ஜே.எம். கூட்ஸி:
தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர். பெரிதும் விமர்சிக்கப்பட்ட,/பெரிதும் மதிக்கப்பட்ட எழுத்தாளர். தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். 2003ல் நோபல், இரண்டு புக்கர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர். பல நாவல்களை எழுதிய இவரது Masterpiece, Disgrace என்ற நாவல். அதன் தமிழ் மொழிபெயர்ப்பு இது.
ஷஹிதா:
சென்னையில் பிறந்தவர். பள்ளியில் ஆங்கில ஆசிரியையாகப் பணி புரிந்தவர்.
Alice Walker, Khaled Hosseini போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்பைத் தமிழுக்குக் கொண்டு வந்தவர். சிறந்த நூறு நூல்களை யார் பட்டியலிட்டாலும் அதில் கண்டிப்பாக இடம்பெறும் நூல் இது.
Apartheidக்குப் பிந்தைய காலகட்டமே இந்த நாவலின் களம். நிறவெறியற்ற, பாலின வேறுபாடற்ற சமூகத்தை, உருவாக்குவதே இலட்சியம் என்ற பாதையில் தென் ஆப்பிரிக்கா எப்படி தவறியது என்பதே இந்த நாவல் எடுத்துக்காட்ட விரும்புவது. வெள்ளையரான கூட்ஸி, ஒரு தலைப்பட்சமாக இந்த நாவலின் களத்தை சித்தரித்திருக்கிறார் என்பதே அவர் மேல் வைக்கப்பட்ட விமர்சனம். ஆனால் தென்னாப்பிரிக்காவில் மட்டுமல்ல, இங்கிலாந்தில், அமெரிக்காவில் இருக்கும் கறுப்பரின குடியிருப்புகளில் தனியாக நுழையும் வெள்ளையருக்கு எப்படி வரவேற்பு இருக்கும் என்பது இன்றைக்கும் நிதர்சனம்.
காமம் என்ற மையஅச்சில் சுழலும் நாவல் இது. இருமுறை விவாகரத்து செய்த, ஐம்பது வயதைத் தாண்டிய பேராசிரியர் லூரியின் காமம். விபச்சாரிகள், One night stands இவற்றைத் தாண்டி, அடுத்த நிலைக்குப் பயணம் செய்யும் போது அவருக்கு அலுவல் ரீதியாக அவமானத்தையும், புதிய பாதையாக ஆத்மவிசாரத்தையும் தேர்ந்தெடுக்கச் செய்கிறது. காமம் அவ்வளவு எளிதில் தோல்வியை ஒப்புக் கொள்ளும் எதிரியல்ல. மன்னிப்பு கேட்க சென்ற இடத்தில் மெலினியின் தங்கை மற்றும் அவளது அம்மா உருவம் குறித்த லூரியின் கண்ணோட்டம் மட்டுமல்ல, கடைசியில் யாருடைய மார்பை லூரி உற்றுப் பார்த்தார் என்பது வரை காமம் அதன் கிடுக்கிப்பிடியில் லூரியை வைத்திருக்கிறது.
அவமானம் இந்த நாவலின் மையக்கரு. ஒன்றல்ல அவமானம், எனவே அவமானங்கள். முதலில் சொரயாவிடமிருந்து. அடுத்து மெலினாவிடமிருந்து. பின் வேலைபார்க்கும் இடத்தில் சகஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம். பின் ரோஸலிந்த்திடம். பின் பெட்ரூஸிடம். பின் லூஸியிடம். பின் திருடர்களிடம். லூரி ஒவ்வொரு அவமானத்தையும் எதிர்கொள்ளும் விதத்திற்கும், லூஸி தன்னுடைய அவமானத்தை எதிர்கொள்ளும் விதத்திற்கும் இருக்கும் வித்தியாசம் முக்கியமானது. வருத்தப்படுவதற்கு அப்பால், கடவுள் உங்களிடம் எதை எதிர்பார்க்கிறார் என்ற ஐசக்ஸின் கேள்வியில் அந்த வித்தியாசத்திற்கான காரணம் இருக்கிறது.
லூரியைச் சுற்றியே மொத்தக்கதையும் நகர்கிறது. லூரி ஒரு பாசாங்குக்காரர் மட்டுமல்ல, Self deceiver. மெலினாவின் Rapeம், லூஸியின் Rapeம் சம்மதத்தைத் கோரவில்லை என்ற வகையில் ஒன்றே தான். சூழலும், பாதிக்கப்பட்டவர்களின் எதிர்வினையும் தான் முற்றிலும் வேறு. இரண்டாவது rape ஒரு Poetic justice என்று அதனை மலினப்படுத்த முடியாது. மகள்களை பெற்ற தந்தைகளால் லூரியின் எண்ணஅலைகளை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ள முடியும்.
