தமிழில் சரித்திர நாவல்கள் (Period Novels) எழுதுவது கல்கி, சாண்டில்யன் காலத்தில் எளிதாக இருந்தது. கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற பல வரலாற்றுப் புதினங்களில், கற்பனைகள் பெருமளவு இருந்தாலும் மையஇழை வரலாறாகவே இருந்தது. சாண்டில்யன் வரலாறு குறித்து அதிகம் கவலைப்படாது வரலாற்று நாவல்களை எழுதினார். இப்போது அவ்வாறு எழுதுவதற்கில்லை. எந்த வரலாற்றுத் தகவல்களையும் வாசகரும் சரிபார்க்க தகவல் தொழில்நுட்ப வசதி இருப்பதால், எழுத்தாளர்கள் தகவல்களைத் திரட்டுவதோடு அதைப் பலமுறை சரிபார்த்துக் கொள்ள நேர்கிறது. இருந்தும் உலகத்தரத்தில், உதாரணத்திற்கு
Edward Rutherfurd போன்றோர் போல வரலாற்று நாவல்களை எழுதுபவர் தமிழில் இதுவரை இல்லை. ஆங்கிலத்தில் வரலாற்று நாவல்களில் சிறந்த எழுத்தாளர்கள் ஐம்பது பேரையேனும் அடையாளம் காட்டலாம்.

நாவல் பாணர்கள் காலத்தில் இருந்தே தொடங்குகிறது. பாணர் காலத்தைக் குறித்த தகவல்கள் நம்மிடையே அதிகம் இல்லை. நாவல்களும் அதிகம் இல்லை. மனோஜ் குரூரின் நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற கே.வி.ஜெயஸ்ரீயின் மொழிபெயர்ப்பில் வந்த நூல் பாணர்கள் காலம் குறித்த நூல்களில் குறிப்பிடத்தக்கது. பல சங்கப்பாடல்களில் தகவல்கள் திரட்டி எழுதப்பட்ட நூல். கலைச்செல்வி இந்த காலகட்டத்தை எழுத மதுரைக் காஞ்சியை உபயோகித்திருக்கிறார். பாணர்கள் பாடிக் கொண்டே பல ஊர்கள் சென்று புரவலர்களால் ஆதரிக்கப்படுபவர்கள். சேந்தமலையைச் சுற்றி முதல்பாகம் நகர்கிறது.

கல்கியின் சிவகாமியின் சபதம் மகேந்திரவர்மன், நரசிம்மன், பரஞ்சோதி, இரண்டாம் புலிகேசி போன்ற வரலாற்று மாந்தரைச்சுற்றிப் பின்னப்பட்ட புனைவு. சிறுவயதில் நாவல் படித்து உருவாக்கிய புலிகேசி பற்றிய பிம்பம் பின்னர் சாளுக்கியர்கள் குறித்துப் படித்தபோது அவர்கள் கட்டிடக்கலையை நேரில் பார்த்தபோது தகர்ந்தது. நாவலின் இரண்டாம் பாகம் மாமல்லபுரத்தை மையமாக வைத்து நகர்கிறது.

கல்கியின் பொன்னியின் செல்வன், சுந்தரசோழன், அவர் மகன்கள் ஆதித்த கரிகாலன், அருண்மொழிவர்மன் காலகட்டகதை. இந்த நாவலின் மூன்றாம் பாகம், அதற்கு சற்று முந்தைய முதலாம் பராந்தக சோழன் கதை. தன்னுடைய முதல்மகன் மாவீரன் இராசாதித்தனை தக்கோலப்போரில் பலிகொடுத்த பின்வரும் கதை. இவனுக்குப் பின்னரும் சோழ சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்கப் பல மாவீரர்கள் தோன்றப் போகிறார்கள்.

நாவலின் நான்காம் பாகம் பத்தாம் நூற்றாண்டில் இருந்து ஒரு Quantum jump செய்து காந்தி காலத்திற்கு வந்துவிடுகிறது. கலைச்செல்விக்கு மிகவும் பரிட்சயமான, அவர் ஏராளமாக ஆய்வுசெய்த, அவரது மனதுக்கு மிக நெருங்கியவரான காந்தி காலம் என்பதை இந்த பாகத்தை வாசிக்கையில் தெரிகிறது. ஆதர்ஸபிம்பம் என்பதற்காக வாதவிவாதங்களை நாவலில் கலைச்செல்வி நிறுத்தவில்லை. பகத்சிங், ராஜ்குரு, சுத்தேவ் மரணதண்டனை குறித்த விவாதங்கள், காந்தி பயணம் செய்யும் சில இடங்களில் அவருக்கு எதிரான கோஷங்களைப் பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார். காந்தி இந்துக்களுக்கு எதிரி என்ற கருத்து அப்போது பரவலாக வடநாட்டுமக்கள் மத்தியில் இருந்தது.

ஐந்தாவது பாகம் நடப்புகாலத்திற்கு வந்து விடுகிறது. காசி, கங்கையைப் பற்றி கலைச்செல்வி சில சிறுகதைகள் பற்றி எழுதியிருந்தாலும், (கங்கை என்ற தலைப்பிலேயே இவரது சிறுகதை ஒன்று உள்ளது) இந்த நாவலில் காசி, கங்கை குறித்த முழுச்சித்திரம் அவர் எழுத்தில் வெளிப்படுகிறது.

மரணம் இந்த ஐந்து பாகங்களையும் இணைக்கும் மையப்புள்ளி. குறுநில மன்னர்களாய் இருந்த போது, எல்லையை விரிவாக்கப் போர்கள், அரசுரிமைக்காக சகோதரர்க்குள் போர்கள், பழிவாங்குவதற்காகப் போர்கள், அதன் பின்னர் சைவம், சமணம், வைணவம் என்று மதத்தின் பெயரால் போர்கள். கழுவேற்றங்கள், மரணங்கள். பின்னர் சுதந்திரத்திற்கான போர், மரணங்கள். பின் முடிவேயில்லாத இந்து முஸ்லீம் போர்கள், எண்ணற்ற மரணங்கள். வாசுகிப் பாம்பு இரண்டாம் முறை கக்கிய ஆலகாலமே மதம்.
வாழ்நாள் வகையளவு அறிஞரும் இல்லை என்றது நற்றிணை. தத்துவார்த்தமாக ஏதோ ஒரு காலத்தில் கூறியது மதங்களால் உண்மை என நிரந்தரமாக உலகெங்கிலும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

கலைச்செல்வியின் முதல் நாவலான சக்கைக்கும் இதற்கும் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் இடைவெளி இருந்தாலும், இருபது வருடங்களைக் கடந்த முதிர்ச்சி மொழிநடையில் மற்றும் உள்ளடக்கத்தில் வந்திருக்கின்றது. நாவலின் பல இடங்களில் மொழி காவேரியின் பிரவாகம் போல் பெருகி ஓட்டமெடுக்கிறது. தனிமையும், தேடலும் மானிட இனத்தின் வரங்கள், பலநேரங்களில் சாபங்களும் அவையே. இந்த நாவலின் முக்கியமான Themeகள் அவை இரண்டுமே. கலைச்செல்வி அதற்குக் கலைவடிவம் கொடுத்திருக்கிறார். இன்னொரு வகையில் கலைச்செல்வி இந்த நாவலின் மூலம் தமிழின் ஆணெழுத்து பெண்ணெழுத்து என்ற கோட்டை அவசரமாக அழித்துவிடுகிறார். ஒரு ஆணாக, எனக்கு குழலி, மான்விழி மற்றும் கோத்ரியைச் சந்திக்க ஆவல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s