ஆசிரியர் குறிப்பு:
மதுரையைச் சேர்ந்தவர். கடந்த பதினைந்து வருடங்களாக இலக்கிய இதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார். இது இவரது ஆறாவது தொகுப்பு.
கவிதைகள் அறிவுத்தளத்தில் தன்னை மறைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்துவதுண்டு. உணர்வுத்தளத்தில் பொங்கி எழுந்து, எழுதியவருக்கு வடிகாலாய், வாசிப்பவருக்கு உள்ளக்கிளர்ச்சியை ஏற்படுத்தி முடிவதுண்டு. காட்சிஇன்பத்தை அழகியலாய்க் கொண்டு சேர்ப்பதும் உண்டு. இது மூன்றாவது வகை.
மழைப்பாடல் பாடும் சிறுமி;
” மழை ஓய்ந்த பின்
இலையின் வழியே
சிறுமியின் முணுமுணுப்புகள்
அதே ராகத்தோடு
சொட்டு சொட்டாய் இறங்குகிறது
சாலையில் தேங்கும் நீரில்
சிறுமியின் பாடல்
ஒரு நிலவாக மிதக்கத் தொடங்குகிறது
இவ்விரவில்”
நாம் சோகமாக உணரும் போது எதிர்படுபவர் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றும். இவர் தன் வாதையைப் பறவையின் வாதைக்குக் கடத்துகிறார்.
” வழிதெரியாப் பறவை ஒன்றின் நிழல்
இரவின் மடியில்
தலைசாய்ந்து கிடக்கிறது.
பகலின் ஒளி ஊடுருவிக் காய்ந்த
அதன் சிறகுகளில்
நீ அறியாத திசை ஒன்றின் பாடலை
ஒலித்துப்
பின் ஓய்ந்தது”.
பூனை கண்மூடி இருளைக் கொண்டு வரவில்லை. நடந்து நடந்து விடியலைக் கொண்டு வந்து சேர்க்கிறது.
” இறுக்கத்தின் அமைதியில்
நெளிகிறது இரவு
நம்பும் என் காலடி ஒசைகளை
கேட்டு ரசித்த பூனை
புழுதிபடர்ந்த தெருப்பாதைகளை
கடந்து செல்கிறது
நடுச்சாம வீதிகளில்
நகரங்களின் அமைதியை
பார்த்தபடி
விழித்திருக்கும் நிலவை
பாலென நக்கிக் குடித்த படி
வெளியேறிக் கொண்டிருக்கும்
அதன் தடங்களுடன்
விடிந்திருந்தது பொழுது
என் வாசல் அருகே”
இதுபோன்ற வெகு சில கவிதைகளிலேயே தன்மையைப் பயன்படுத்துகிறார். அநேகமான கவிதைகளில் அவன், அவள், நீ என்று சுட்டப்படுகிறது. இந்தக் கவிதையில் கூட ஏதோ ஒரு காரணத்தினால் இறுக்கம், தூக்கம் வரவில்லை, குட்டி போட்ட பூனையாக நடந்தேன் என்று நாம் சொல்வோம். இவர் பூனையை நடக்கவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார். பெரும்பாலும் இவர் கவிதைகளில் புறக்காட்சிகளின் வழியாக அகம் வடிவம் கொள்கிறது. என்னை ஏமாற்றினாய், காக்க வைத்தாய், பேச மாட்டேன் என்கிறாய் என்பது போல உணர்வை நேரடியாகச் சொல்லும் ஒரு கவிதை கூட இந்தத் தொகுப்பில் இல்லை.
வாழ்வை அதன் போக்கில் போகவிட்டு கவிதையை என் போக்கில் எழுதுகிறேன் என்று முன்னுரையில் இவர் கூறியிருப்பது உண்மை. தன்னைப் பாதித்த விசயங்களையே இவர் எழுதியிருக்கிறார். கொரானா குறித்த கவிதைகளும் சில வந்து போகின்றன. அனுபவங்கள் கவிதையாகும் போது, ஒத்த அனுபவம் கொண்டவர்களால் அவற்றை நெருக்கமாக உணர முடியும். உதாரணத்திற்கு சுவர் பாதுகாப்பு என்று எழுதியிருக்கிறார். வெட்டவெளி பாதுகாப்பில்லை தான். ஆனால் துரத்துபவனிடமிருந்து ஓடுபவனுக்கு சுவர் தடை, வெளி பாதுகாப்பு. ஆக, கவிதைகள் உரையாடலை நடத்த ஒரேஅலைவரிசை என்பதும் தேவைப்படுகிறது. மொழியைப் பிடிமானமாகப் பற்றிக்கொண்ட இவரது பயணம் தொடரட்டும்.
பிரதிக்கு :
கடல் பதிப்பகம் வெளியீடு 8680844408
விற்பனை உரிமை தமிழ்வெளி 9094005600
முதல்பதிப்பு நவம்பர் 2021
விலை ரூ.140