ஆசிரியர் குறிப்பு:
திருப்பூர் மாவட்டம், முத்தூருக்கு அருகில் இருக்கும் சின்னமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது வெள்ளக்கோயிலில் வசிக்கிறார். அரசு நூலகத்தில் நூலகராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த இவருடைய முதல் நாவலிது.
“இந்தக்கதையை வாசிக்க முற்படும் யாரையும் கூட என் ஊருக்குள் கூட்டிப் போவேன்” என்ற இவரது முன்னுரை வரியின் கனபரிமாணத்தை, ஐந்து அத்தியாயங்களை முடிப்பதற்குள் கண்டு கொள்ளப்போகிறீர்கள். உண்மைக் கதைகளில் பிரகாசிக்கும் ஆன்மஒளியை எந்தக் கலைஞனாலும் கற்பனைக் கதைகளில் கொண்டு வருவதற்கு சாத்தியமில்லை.
மூன்றாம் வகுப்புப்படிக்கும் பெண் தன்னுடன் படிக்கும் மாணவியிடம் உன் அம்மா எங்க வீட்டில் தான் மிச்சச்சோறு வாங்குறாங்க என்று சொல்லும் வன்மம், குழந்தைகளுக்கு தொடாமல் சாப்பாட்டைப் போடு என்று படிப்பிப்பது, அண்டி வாழும் குடும்பத்தில் இருக்கும் பெண்ணைப் பாலியல் வல்லுறவு செய்து சாவுக்குக் காரணமானவனை, ஒன்றும் செய்யாமல் அந்தக்குடும்பத்தை ஊரைவிட்டே அனுப்புவது என்று சாதிக்கொடுமைகள் ஊரெங்குமிருக்கிறது. தாழ்ந்த ஜாதி என அடையாளம் காட்டப்பட்டவன், அவனுக்கு தாழ்ந்த ஜாதி என்று ஒன்றை அடையாளம் காட்டுகிறான். எல்லோரும் செய்வதை செய்துவிட்டு கடைசியில் ஒரே சமூகத்தைக் காரணமாக்கிக் குற்றஉணர்வைத் துடைத்தெறிந்தோம்.
மயிலாயா, சௌந்திரம், பாக்கியம், வனரோஜா, லச்சுமி, பிரகலாம்பாள் என்று எத்தனையோ பெண்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான கதைகள். சாலையை விட்டு சற்றிறங்கி முன்செல்லும் வண்டியை முந்திவிட்டுச் சாலைக்குத் திரும்பவந்து சேரும் கார்போல், ஈஸ்வரியின் கதை. பிறப்பொக்கும் நாவல் ஒருவரின் கதையோ அல்லது பெண்களின் கதையோ மட்டுமல்ல, ஒரு ஒட்டுமொத்த கிராமசமூகத்தின் கதை.
இருளில் புன்னகைக்கும் செல்லையன்,
வாவிக்கிணற்று வளைவு, கடா வேப்பமரம், வற்றாமல் சுரக்கும் படிக்கிணறு,
மணல்மேட்டு பனங்கருக்குகள், மாடு நோஞ்சிக்கல் என்று மைதிலியின் கிராமத்தில் நாமும் சுற்றுலா சென்று வந்த உணர்வு மேலெழுகிறது. இறுதியில் திருவிழா உற்சாகம் செல்லையனோடு சேர்ந்து நமக்கும் தொத்திக் கொள்கிறது.
கவுண்டர், பெரிய பண்ணாடிகளின் வீட்டுக்குள் நாவல் அதிகம் நுழையவில்லை. நாவிதர், சலவைத் தொழிலாளி, மரமேறுபவர், விவசாயி, பச்சை குத்தும் குறவர் என்று எளிய மக்களின் வாழ்க்கையில் புகுந்து வெளிவருகிறது. சிறுதெய்வங்களின் மேலிருக்கும் பயம், நம்பிக்கைகள், வழிபாடு முதலியன ஜாதி வித்தியாசம் பாராது ஒட்டு மொத்த கிராமத்தையும் ஒன்று சேர்க்கின்றது.
மைதிலி எனக்கு மறுக்கப்பட்ட ஊர் என்று முன்னுரையில் எழுதி இருக்கிறார். ஆனால் மண்ணின் மகளாக அந்த ஊரை நமக்கு இந்த நாவலின் மூலம் பரிச்சயமான ஊராக்கிவிட்டார். பிரியத்தையும், ஊர்ப்பாசத்தையும் சேர்த்து எழுதிய நாவலில் உயிர்ப்பு இருக்கின்றது. நாவலின் இடங்கள் மட்டுமல்ல, பல கதைகளும் உண்மையாக இருக்கக்கூடும். வாசகர்களின் ஆதரவு இந்த நாவலுக்குப் பெருவாரியாகக் கிடைத்துப் பல மைதிலிகள் உருவாக வேண்டும். A New Life is waiting for you in this novel.
பிரதிக்கு:
காலச்சுவடு 4652- 278525
முதல்பதிப்பு பிப்ரவரி 2022
விலை ரூ.275.