காக்கைப்பொன் – திருச்செந்தாழை:

ஒரு சிறுகதைக்குள் ஒரு நகரத்தில் வாழும் ஒரு சமூகத்தின் வாழ்க்கையை எளிதாகக் கொண்டு வந்திருக்கிறார் திருச்செந்தாழை.
எந்நேரமும் கேட்கும் தறியின் சத்தம் காதுகளுக்கும், இருண்ட வீடுகளின், வெளியில் பார்த்தால் அடையாளம் கண்டுகொள்ளமுடியாத, வெளிறிய முகங்கள் மனக்கண்ணிலும் வந்து போயின. ஆரம்பத்தில் சௌராஷ்டிரா மக்களில் ஒரு பிரிவு ஐயர் என்று போட்டுக் கொள்வதில் இருந்து அத்தனை செய்திகளும் தத்ரூபம்.
சித்திரைத் திருவிழாவின் பரபரப்பும் அது முடிந்து மதுரை அக்கடாவென்று நிம்மதியாவதும் அழகாக வருகின்றன. இரண்டுமுறை ஓடிப்போனவளை இணங்க வைப்பது எளிது என்ற விடலை மனப்பான்மையும், அந்த எண்ணத்தை வரவழைத்துத் தூண்டிவிட சல்லிகளின் சகவாசமும், குழந்தையாய் பார்த்து வளர்ந்தவனை என்றும் குழந்தையாகவே பார்க்கும் பெண் உளவியலும் கதையில் பின்னிப்பின்னி பின்னிப்பின்னி……..
மொழி என்பதும் சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம். திருச்செந்தாழைக்குக் கிடைத்திருக்கிறது. மஞ்சுவின் விழியோரத் துளிகளை என்னால் பார்க்க முடிகிறது.

சித்திரக்கூடம் – கமலதேவி:

பகையைப் பாசம் வெல்லும் கதை. கமலதேவியின் கதைகளில் கடந்தகாலமும் நிகழ்காலமும் தடயமின்றிக் கலக்கும். கலையை லோகாதய வாழ்வு கவ்விக் கொள்கிறது. அப்பாவிற்குத் தனக்குப்பின் குடும்பம் சரியப்போகிறது என்று தெரிந்திருக்கும் இல்லையா?

கோவா- கார்த்திக் பாலசுப்ரமணியன் :

தகவல்கள் கார்த்திக் பாலசுப்பிரமணியனின் கதைகளில் மிக முக்கியமானவை. Rental Car எடுப்பதாகட்டும், யார் ஓட்டுகிறார்கள் என்று சொல்வதாகட்டும், ஒரு வாகனம் மட்டுமே போகக்கூடிய சந்தைப் பற்றிச் சொல்வதாகட்டும், தொடர்ந்து பேசும் ராவ் சட்டென்று மௌனமாவதைச் சொல்வதாகட்டும் எல்லாமே கதைக்கு அதிக புரிதலை ஏற்படுத்தும் தகவல்கள். அது போலத்தான் இருவருக்கும் கார்ஓட்டத் தெரியும் போது எப்போதும் மேலதிகாரி வாடகை ஊர்தியை பெரும்பாலும் ஓட்டுவதில்லை. தன்மையில் கதை நகரும் போது கதைசொல்லி எல்லாவற்றையும் அவன் பார்வையிலேயே சொல்வான். ஆனால் எல்லாவற்றிற்குமே இரண்டு கோணங்கள் அல்லது இரண்டு லேயர்கள்இருக்கின்றன. வழமை போல் கார்த்திக்கிடமிருந்து மற்றொரு Sharp ஆன கதை.

துறப்பு- சுஷில் குமார்;

புத்தரைப் பார்க்க யசோதரா போகவில்லை,.புத்தரே தான் வந்தார். சித்தரும் அதையே தான் செய்கிறார். எத்தனை வருடமானாலும் என்ன உரு மாறிய போதும் கணவனைத் தெரியாது போகுமா! மீண்டும் ஒரு Open ending கதை. சுஷிலின் மொழிநடை இந்நநக் கதையை அழகாக்குகிறது.

