கிருஷ்ணமூர்த்தி சந்தர்:

மைசூரில் பிறந்தவர். முனைவர் பட்டம் பெற்றவர். மைசூர் பல்கலையின் ஆங்கிலத்துறையில் தலைவராகப் பணியாற்றியவர். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் இருபத்தைந்துக்கும் அதிகமான நூல்களை எழுதியவர்.

கே.நல்லதம்பி:

மைசூரைச் சேர்ந்தவர். கன்னடத்தில் இருந்து தமிழிலும், தமிழில் இருந்து கன்னடத்திலும் தொடர்ந்து மொழிபெயர்ப்பவர். தி.ஜா, சு.ரா உள்ளிட்ட பலரை தமிழில் இருந்து கன்னடத்திற்கும்,
விவேக் ஷாண்பாக், ஜயந்த் காய்கிணி, எஸ்.திவாகர், நேமிசந்திரா உள்ளிட்ட பலரை கன்னடத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பு செய்தவர்.

காஞ்சனசீதை என்ற தலைப்பே அர்த்தம் பொதிந்தது. நான் பழுத்திருந்த போது
பழங்கடிக்க வராமல் உளுத்து விட்டதும்
புழுப் பொறுக்க ஓடி வரும் மனம் கொத்தி
நீ என்று கல்யாண்ஜி நுட்பமாக எழுதிய கவிதை அபிதாவிற்கு மட்டுமல்ல இந்த நாவலுக்கும் அப்படியே பொருந்தும்.

சுஜாதாவின் வீடு சிறுகதையில் ஒரு கிறுக்கலைப் பார்க்க சித்ரா ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்வது அடுத்தவர் பார்வையில் ஒரு முட்டாள்தனம். ஆனால் அது ஒரு தேடல். இந்தக் கதையும் அது போல ஒரு தேடல் தான். வெங்கடசுப்பராயருக்கு அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, உள்ளிருந்து எதுவோ trigger ஆவது, முதியவயதில் செய்வதற்கு ஒன்றுமில்லாது நேரத்தைக் கொல்லும் பொழுதில் திடீரென்று முளைக்கும் Nostlgia. இந்தியப் பெற்றோரைப் பிள்ளைகள், இந்த வயதில் ஏன் அலைகிறீர்கள் என்று தரும் இலவச அறிவுரையில் இருந்து எல்லாமே கதையில் நிதர்சனமாக வருகிறது.

பால்யத்தில் பலகாலம் சேர்ந்திருந்த தோழி/தோழன் பலவருடங்கள் கழித்துப் பார்க்கையில், அவளது/அவனது உலகத்தில் தினம் பார்த்துச் சிரிக்கும் காய்கறிக்காரருக்கு இருக்கும் இடம் கூட நமக்கில்லை என்பதை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? வெங்கட சுப்பராயர் பெரிய வேலையில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். பல நிறுவனங்களுக்கு இன்னும் அவரது அறிவுரை தேவைப்படுகிறது. ஓடிய ஓட்டம் நின்று, மனைவி இறந்து, பெற்றமக்கள் தொலைதூரத்தில் அவர்களது வாழ்க்கையை வாழும் போது, ராயருக்குள் இருந்த சிறுவன் அறுபது ஆண்டுகள் கழித்து வெளி வருகிறான்.

பயண நூல் போல், சேத்ராடனம் போல் பெரும்பகுதி கழியும் நாவலுக்கு இரண்டு நோக்கங்கள். முதலாவது ஆசிரியரின் பெரும்பகுதி வாழ்க்கை கழிந்த நஞ்சன்கூடு, பிளிகிரிரங்கன மலை, சாம்ராஜ் நகர், பாதாளரங்கர் எல்லாவற்றிற்கும் உயிர் கொடுத்து வாசகர்களுக்கு நெருக்கமாவது. இரண்டாவது, ராயரின் உள்ளிருக்கும் சின்னப்பையன் மட்டும் அப்படியே இருக்கிறான், ஆனால் இடங்கள் மாறி விட்டன, தாவித்திரிந்த இடங்களில் தவழ்ந்து போக நேர்ந்த வயோதிகம், இவற்றை ராயருக்குப் புரிய வைப்பது.

காஞ்சனா சிறுமியாக நாவலில் நிறையவே பேசி இருக்கிறாள். வயதான காஞ்சனா நாவலில் கடைசிவரைத் தேட வைக்கிறாள். முடிவில் என்ன பேசுவாள்? பேசினால், சா.கந்தசாமியின் தொலைந்து போனவர்கள் சந்திப்பாக முடிந்திருக்குமா? காஞ்சனா ராயரை கடந்தகாலத்தில் எப்போதேனும் தேடி இருப்பாளா? புன்னகைத்து வழியனுப்புவாளா இல்லை கடைசிகாலமேனும் ஒன்றாக இருக்கலாம் என்று அடம் பிடிப்பாளா? எப்படியாயினும் இது ராயரின் கதை, ஒருவேளை கிருஷ்ணமூர்த்தி சந்தரின் கதையாகவும் இருக்கலாம்.

இடங்கள், பொருட்கள் என்று எல்லாவற்றையும் நிகழ்காலத்திற்கும், நினைவுகளுக்கும் ஒப்பிட்டுப் பார்ப்பது, எல்லா விலைகளையும் டாலராக மாற்றிப் பார்ப்பது என்பது போல் subtlety நிறைந்த நாவல் இது. வாசிப்பதற்கு மிக எளிமையானது போல் ஏமாற்றவல்லது.
அதன் நாடியை அப்படியே பிடித்து, தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார் நல்லதம்பி. தமிழ் வாசகர்கள் இவருக்கு நிறையவே கடன்பட்டிருக்கிறார்கள்.

பிரதிக்கு:

வாசகசாலை 9942633833
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ.120.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s