கேன்வாஸ் – கார்ல் மார்க்ஸ்:
ஓவியர்கள் புறக்காட்சிகளை ஒரு கேன்வாஸில் கற்பனை செய்வது இயல்பு. கதைப்படி முரளிதரன் ஓவியன் இல்லை.
எல்லாவற்றையும் அவன் கேன்வாஸிற்குள் கொண்டு வருவதில் தான் சிக்கலே ஆரம்பிக்கிறது. இதோ மேகலா தற்கொலை செய்யுமுன் அவள் முகபாவம்…. ஒரு கேன்வாஸ். அவள் உடலை சிதைமூட்ட எடுத்துப் போகிறார்கள்….. ஒரு கேன்வாஸ்.
கார்ல்மார்க்ஸின் மொழிநடையும், கதைசொல்லும் யுத்தியும் சிறப்பாக வந்திருக்கிறது. கடைசியாக ஒரு encounter கதைக்குப் பல பரிமாணங்களைக் கொடுக்கின்றது.
ஒத்தைத் தறி முதலியார்- எம்.கோபால கிருஷ்ணன்:
பல்லடம் அருகே பல வருடங்கள் முன்பு நான் பார்த்த ஒருவரை நினைவுறுத்தியது இந்தக் கதை. ஒரு முழுவாழ்க்கையை சிறுகதையில் கொண்டு வருவதில் சிறுகதை வடிவம் பாதிக்காமல் பார்த்துக் கொள்வதும் தனித்திறமை தான். திருப்பூர், கோயம்பத்தூர் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் முதலியாரை நன்கு புரிந்துகொள்ள முடியும்.
சனிக்கிழமை வாரக்கூலியை, அன்று முக்கிய வேலை இருந்தால் ஞாயிறுக்கு ஒத்திப்போடுவது என்பது போன்ற தகவல்களில் இருந்து எல்லாமே நடைமுறைக்கு சற்றும் மாறாமல் வந்திருக்கிறது. முதலியார் குறித்த நடைச்சித்திரம் தெளிவாக மனதில் விரிகிறது. ஒற்றைத்தறி முதலியார் அதிர்ஷ்டசாலி, குடும்பம் தளைத்தது. நான் சொன்ன பல்லடத்துக்காரர் ஈயார் தேட்டை தீயார் கொள்வர் என்பதை நிரூபித்து மறைந்தார்.
இந்த இதழில் வந்துள்ள எம்.கோபாலகிருஷ்ணனின் நான்கு நாவல்கள் பற்றிய கட்டுரையைத் தவறவிடாதீர்கள்.
நீமோ – யோகேஷ் ரகுராமன்:
தெரிந்த விசயங்களை எழுதாமல் புதிதாக எழுதி Impress செய்யவேண்டும் என்று நினைக்கும் போது சிக்கல் ஆரம்பித்து விடுகிறது. அந்தமான் நேரமும் ISTயும் ஒன்றே. இல்லை நான் போகும் தூரத்தைச் சொன்னேன் என்றால் தலைநகரில் இருந்து
Port Blair நாலுமணிநேரம். சிப்பி மெமரி கார்டைக் கவ்விக் கொள்ளும் காட்சியை இப்போதெல்லாம் நாடகத்தில் வைக்கவும் யோசிப்பார்கள். தாம்பத்யத்தின் சுருதிபேதத்தை சொல்லவரும் கதை, இது போன்ற புறத்தகவல்கள்களால் அழுத்தத்தை இழக்கிறது.
முகம்- எம்.கே.மணி:
நாம் எல்லோருமே சாகும்வரைக்கான நினைவுகளாய் சிலவற்றைப் பத்திரப்படுத்திக் கொள்கிறோம். நாம் சாகும் வரை நினைவுகளில் இருப்பவரும் சாவதில்லை. இடங்கள் மனிதர்களை நினைவுபடுத்தும் கதையாக இது முடியாமல் பலவிதமான உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்கிறது. சின்னத் தொடுகை கூட வேண்டியதில்லை, பிரத்தியேகப் புன்னகையை, வாத்ஸல்யம் பொங்கும் பார்வையை நினைவுப்பேழையில் பத்திரப்படுத்திக் கொள்கிறோம். Mani has become unstoppable.