காற்றில் எழுதிய ஓலை – எம்.கோபால கிருஷ்ணன்:

எழுதிஎழுதிப் பழகிய கைகளில் இருந்து மீண்டும் ஒரு நல்ல கதை. சென்னையிலிருந்து மதுரைக்கு அடுத்த மாதம் போவதற்கு, பத்துவேலைகளை மனதில் வைத்து கச்சிதமாக அத்தனையும் முடிப்பவர்கள் இருக்கிறார்கள். நமக்கெல்லாம் சாயங்காலம் ஒரு வேலையை நினைத்தால் மழைபெய்யும், வேறு வேலை வரும், எதுவுமில்லை என்றால் நம் தலையில் இடியாவது விழுந்திருக்கும். Unpredictabilityல் இருக்கும் சுவாரசியம் பலமான அடிவிழுந்தால் பஞ்சாய்ப் பறக்கும்.
ஊருக்கெல்லாம் ஆரூடம் சொல்லும் பல்லி தான் நினைவுக்கு வந்தது.

மலையைக் கடந்து வந்த கரடி – ஆலிஸ் மன்ரோ- தமிழில் இல.சுபத்ரா:

நாற்பதாண்டுகளுக்கும் மேலான மணவாழ்வில் அடிக்கடி ஏமாற்றிய கணவன்.
ஆனால் மனைவியை விட்டுப் பிரிய மனமில்லை என்பது ஒரு முரண். மனைவியின் சந்தோஷத்திற்காக அவள் தன்னைவிட்டுப் பிரியக்கூடும் என்ற வேலையையையும் செய்பவன். Alzheimerல் எல்லாவற்றையும் மொத்தமாக அழித்து புதிய ஆரம்பத்தை நாடும் மனைவி. உன்னதக் காதல்கள் மட்டுமல்ல சமயங்களில் இது போன்ற காதல்களும் விலைமதிப்பில்லாதவை. Another good one from the master and a good translation from சுபத்ரா.

உயர்ந்த மனிதர்கள் – வில்லியம் ஃபாக்னர்- தமிழில் கார்குழலி;

அமெரிக்க மக்களின் இரண்டாவது உலகப்போருக்கு முந்தைய சமூகத்தைப் பற்றிய கதை இது. அரசாங்க உதவிக்காகப் பொய்சொல்லும் மக்கள், போர் ஆரம்பிக்கவில்லையே எதற்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்ற மனப்பான்மை கொண்ட இளைய தலைமுறை, சமயசந்தர்ப்பம் இல்லாது Rule bookஐக்கையில் வைத்துக் கொண்டு அலையும் அதிகாரிகள் இவர்களுக்கு நடுவே பெரும்போருக்கு ஆயத்தமாகும் தேசம். ரஷ்யா ஒருவேளை ஜெர்மனியுடனும் ஜப்பானுடனும் சேர்ந்திருந்தால் அமெரிக்கா என்னவாகி இருக்கும் என்ற அசட்டு சிந்தனை அடிக்கடி வந்து போகும். எதையும் எதிர்பாராது அரசாங்க உத்தரவிற்காக சொந்தவிருப்பு வெறுப்பை மறந்து காரியத்தில் இறங்கும் பழைய போராளிகளால் தான் அமெரிக்கா நிமிர்ந்து நிற்கிறது என்பது அப்போதும் இப்போதும் மறுக்க முடியாத உண்மை. பாஃக்னரின் கணிப்பு மெய்யாகி இருக்கிறது. கார்குழலியின் மிக அருமையான மொழிபெயர்ப்பு.

திருமதி ஃப்ரோலாவும் அவரது மருமகன் திரு. போன்ஸாவும் – லூயிஜி பிராண்டெல்லோ- தமிழில் விலாசினி:

யாருடைய பார்வையில் பார்க்கிறோம் என்பதற்கு ஏற்ப உண்மையும் மாறுபடுகிறது.
மாமியாரைப் பொறுத்தவரை அவர் நம்புவதே உண்மை. மருமகனும் அப்படியே நினைக்கிறார். இருவருமே ஒருவருக்காக ஒருவர் தியாகம் செய்வதாக நம்புகிறார்கள். ஆனால் இருவரில் ஒருவர் சொல்வது, அவர்கள் நம்பிக்கொண்டிருப்பது போல உண்மையல்ல. அது யார் என்று தெரியாததால் இந்தக்கதை Open ended ஆகியிருக்கிறது. இரண்டு தரப்பு நியாயத்தையும் கேட்பவர்களுக்கு மனைவி/மகள் என்ன சொல்கிறாள் என்று கேட்கத் தோன்றுவதில்லை. விலாசினியின் தெளிவான, தங்கு தடையற்ற மொழிபெயர்ப்பு.

https://tamizhini.in/category/tamil/short-stories/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s