ஆசிரியர் குறிப்பு:

விருதுநகர் மாவட்டம், கள்ளிக்குடியில் பிறந்தவர். மதுரையில் வசிக்கும் இவர் நவதானிய வணிகர். ஏற்கனவே ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது. இது சமீபத்தில் வெளிவந்த இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.

ஆ.மாதவனின் செல்வி ஸ்டோர் அனுபவம், தமிழுக்குப் பல சாலைத்தெரு கதைகளைத் தந்தது. அந்தக்கதைகளின் Authenticityக்குப் பின் அவருடைய நீண்ட அனுபவம் பதுங்கியிருந்தது. திருச்செந்தாழையின் வணிகஅனுபவங்கள் நூறு மண்டிக் கதைகளை வழங்கும் திறனுள்ளது. ஒருவருடம் முன் பார்த்த சிறுவன் சென்டிமீட்டரில் வளராமல் முழுதாக ஒருஅடி வளர்ந்திருந்தால் என்ன அதிர்ச்சி வருமோ, அதுவே திருச்செந்தாழையின் கடந்த இரண்டு வருடக்கதைகளைப் படித்தவரின் எதிர்வினையும்.

இலக்கியம் என்ன செய்யும்? ஏதோ ஒரு புள்ளியில் ஒரு கதாபாத்திரத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்கிறீர்கள். அது Pulp fiction கதாநாயகி, எப்படியும் காதலனுடன் சேர, வேண்டும் மனநிலை அல்ல. திரையில் கதாநாயகியை ஆறத்தழுவிய கதாநாயகனின் இடத்தில் சிலகணங்கள் தன்னை இருத்திக்கொண்டு
மகிழ்வதும் அல்ல. ஜே.பி தளர்ந்து நடக்கையில் உங்களை அறியாமல் வருத்தத்துடன் I am sorry என்று மனதுக்குள் உணர்கிறீர்களே, அந்த கணங்களை உங்களுக்குத் தருவது. ஒரு செயலுக்கு நூறு காரணங்கள். ஆனால் எதுவும் செய்யமுடியும் ஆனால் எதுவும் செய்வற்கில்லை என்ற நிலையை, மரணவீட்டில் இருக்கும் ஒரு விதமான பதகளிப்பை, ஒருவரிகூட விளக்காது, வாசகருக்கு முழுமையாகக் கடத்தும் போது இலக்கியம் வெற்றியடைகிறது.

திருச்செந்தாழைக்குள் இருக்கும் கவிஞரை, அவரால் உரைநடை எழுதும் போதும் அடக்கி வைக்க முடியவில்லை. மொழி அழகை ரசிக்க இந்தத் தொகுப்பில் நிறையவே வரிகள் உண்டு. ஆனால் ” சீக்கிரமே இருள் கவியத் துவங்கிவிட்ட வானத்திற்குக் கீழே கொன்றை மரம் கிளையெங்கும் கங்குகளென மலர்ந்திருக்கும் பூக்களோடு நின்றிருந்தது” என்ற வரி எந்த சந்தர்ப்பத்தில் சொல்லப்படுகிறது என்பதைப் பார்க்கையில், கங்கு உரைநடையாளனுக்கு சொந்தமான வார்த்தையல்ல என்பது புரிகிறது. கங்கு போல் உள்ளொழிந்து தகிக்கும் காமம்.

மண்டி குறித்து பல கதைகள். வியாபார நுணுக்கங்கள், தந்திரங்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் என்று மண்டி மக்களின் அசல்வாழ்க்கை நமக்குப் படம் போட்டுக் காட்டப்படுகிறது. அடுத்தவரின் இழப்பிலேயே தன்னுடைய லாபத்தை சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தம் வியாபாரிகளை ஏதோ ஒரு வகையில் Ruthless ஆக்குகின்றது. வெற்றிகள், வழிமுறைகளில் இருக்கும் அழுக்கை சுவடில்லாது துடைத்து விடுகின்றன. வியாபாரம் வாய் சாமர்த்தியத்தையே முதல் முதலீடாகக் கொள்வது. அது இந்தக் கதைகளின் உரையாடல்களில் தெள்ளத் தெளிவாக வெளியாகுகிறது. லீலாவின்
“கரிசனத்துக்கான முதலீடு” என்ற இரண்டு வார்த்தைகளில் ஒரு சம்மதமும், ஒரு காறித்துப்புதலும் சேர்ந்தேயிருக்கிறது.

Betrayal பல கதைகளில் வருகின்றது. அண்ணன் தம்பியை ஏமாற்றி சொத்து முழுவதையும் அபகரிக்கிறான். முதல் கதையும், இரண்டாம் கதையும் திருமணம் தாண்டிய உறவை பெண்கள் ஏற்படுத்திக் கொள்வதை ஆண் பார்வையிலும், பெண் பார்வையிலும் சொல்லிய கதைகள். காப்பு கதையில் அதுவே நுட்பமாக நடக்கிறது. கண்கட்டி வித்தையாக கணவனின் கண்முன் பல ஆண்டுகளாக நடக்கிறது.

பத்தொன்பது கதைகள் அடங்கிய தொகுப்பு இது. த்வந்தம், ஆபரணம், காப்பு, வேர் போன்ற வெகு நுட்பமான கதைகளும் இருக்கின்றன. சராசரிக் கதைகளும் இருக்கின்றன.ஆனால் எல்லாக் கதைகளிலும் இருக்கும் ஒற்றுமை, அந்த பாத்திரங்களின் உணர்வை அதிகமான வார்த்தைகள் இன்றி வாசகர்களுக்கு அப்படியே கடத்தும் வித்தை. பகவதி முதுகைப் பார்த்து புன்னகைப்பது வார்தைகளால் எதுவும் விளக்காமலேயே மொத்த கதையையும் சொல்லி விடுவது போல. த்வந்தத்தில் அண்ணன் தம்பிக்கு இடையேயான யுத்தத்தில் அண்ணன் எளிதாகத் தம்பியை வீழ்த்துவதைக் கதை சொல்லும் போதே, கண்ணுக்குத் தெரியாத இன்னொரு யுத்தம் பின்னணியில் நடக்கிறது. வென்றவர் அல்லது லென்றதாக நினைத்தவர் தோல்வியை ஒத்துக்கொள்ளும் யுத்தம். எத்தனை அழகியல் இந்தக் கதையிலும், ஆபரணம் கதையிலும். திருச்செந்தாழைக்குள் ஒரு Gifted writer இருக்கிறார். சரியாக உபயோகித்தால் பல உயரங்களை எளிதாகத் தொடக்கூடிய எழுத்தாளர் அவர்.

பிரதிக்கு:

எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ. 275.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s