ஜீவா – கமலதேவி:
செய்தி போல் நிகழ்வுகளை அடங்கிய தொனியில் சொல்லிக் கதையின் மொத்த கனத்தையும் வாசகர் தலையில் சுமத்துவதை கமலதேவி, அடிக்கடி செய்திருக்கிறார், இந்தக் கதையிலும் செய்திருக்கிறார். பையனை விடுங்கள். பாப்பா நாள் முழுக்கத் தனியாக என்ன செய்வாள்? சில பெற்றோர் பிள்ளைகள் அனுபவிக்க சொத்து வைத்துவிட்டுப் போவது போல், சிலர் சுமப்பதற்கு கடனை வைத்துச் செல்கிறார்கள். கமலதேவியிடம் இருந்து மீண்டும் ஒரு நல்ல கதை.
வஸ்திராபகரணம் – ரா.செந்தில்குமார்:
Dementia நோயை மிகச்சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் செந்தில்குமார். முதலில் வாசகக்கவனிப்பை ரம்யாவின் பக்கம் நகரவைத்துவிட்டு சட்டென்று Track மாறுதல் நல்ல யுத்தி. கடைசியில் ஒரு bomb வெடிக்கப் போவதை உணரவே முடியாத கதை சொல்லல். வஸ்திராபாகரணம் தலைப்பு வேறு பொருளில் கதையாகி இருக்கிறது. உண்மை எப்போது யார் மூலம் வெளிவரலாம் என்று காத்துக்கொண்டே இருக்கும், பல வருடங்கள் ஆனாலும் பொறுமையாக. செந்தில் குமாரின் மற்றுமொரு நல்ல கதை.
நாத்திகரின் பூஜை – பால்சாக்- தமிழில் ராஜேந்திரன்:
இந்த காலகட்டத்திற்கு ஏற்ற ஒரு சிறுகதை இது. இதை சிறுகதை என்பதை விட எப்போதும் கடைபிடிக்க வேண்டிய கருத்தியல் என்றும் சொல்லலாம். மதக்கலவரங்கள் அவரவர் நம்பிக்கை மட்டுமே உண்மை என்று நம்புவதால் வருகின்றது. கடவுள் நம்பிக்கை இல்லாதவனுக்கு அன்பே மதம். அதற்காக தன் நம்பிக்கைக்கு மாறான விசயங்களையும் செய்யலாம். இந்தக் கதையின் மொழிபெயர்ப்பு நன்றாக வந்திருக்கிறது.
இலையுதிர் காலம் – வில்லியம் ஃபாக்னர்- தமிழில் கார்குழலி:
அமெரிக்காவில் South என்றால் Racism நிறைந்த பகுதி என்று அர்த்தம். Flannery O’Connor போலவே ஃபாக்னர் Southern writer.
இந்தக்கதையில் பாதிக்கப்பட்ட கருப்பினத்தவன் திரும்பத்திரும்ப நான் ஒன்றும் செய்யவில்லை என்று சொன்னாலும் அதை யாரும் காது கொடுத்துக் கேட்பதில்லை. கறுப்பர்களைப் பொறுத்தவரை வெள்ளையருக்கு எல்லாமே முன்முடிவுகள். ஒரு வதந்திக்காக கொலை வரை துணியும் வெள்ளையர்களை சட்டம் தண்டிக்கப் போவதுமில்லை. கடைசியில் மின்னியைத் தான் பாதிக்கப்பட்டவள், பாவம் என்கிறார்கள். சிறப்பான யொழிபெயர்ப்பு.
போர் – லூயிஜி பிராண்டெல்லொ- தமிழில் கயல்:
தந்தை, கணவனை இழந்த பெண் தன் ஒரே மகனை செருமுகம் நோக்கிச் செல்க என்ற நம் கதைக்கு எதிரான கதையிது. நாட்டுப்பற்று, துன்பமோ இழப்போ எப்போதும் அது தனக்கே வலிமிகுந்தது என்ற கற்பிதம் கொள்ளும் மனிதஇயல்பும், இந்தக்கதையில் கையாளப்பட்டிருக்கும் விசயங்கள். Kayal has come a longway. Wonderful translation.