ஆனந்தவல்லி – லக்ஷ்மி பாலகிருஷ்ணன் :

லக்ஷ்மி சென்னையில் பிறந்து, தஞ்சாவூரைச் சேர்ந்த பாபநாசத்தில் வளர்ந்தவர். ஆட்டிசம் குழந்தைகள் வளர்ப்பிற்கான எழுதாப்பயணம் என்ற நூலை எழுதியிருக்கிறார். கல்லூரி காலம் முதலே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட இவரது முதல் நாவல் இது.

ஆய்வுகள் செய்து நூல்களை எழுதுவோர் தமிழில் அரிது. ராஜம் கிருஷ்ணன் போல் வெகுசிலரே நூலுக்காக ஆய்வை மேற்கொண்டவர்கள். இவருடைய இந்த நாவல் தஞ்சை அரண்மனையை மராட்டியர் வெள்ளையருக்குக் கட்டுப்பட்டு ஆண்ட காலத்தைச் சேர்ந்தது. அதற்கான ஆய்வை மேற்கொண்டு இந்த நாவலை எழுதியிருக்கிறார். தி.ஜாவின் தஞ்சை வேறு. தஞ்சை ப்ரகாஷ் தன்னுடைய கதைகளில் சரபோஜி காலத்துத் தஞ்சையைக் கொண்டு வந்திருக்கிறார். என்றாலும் முழுநீள நாவல் என்ற வகையில் இந்தக் கதைக்களம் தமிழுக்குப் புதிது.

ஆங்கிலேயர்கள் ஆண்டபோது, அவர்களுக்கு அடங்கியவர்களை பொம்மைராஜாக்களாக மானியத்தைக் கொடுத்து அமர்த்தினார்கள். The Last Mughal மற்றும் The Last Queen போன்ற நூல்கள், ஆங்கிலேயர்கள் அரசாட்சி செய்பவரிடம் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டார்கள் என்பதை விவரிக்கும். பொம்மை ராஜாக்கள், தங்கள் மூதாதையர் போலவே ஆடம்பரமாக, பெரிதான அந்தப்புரம், கேளிக்கைகள் என்று எதுவும் குறையாமல் வாழ்ந்தார்கள்.

ஐந்து வயதில் பெண்ணுக்குத் திருமண செய்து வைக்கிறார்கள். பெற்ற பெண்ணை அற்ப பணத்திற்காக தந்தையே விற்கிறார்.
கிழட்டு ராஜாவுடன் ஓரிரவைக் கழிக்க, ஒரு பெண்ணை வற்புறுத்தி அனுப்புகிறார்கள்.
ராஜா இறந்ததும் ராணி உடன்கட்டை ஏறுகிறாள். சதி மூன்று காரணங்களுக்காகக் கடைபிடிக்கப்பட்டது. முதலாவதாக கணவனுடன் சேர்ந்து சொர்க்கத்திற்கு செல்வதான நம்பிக்கை, இரண்டாவதாக, சதியைக் கடைபிடிக்காத ராணிகள் இழிவாக நடத்தப்படுவதும், அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு அந்தக் காரணத்தினால் மகுடம் சிலவேளைகளில் மறுக்கப்படுவதும், கடைசியாக போரில் தோற்று அரசன் இறந்தால், வென்றவர்களின் பாலியல் வல்லுறவுகளைத் தடுக்க.

நாவலுக்காக உழைக்க வேண்டும், ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டோர் எப்போதுமே சராசரிக்கு மேற்பட்ட நாவலையே எழுதியிருக்கிறார்கள்.
நாமும் அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு உணர்வை ஏற்படுத்திய நாவல் இது. ஒரு உண்மைச்சம்பவத்தை அறிந்து அதைப் புனைவாக்கும் எண்ணம் தோன்றிப்பின், புனைவுக்கான தரவுகளைச் சேகரித்திருக்கிறார். சதி என்னும் வழக்கம் எப்படி புனிதமாகக் கருதப்பட்டது என்பதை வாசகருக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் நாவலில் காட்சிஅமைப்புகள் அமைந்திருக்கின்றன.

எது இந்த நாவலை நல்ல நாவல்களில் ஒன்றாக ஆக்கியிருக்கிறது? என்னைப் பொறுத்தவரை முதலில் சொல்வது நாவலின் பின்புலத்திற்கான ஆய்வு. அதனை இன்னும் சிறப்பாக்கும் அடங்கிய தொனியில் ஆழமான விசயங்களைச் சொல்லும் செழுமையான மொழி. அநாவசியமான சம்பவங்கள், காட்சியமைப்புகள் எதுவுமேயில்லை இந்த நாவலில். அடுத்தது, அரண்மனை சேடிப்பெண்களின் வாழ்க்கை.
தெய்வப்பிறவியாகக் கருதப்படும் ராஜாவின் இன்னொரு முகம், விதியின் மேல் பழிபோட்டு நகர்த்தும் பெண்களின் வாழ்வு, எந்த அரசானாலும் எளியோருக்குத் துணைபோகாதது என்று பல நுட்பமான விசயங்கள் நாவலில் அதிவேகமாகக் கடக்கின்றன. மனைவியை மீறி நடக்கும் விசயங்களுக்கு அவள் பொறுப்பில்லை என்று பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியஆண் நினைப்பது அதிநுட்பம். முதல் இன்னிங்ஸிலேயே லக்ஷ்மி பாலகிருஷ்ணன் சதம் அடித்திருக்கிறார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s