இந்த நாவல்.
உயிர் தப்பிப் பிழைப்பது ஒன்றே வாழ்வின் குறிக்கோள் என்றான பின், அறநெறிகள், சமூக மதிப்புகள், இன்னபிற விழுமியங்கள் அர்த்தமில்லாது போகின்றன. சமீபத்தில் பாக்தாத்தை விட்டுத் தப்பிக்க மக்கள் செய்த முயற்சிகளைப் பார்த்தோம். கடினமான தட்பவெப்பநிலையில் நீண்ட தூர பயணத்திற்கு தற்கொலை முயற்சியில் சென்ற, பதிமூன்று அகதிகளில் எட்டுபேர் சடலமானதும், எஞ்சிய, உயிர் ஊசலாடும் ஐந்து பேருக்கு அயர்லாந்த் உடனடியாக அகதி அந்தஸ்து வழங்குவதாக நாவலில் வருவதை மனிதாபிமானம் தோற்றதாகச் சொல்வதா இல்லை ஜெயித்ததாகச் சொல்வதா?
பெல்ஜியம் மட்டுமல்ல, எந்த நாடாகினும் சொந்த நாட்டவரை மணம் செய்து கொண்டால், அந்த நாட்டு பிரஜையாகி விடலாம். சட்டப்படி மிகவும் எளிதான வழி. ஆனால் நடைமுறையில் அதே கடினமான வழி. ஏராளமான மக்ஸூத்கள் ஏராளமான நாடுகளில் அந்த வழியில் முயற்சிக்கிறார்கள். அதே போல், வெளிநாடுகளின் இன்னல்கள், அவமானங்கள், வலிகளைத் தாங்கிக் கொண்டு லிடியாக்கள் அவர்களது அம்மாக்களுக்கு யாவும் நலமே என்பதை அவ்வப்போது சொல்கிறார்கள்.
ஒருவரின் பார்வையில் சொல்லப்பட்டாலும், இவை பலருடைய கதைகள். ஏதோ ஒரு அதிசயத்தில் கனவுநாட்டில் தங்க அனுமதி கிடைத்துவிடாதா என்ற கற்பனையுடன், கடைசியாக எங்கிருந்து வந்தார்களோ அந்த நாட்டுக்கே வலுக்கட்டாயமாக அனுப்பப்படப்
போகும், நப்பாசை மனிதர்களின் கதை. இல்லம் என்பது அடிப்படை வசதிகளையும் அளந்து பார்த்து செய்யும் நிலையில் இயங்கக்கூடியது. குடும்பம் மொத்தத்தையும் வன்முறையில் இழந்து முன்பின் அறியாத நாட்டில் புகலிடம் தேடி, எப்படியும் வாழ்ந்துவிட வேண்டும் என்ற வேட்கை, ஆதிமனிதனின் போராட்டகுணத்தின் எச்சம்.
மொழிநடையால் மட்டுமல்ல, உள்ளடக்கத்தாலும் கரடுமுரடான நாவல் இது. இதில் வரும் மனிதர்கள் ஆங்கிலேய கனவான்கள் போன்ற மொழியை உபயோகிப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கக்கூடாது. Dark humourம் Satireம் கலந்த மொழிநடை வேண்டுமென்றே உபயோகிக்கப்படுகிறது. அது நகைச்சுவையாக முடியாமல், நிலைமையின் தாக்கத்தைத் தீவிரமாக்குகிறது. ஆசிரியர் விரும்பியதும் அதுவாகவே இருக்கும். இந்த நூலை மொழிபெயர்ப்பது மிகவும் சவாலானது. ஆங்கிலமொழியில் எளிதாக F…off என்பதை தமிழில் கௌரவமாக எப்படி சொல்வது? Profanity மட்டுமல்ல, சற்று கவனம் தவறினாலும் நழுவவிடக்கூடிய Satirical languageஐ இன்னொரு மொழிக்கு எடுத்துச் செல்வதும் எளிதல்ல. இரண்டையும் திறம்பட எதிர்கொண்டு, தமிழுக்கு அதே அதிர்வை கடத்திக் கொண்டு வந்திருக்கிறார் லதா அருணாச்சலம். இன்னொரு மைல்கல் இவர் மொழிபெயர்ப்பில்.
இறுதியாக, புகலிடம் தங்குவோரைப் பற்றி எழுத ஒரு பத்திரிகை கேட்டுக் கொண்டதால்
Investigative Journalist ஆன டிமிட்ரி, ஆரென்டக்
என்னும் புகலிடத்தில் பலநாட்கள் அவர்களுடன் தங்கியிருக்கிறார். நூலில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு வரிகள் இவை:
” இந்த விஷயத்தில் மேலும் ஆழ்ந்த அறிவு வேண்டுமென்பதற்காகப் புகலிடம் தேடி வருபவர்களைத் தங்க வைக்கும் ஆரென்டக் நிலையத்தில் பலநாட்களைக் கழித்தேன். அந்த அனுபவம் மட்டும் இல்லையென்றால்,
இந்தப் புத்தகத்தை எழுதுவதற்குரிய திறனோ, தகுதியோ, அல்லது உரிமையோ எனக்குக் கிடைத்திருக்காது”.
பிரதிக்கு:
காலச்சுவடு 4652-278525
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 150.