ஆசிரியர் குறிப்பு:
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர். வணிகவியலில் இளங்கலைப் பட்டமும், ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பும் படித்தவர். ஊடகவியலாளரான இவர், நேந்காணல்கள், மற்றும் கதை, கவிதைகள் எழுதிவருகிறார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு இது.
சமரசங்கள் செய்து கொள்வது என்பது நிம்மதியாக வாழ்வது. சுயபச்சாதாபம் ஏற்படாத வரைக்கும் செய்யப்படும் சமரசங்கள் தொந்தரவில்லாதவை.
” என் முதுகெலும்பு
இந்த வனத்தின் உயரம் குறுகிய
மரங்களுக்கு ஏற்றவாறு வளைந்து
போய்விட்டது
நான் இந்த வாழ்வை
எந்த அவசரமும் இன்றி
வாழ்ந்தாக வேண்டும்”
ஐம்பது கவிதைகளில் அநேகமான கவிதைகள், நான் உன்னைத் தேடுகிறேன், நீயே எல்லாம், நீ என்பது இனி நான் என்பது போன்ற கவிதைகள். நிஜவாழ்க்கை என்றாலும், கவிதை நூல் என்றாலும் முதன்முதலில் காதலை அதிகமாக சிந்துவது தவிர்க்க இயலாததாகிறது. அவசரமில்லை, காலம் நம் எல்லோருக்கும் ஆசான்.
விதவிதமான அசைவ உணவுகளை சமைப்பது ஒரு கலை என்னும் கவிதையை எப்படி வேண்டுமானாலும் Intrrpret செய்து கொள்ளலாம்.
” சந்தை என்பது
சாமானியர்களின் திருவிழா”
என்ற வரிகளில் குழந்தைப்பருவத்தில் வேடிக்கை பார்த்த மனநிலை ஒளிந்திருக்கிறது.
இந்தக்கவிதையில் வார்த்தைகள் சற்று மாறினாலும் இறைஞ்சல் தொனி மாறிப் பிரச்சாரமாக இருக்கும் வாய்ப்பிருக்கிறது.
அதுவாகாமல் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.
“கருத்தடைகளுக்குப் பக்கவிளைவுகள்
கூடும் நாளில் ஆயுளுக்கும்
பலகீனப்படும் விளைவுகளுக்கு பின்பு
சாவகாசமாகக் கருக்கலைப்புக்கு
வந்துநிற்கிறீர்கள்
கொஞ்சம் எங்களையும்
வாழவிடுங்களேன்”
புனைவுகள் வாசித்த அளவிற்கு கவிதை நூல்கள் வாசித்ததில்லை என்றிருக்கிறார் முன்னுரையில். கவிதை நூல்களைப் படித்துக் கவிதைகள் எழுதுவது என்பது சாத்தியமில்லை. கவிதை என்பது ஒரு உணர்வு வெளிப்பாட்டின் வடிகால். அதை எவ்வளவு ஆழமாக வெளிப்படுத்துகிறோம் என்பதில் தான் சில கவிதைகள் நல்ல கவிதைகளாகின்றன.
தேனி மாவட்டத்தின் நிலவியல் கூறுகளான வனம், மலை, பூக்கள் எல்லாம் கவிதைகளில் கலந்து வருகின்றன. அறுபது, எழுபதுகளில் பிறந்தவர்கள் விஸ்வநாதன், KVM போன்றவர்களை விட்டு வெளிவராமல் இருப்பது போல எண்பதுகளில் பிறந்தவர்களை இளையராஜா சிறைப்பிடித்திருக்கிறார். தனக்குத் தெரிந்த நிலத்தை, பாதித்த அனுபவங்களைக் கவிதையாக்கி இருக்கிறார். அம்மு ராகவ், வாசிப்பை விடாது சிக்கெ கொள்ள வேண்டும். தொடர்வாசிப்பு கவிதைகளை எப்படி கூர்மையாக்கும் என்பதை அதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.
பிரதிக்கு:
Be4 books 90424 61472
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ.120