ஆசிரியர் குறிப்பு:
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள கரட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர். ஸ்டேட் பேங்கில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். ஏற்கனவே எட்டு நாவல்களை எழுதிய இவரது ஒன்பதாவது நாவல் இது.
கவிதைகள் எழுதிய யுவனில் இருந்து கதாசிரியர் யுவன் சந்திரசேகர் பெரிதும் வேறுபட்டவர். நாவல் இவர் அடித்து ஆடும் களம். Spontaneous flow, நிற்காமல் ஓடும் ஓட்டம் என்பது போல் எதை வேண்டுமானாலும் இவர் எழுத்துடன் ஒப்பிடலாம். இவரை இது வரை படித்திராதவர்கள் வெளியேற்றம் அல்லது குள்ளசித்தன் சரித்திரமிலிருந்து தொடங்குங்கள்.
வயதான பின் மாமா, பழைய சாயலின் கேலிச் சித்திரம் போல் காட்சி அளிப்பது, அன்சாரியின் மனைவி ஆள் உயரத்துக்கு ரோஜாப்பூ நடந்து வருவது போல் வருவது,
சமுத்திரம் தன்னோட ஆழத்தை எல்லாரையுமா பார்க்க விடும்?, எழுத முற்பட்ட மாத்திரத்தில், ஞாபகத்தின் தூர்ந்த சுனைகள் அனைத்தும் தாமாகவே திறப்பதும், ஊறுவதும் பேராச்சிரியமாய் இருக்கிறது, சேர்ப்பதுக்குத் தான் கனகாலம் பிடிக்கும் துறப்பதற்கு ஒரு கணம் போதுமே போன்ற வரிகள் போல் யுவன் சந்திரசேகரின் Touches நூலெங்கும்.
ஒரே ஊரில் ஒரே நேரத்தில் ஒரே ஜாடையில் பிறக்கும் இருவரில் ஒருவர் நடிகராகி திடீரென்று காணாமல் போவதும் இன்னொருவர் உயர் போலீஸ் அதிகாரி ஆகி அவரைத் தேடுவதும் தமிழ் திரைப்படத்திற்கான சமாச்சாரம். இல்லை தேடலில் விசாரணைத் தொனியைக் கூட்டினால் திரில்லர் நாவலாக்கலாம். யுவன் சந்திரசேகர் இதை ஒரு நினைவுத் தொகுப்பாக, ஆர்வத்தேடலாக, மர்மமுடிச்சை அவிழ்க்கும் பயணமாக மாற்றியிருக்கிறார்.
வாசகர்களுக்கு இந்தப்பிரதி உண்மைக்கதை என்ற ஐயம் வர என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தும் செய்திருக்கிறார் யுவன் சந்திரசேகர். கதைசொல்லி பிறந்தது 1961 வருடம், பணிபுரிந்தது வங்கியில், எழுதுவது கதைகள், பணியிலிருந்து விருப்ப ஓய்வு என்று ஆசிரியருக்கும் கதைசொல்லிக்கும் நூறு ஒற்றுமைகள். நாவல் நெடுகிலும் வரும் அடிக்குறிப்புகள் உண்மையான வாழ்க்கை வரலாற்றில் மட்டுமே உபயோகிக்கப்படுபவை. புனைவை, உண்மைக்கதை என நம்பவைக்கும் பரிட்சார்த்த முயற்சியே இந்த நாவல்.
சோமன் சிறுவயதில், பசித்த மானிடம் கணேசனை நினைவுபடுத்துகிறான். வளர்ந்த சோமனிடம் எம்.ஜி.ஆரின் சாயல் கொஞ்சம் தெரிகிறது. அன்சாரி, மாமா சங்கீதம் கேட்பவர்களாகவும், சோமன் நேரடியாக ஈடுபடுபவனாகவும் இருப்பதால் சங்கீதம் குறித்த பேச்சுகள் ஏராளம் இந்த நாவலில். சமயங்களில் தி.ஜா நாவலில் புகுந்தது போலிருக்கிறது.
நமது நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்கள் நம்மை Miss செய்யாமல் அவர்களது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தால் நாம் தொலைந்தவர்களா? இல்லை மனதில் நெருங்கி இருந்த போதிலும் அவர்களுக்கு நினைவுதவறி விட்டதென்றால்( Alzheimer) நாம் தொலைந்தவர்களா? இல்லை ஒரிடத்தில் தொலைந்து வேறிடத்தை அடைகிறோமா? ஆனால் தேடல் மட்டுமே இந்த நாவலல்ல. மாமா-மாமி, மாமா- அம்மா என்று எத்தனையோ உறவுகளின் சிம்பொனியும் நாவலில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
பிரதிக்கு:
Zero Degree Publishing 98400 65000
முதல் பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.300.