இப்போது நீங்கள் பார்க்கும் பரபரப்பான ஆரப்பாளையம் பேருந்து நிலையமில்லை அப்போது. நினைவில் அதை அழித்து ஒரு பெரியதிடலைக் கற்பனை செய்யுங்கள். அந்தத்திடலின் நேரெதிரே தார்சாலையின் மறுபக்கத்தில் எங்கள் வீடு. இரண்டு சின்னஹால்கள் தான் வீடு. அதற்குள் மூன்று குழந்தைகள், பாட்டி, அப்பா அம்மா என ஆறுபேர் இருந்தோம். இப்போது இருக்கும் வீட்டின் வரவேற்பறையில் பாதியே அந்த வீடு, அதில் தனி ரூம் என்பதைக் கற்பனை செய்யவே வழியில்லை.
ஆந்திராவில் பேச்சிலர் வாழ்க்கையில் தனிவீடு எடுத்துத் தங்கியிருந்தாலும் நண்பர்கள் யாராவது, எப்போதாவது இருந்துகொண்டே இருந்தனர். இரவில் கூட தங்கியிருந்து, விடிகாலை வரை பேசிவிட்டு காலையில் போவார்கள். அது தவிர சீட்டு கோஷ்டி, ஷேர் மார்க்கெட் கோஷ்டி, ஆங்கிலநூல்கள் விவாதம் என்று வங்கிவேலையை பார்ட்டைம் செய்வது போல செய்துவந்த காலமது.
திருமணம் முடிந்ததும் தனிரூம் என்பது தன்னை அவமானப்படுத்துவது என்று துணைவியார் திடமாக நம்பியதால், தனிரூம் ஆசைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி விழுந்தது. அடுத்தவர் இரவில் நெடுநேரம் விளக்கை எரியவைத்து படித்தால், மின்விசிறியின் முழுஆற்றலை வெளிப்படுத்தும்படி சுற்ற விட்டால் தடிமனான போர்வையை கால் முதல் தலைவரை போர்த்திக் கொள்வதில் அசௌகரியம் கொஞ்சமுண்டு, ஆனால் அதற்காக கணவனுக்குத் தனிரூம் கொடுக்க முடியுமா என்ன?
பெண்ணுக்கு விவரம் தெரிந்த உடனேயே தனிரூமுக்குப் போய்விட்டாள். வெளியில் வரும் நேரம் முழுக்கவே அவளது சாய்ஸ். மற்ற நேரமெல்லாம் கதவு தாளிட்டு இருக்கும். படிக்கவோ அல்லது காலை ஆட்டிக் கொண்டே கண்ணை மூடிக்கொள்ளவோ, ஒன்றுமில்லாவிட்டால் மோட்டுவளையைப் பார்த்து சிரிக்கும் சுதந்திரத்தைத் தரும் தனிரூம். பக்கத்தில் இருந்து யாரும் ஏன் கண்ணை மூடுற, ஏன் சிரிக்கிற என்று கேள்வி கேட்காத சுதந்திரம்.
இப்போது இருவர் இருக்கும் வீட்டில் மூன்று ரூம்கள், அதில் இரண்டு எப்போதும் காலியாக இருக்கும். விருந்தினர் யாரும் வந்தால் தங்குவார்கள். மாமனார் வந்ததும் ஒரு ரூமில் நுழைந்து தாள்போட்டுக் கொண்டார். காலையில் ஏதோ எடுப்பதற்காகக் கதவைத் தட்டினேன். கதவைத் திறந்து இருபுருவத்தை வளைத்து என்னவென்று கேட்டது புரியாதது போல் வந்த வேலையை முடித்து வெளியே வந்தேன். எந்த வசதி வந்தாலும் தனிரூம் என்பதெல்லாம் கொடுப்பினை தான் போங்கள்!