வைகைநகர் குடியிருப்பு உருவானதுமே குடியேறிவிட்ட மூத்தகுடி நாங்கள். பெட்டி பெட்டியாக வீடுகள், அளவில் சிறியவை, யாரேனும் உள்நுழைந்து வீட்டில் எங்கு நின்றாலும் அவர்களின் உடல்மணம் நாசியை நிறைக்குமளவு சிறியவை. அந்தரங்கம் என்ற வார்த்தை அப்போது அதிகம் புழக்கத்தில் இல்லாத காலம். குடியிருப்பில், வேலை என்று எடுத்துக் கொண்டால் இரயில்வேயில் வேலை பார்ப்பவர்கள், ஜாதி என்று எடுத்துக் கொண்டால் பிராமணர்கள் அதிகஅளவில் இருந்த காலனி அது.
நான்காம் வகுப்பு படிக்கையில் வீடு தேடி அம்புலிமாமா கேட்டு வந்த சித்ரா தான் எனது முதல் இலக்கிய நண்பர். படித்துப்பின் திரும்பக் கொடுக்கும் போது கோகுலம் பத்திரிகையைக் கொடுத்தாள். கதைகள் குறித்து எங்கள் புரிதலுக்கேற்ப இலக்கிய விவாதம் நடந்ததாக நினைவு. அதிக நாட்கள் அது நடக்கவில்லை. அப்பாவிற்கு நாகர்கோவிலுக்கு மாற்றலாகி, மூன்று வருடங்கள் அங்கிருந்து திரும்பி வருகையில் சித்ரா வைகைநகரில் இல்லை.
மூன்று வருடங்கள் இடைவெளி என்பது சிறார் உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. முன்பு நெருங்கிப் பழகிய பலர் விலகலைக் கடைபிடிக்க ஆரம்பித்தது, இயல்பிலேயே யாரிடமும் வலியப்போய் சிநேகம் கொள்ளாத என்னுடைய அடிப்படைக் குணத்தினாலும் இருக்கலாம். ஆண்பிள்ளைகள் இடைவெளியைப் பொருட்படுத்தாது பழகியது போல் இல்லாது, பெண்பிள்ளைகள் அனுமார் கோவிலுக்கு
அருகிருந்த திடலில் மண்ணில் கோபுரம் கட்டி, இலைகளைப் பறித்து சமையல் செய்ததை மறந்ததாகக் காட்டிக் கொண்டார்கள். உன்னைத் தெரியும் ஆனால் தெரியாதது போல் நடப்பேன் என்பவர்களிடம் நாமென்ன பிச்சையா எடுக்க முடியும். ராஜி போல் புன்னகையால் வருடங்களை விழுங்கி நட்பைத் தொடர்ந்த சிறுமிகள் குறைவு. ராஜியும், பெற்றோர் இருவருக்கும் வசதி என்று சில வருடங்களில் ரயில்வே காலனிக்குப் போய்விட்டாள்.
கல்லூரி முடித்த உடன் வேலைகிடைக்கும் என்ற கனவுக்குமிழ் உடைந்தது. வைகைநகர் காலனியில் ஒவ்வொருவராக வேலைக்குச் செல்லச்செல்ல தன்னம்பிக்கை படியிறங்க ஆரம்பித்தது. வங்கித் தேர்வுகளுக்கு, எங்கு பயிற்சிமுகாம் நடத்தினாலும் துரத்திச் சென்றேன். அந்தப்பள்ளியில் முடித்து நண்பர்கள் சூழ வெளியில் வருகையில் என்னை நோக்கி கையசைத்த பெண், எவ்வளவு அழகியாக மாறியிருந்தாலும், அந்தப் புன்னகை மிகப் பரிட்சயமானது. ராஜி. பக்கத்தில் உட்கார்ந்து, உரிமையுடன் சிரித்துப்பேசும் பெண்ணை 2022ல் கூட சந்தேகமாகப் பார்ப்பார்கள். நண்பர்களின் புகைச்சல் முகத்தில் தெரிந்தது. சொல்லவேயில்லை என்றவனின் வார்த்தையில் பொறாமையின் சூடு. பெஸ்டி என்ற வார்த்தை யாருக்கும் அப்போது தெரியாது. தப்பா நினைக்காதீங்க, சின்னவயசு ப்ரெண்ட் என்று நான் சொல்லியிருந்திருக்க வேண்டும். ஆனால் “வேலையே கிடைக்காமல் எங்கே வெளியில் சொல்ல” என்றேன். அவர்கள் நிம்மதியாகத் தூங்கினார்களா தெரியாது, அன்றிரவு எனக்குத் தூக்கமே வரவில்லை.