பைரனும் அவரது காதலி தெரஸாவும் நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள். லூரி, பைரனை இசைவடிவில் கொண்டு வர நினைப்பது, Glorify செய்வதில் உளவியல் காரணம் இருக்கிறது. பைரனின் காஸனோவா பிம்பத்தை லூரி கடன் வாங்கிக் கொள்கிறார். சிலநேரங்களில் தெரஸாவுடன் நேரடியான உரையாடலில் ஈடுபடுவதும் இதனாலேயே.
இந்த நாவலை பலவிதமாக அணுகலாம். முதலாவது அரசியல் ரீதியாக. இரண்டாவது நிறவெறியின் சீசா வேறொரு பக்கம் தாழ்வதை. அடுத்தது தந்தை- மகள் உறவு சிக்கல்களை. இன்னொரு வகையில் இது உளவியல் நாவல். லூரியின் ஒவ்வொரு படிகளையும் உற்றுப் பார்த்தால், காமம் செறிவூட்டுகிறதா அல்லது அனுபவங்கள் செறிவூட்டுகிறதா? விசாரணையின் பொழுது மன்னிப்பு என்ற வார்த்தையை உச்சரிக்கத் தயங்கிய லூரியை நெற்றி தரையில் பட மன்னிப்பு கேட்க வைத்த மாற்றத்தின் பெயரென்ன?
2008ல் அல்லது 2009ல் முதலில் இந்த நாவலைப் படித்ததாக நினைவு. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அடுத்தடுத்த காட்சிகள் பக்கங்களைப் புரட்டுமுன் மனதில் தெரிகின்றன. 2012ல் கூட்ஸி குறித்த சிறப்பான பதிவைத் தோழர் R.P. ராஜநாயஹம் எழுதியிருந்தார். அவர் கூறி பத்தாண்டுகள் கழித்து தமிழில் வருகிறது. (ஆர்வமுள்ளோர் படிக்கப்பதிவு கமெண்ட்டில் இணைக்கப்பட்டுள்ளது) கூட்ஸியின் மொழி நுட்பமும், செறிவும் கொண்டது. அதைத் தமிழுக்குக் கொண்டு வருவது உண்மையிலேயே சவாலானது.
ஷஹிதா தன்னுடைய முதல் நாவல் மொழிபெயர்ப்பிலேயே தன்னிருப்பை பலமாக வெளிக்காட்டியவர். புகழ்பெற்ற இரண்டு எழுத்தாளர்களின் புகழ்பெற்ற நூல்களை மொழிபெயர்ப்பதென்பது, ஒரு அழுத்தத்தைத் கொடுக்கக்கூடியது. பலரும் படித்திருக்க வாய்ப்பிருக்கும் நூலில் பலரது ஓப்பீடும் தவிர்க்க முடியாதவை. அவற்றை எல்லாம் தாண்டி இவர் வெகுதூரம் பயணம் செய்து வந்துவிட்டார். இந்த நூலிலும் மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது. குறிப்பாக விசாரணையில் நடக்கும் உரையாடல்கள், லூரிக்கும் லூஸிக்குமான அர்த்தம் பொதிந்த உரையாடல்களை முதல்முறை படிப்பது போல் ரசித்தேன்.
இது போன்ற நாவல்களை சகலசிரமங்களுடன் மொழிபெயர்த்து தமிழுக்குத் தருபவர்கள் உண்மையிலேயே தமிழ் இலக்கியத்திற்கு பரிசளிப்பவர்கள். ஷஹிதாவின் அடுத்த மொழிபெயர்ப்புகளுக்காக இதைச்சொல்ல வேண்டியதாகிறது. பத்தொன்பதாம் பக்கத்தில் வரும், ” என்னவென்றால், பேச்சின் தோற்றுவாய் பாடலிலும்……….”
என்பது போன்ற வெகுசில வரிகள் அவரது முந்தைய நூல்களில் இல்லாத வகையில் இதில் வந்திருக்கின்றன. அவை யாரையும் எங்கும் கொண்டு போய் சேர்ப்பதில்லை, அர்த்தத்தைத் தேடியலைபவை. ஷஹிதா அதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும், இவரிடமிருந்து வர வேண்டிய நல்ல நூல்கள் தமிழுக்கு இன்னும் நிறையவே இருக்கின்றன.
பிரதிக்கு:
எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ. 399.