ஆசிரியர் குறிப்பு:
திருவாரூர் அருகேயுள்ள விளமல்-தண்டலையைச் சேர்ந்தவர். விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்க்கையை எழுதிவருபவர். நாளிதழ் ஒன்றில் துணையாசிரியராகத் திருப்பூரில் பணியாற்றும் இவரது ஆறு நூல்கள் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன. இது ஏழாவதாக வெளிவரும் குறுநாவல்களின் தொகுப்பு.
ஆறு குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு இது. முதல் கதை, கடலோடியின் வாழ்க்கையைப் பற்றியும், அநேகமாக மீதிக்கதைகள் விவசாயக்குடும்பங்களை மையமாக வைத்தும் எழுதப்பட்டு இருக்கின்றன. இரண்டு வாழ்க்கைகள் குறித்துமே பரிச்சயமில்லாமல், இத்தனை தகவல்களைக் கொண்டுவந்து கதை எழுதுவது யாருக்குமே இயலாத காரியம். முதல் கதை, வேளாங்கண்ணி கடற்கரையில் பார்த்த வாழ்க்கையை கண்முன் கொண்டு வருகிறது, அது போலவே கதிரடிப்பு கதை, ஒரு விவசாயியால் மட்டுமே எழுதக்கூடிய கதை.
குதிருக்குள் பாம்பு இருக்கிறதென்று சொல்லி, அதை இடிக்கச் சொல்லும் அம்மாவின் வன்மம், வசீகரப்பேச்சுக்கு மயங்கி செல்வி பாதிராத்திரியில் எழுந்து கொல்லைப்பக்கம் போவது, நாற்றுமுடியை வாங்கியவள் சொன்னதைச் செய்ய வேண்டும் என்ற ஐதீகம், அரசுப்பணி மாப்பிள்ளை வந்ததும் அத்தைமகனைக் கைகழுவுவது, கள்ளத்தனமாக உறவு வைத்திருப்பவர்களைக் கட்டுடா தாலியை என்று ஊர்கூடி திருமணம் செய்து வைப்பது என்று ஏராளமான சம்பவங்கள் எந்த வித அலங்கார வார்த்தைகளுமில்லாமல் நிதர்சனத்துடன் சொல்லப்பட்டிருக்கின்றன.
மேற்கூறியவையெல்லாம் இருந்தும் சிவகுமார் முத்தையா தவற விடுவது எங்கே?
சமகால எழுத்தாளரான சு.வேணுகோபால், விவசாயம் குறித்த செய்திகளுடன் அழுத்தமான கதைக்கருவைத் தேர்ந்து எடுப்பது போல் இவர் எடுக்காதது முக்கிய காரணம் என்று தோன்றுகிறது. முதல் கதையில் கார்மேகம் குறித்த சித்திரம், அவனது அப்பாவின் கொலை, பார்ப்பவர் எல்லோரும் அவர்களை அறியாமல் பழிவாங்கும் உணர்ச்சியைத் தூண்டுவது என்று அமர்த்தலாகப் போகும் கதை Flatஆக முடிகிறது. கதிரடிப்பு கதையில் செல்வி-கோபால் கதையையே மையப்படுத்தி இன்னும் அழுத்தமாகச் சொல்லலாம், ரெத்தினம் கதை Overlapஆகி எந்தவித Impactம் இல்லாது முடிகிறது. இது போன்ற குறைகளை சரி செய்து கொண்டால், இவரது கதைகள் பரவலாகப் பேசப்படும். அனுபவம் இல்லாது, இவர் போன்று தனிப்பட்ட துறை (விவசாயிகள் வாழ்வியல்) குறித்த ஏராளமான தகவல்கள் கைவசம் இல்லாது, கூகுளில் தகவல்கள் சேர்த்துக்கதை எழுதுபவரைப் பார்க்கையில் சிவகுமார் முத்தையா Advantageous positionல் இருக்கிறார்.
சிவகுமார் புதிதாக எழுத வந்தவர் அல்லர். இவருடைய பபூன் கதை சமீபத்தில் வந்த நல்ல கதைகளில் ஒன்று. இந்தத் தொகுப்பிலும், ஆற்றோர கிராமம் மற்றும் நீலநிற ஆக்காட்டி நல்ல கதைகள். ஆற்றோர கிராமம், கிராமத்தின் பிரச்சனையைச் சொல்லிக்கொண்டே சென்று ஒரு மீறல் உறவு ஒரு குடும்பத்தைப் புரட்டிப்போடுவதை விவரிக்கிறது. காமமும் சுயநலமும் சகோதரிகள். போலவே, நீலநிற ஆக்காட்டி கதை மட்டுமல்ல, சொல்லிய முறையிலும் இவரது மற்ற கதைகளில் இருந்து மாறுபட்டது. கதையில் Analogiesஐ உபயோகப்படுத்தி இருப்பதால் மட்டுமல்ல,
கதைக்கரு, தேடல், வழிமாறல் என்று பலவிசயங்கள் அடங்கிய கதை. என்வரையில் தொகுப்பின் சிறந்த கதையும் அதுவே. எது போன்ற கதைகளை எழுத வேண்டும் என்பதை சிவகுமார் தான் முடிவு செய்யவேண்டும்.
பிரதிக்கு:
யாவரும் பப்ளிஷர்ஸ் 90424 61472
முதல்பதிப்பு பிப்ரவரி 2022
விலை ரூ.280.