அசை: மணி எம் கே மணி:
மணியிடமிருந்து ஒரு வித்தியாசமான கதை.
கொரானா காலத்துப் பயங்கள், அடுத்த மாநிலம் செல்வதில் இருக்கும் சிக்கல், கேரளத்தின் காட்சிகள், ஜாதிய அடையாளம் என்று பலவற்றை பேசிக் கொண்டே போகும் கதை, முக்கியமான ஒரு முடிச்சைக் கடைசியில் அவிழ்க்கிறது. அந்தநாள் படத்தில் ஒரே காட்சி திரும்பத்திரும்ப வரும். ஆனால் ஒவ்வொரு முறையும் அதில் வருபவர் பற்றிய உங்கள் கோணம் மாறும்.
அது போலவே சட்டென்று அம்மாவைப் பற்றிய சித்திரம் மாறுகின்றது. ஸ்கைலாப் பய நினைவுகள் மறந்துபோய் சுக நினைவுகள் முளைத்தெழுகின்றன. மணி போல் மனிதர்கள் யாருக்கும் தெரியாது மூடிவைக்கும் பக்கங்களைக் கடைவிரித்து எல்லோருக்கும் காட்டும் தமிழ் எழுத்தாளர்கள் குறைவு. அவருடைய நல்ல சிறுகதைகளில் இதுவும் ஒன்று.
ஈய உயிரியின் பாடல்: செந்தூரன் ஈஸ்வரநாதன்
காஷ்மீர் பற்றிய முழுப்புரிதல் இன்றி கதைகள் மற்றும் கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகுகின்றன. மோடியை எதிர்ப்போர் நீ யார் எங்களை ஆள என்கிறார்கள், காங்கிரஸை எதிர்ப்போரும் அதையே கூறுகிறார்கள். ஆனால் யாருமே இது எங்கள் நாடு இல்லை என்று சொல்வதில்லை. மதக்கலவரங்கள் மூளும் மற்ற பகுதிகளில் சிறுபான்மையினர் இது எங்கள் நாடில்லை என்று சொல்வதில்லை. ஆனால் காஷ்மீர் மக்களில் பெரும்பான்மையினர் இந்தியா எங்கள் நாடில்லை என்றே சொல்கிறார்கள், உணர்கிறார்கள், நம்புகிறார்கள். பகை நாட்டின் உதவியைக் கொண்டு நம்மை அழிக்க நினைப்பவர்களை எப்படி Kid glovesல் நடத்துவது? சுதந்திரத்திற்கு முன் பண்டிட்கள் எத்தனை சதவீதம் அங்கே இப்போது எத்தனை சதவீதம்? அவர்களுக்காக உங்களில் யார் அழப் போகிறீர்கள்!
கடவுள் இல்லாத இடம்: ஏஜே.டானியல்:
கதைக்குள் கதைக்குள் கதை. எங்கோ ஆரம்பித்து, எங்கெங்கோ சென்று, எதிர்பார்த்தமாதிரியே முடிகிறது. முரகாமி இதே பாணியில் நிறைய கதைகள் எழுதி இருக்கிறார். பழையவற்றை நினைவுகூர்வதில் ஒரு Depth இருக்கும், ஒரு விசயம் நுணுக்கமாக மறைந்து இருக்கும். இந்தக் கதையில் இரண்டுமேயில்லை.