அனுராதா நான்கு மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்புகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துள்ளார். அவற்றில் இடம் பெற்ற கவிஞரில் ஒருவர் புலிட்சர் விருதையும், மற்றொருவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் வென்றுள்ளனர். இது இவரது முதலாவது சிறுகதை மொழிபெயர்ப்பு நூல்.
பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பில் ஒருவர் மட்டுமே ஆண் எழுத்தாளர். ஆங்கிலத்தில் கதைகளை அதிகம் வாசிப்பதும், எழுதுவதும் பெண்கள் என்பதைப் புள்ளிவிவரங்கள் உறுதிசெய்கின்றன. ஜிம்பாவே, நைஜீரியா, இலங்கை, அயர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வந்த கதைகள். சமகாலத்தின் ஆங்கிலக் கதைகளை பிரதிநித்துவம் செய்யும் தொகுப்பாக இது அமையக்கூடும். ஆசிரியர்கள் குறித்தான தெளிவான அறிமுகக்குறிப்புகள், அந்தந்த ஆசிரியரின் அடுத்தடுத்த நூல்களை வாசிக்க உதவும்.
ஹேய்லேயின் கதைக்கும் Han Kangன் The Vegetarian நாவலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பின்னதில் தாவரமாவது போல இதில் கேக்காகிறாள். அரிமாவின் சிறுகதை ஒரு Paracosmஐ உருவாக்கி, அங்கே பெண்கள் தகப்பனின் உடைமையில் இருந்து, கணவனின் உடைமைக்கு மாற்றப்படும் வரை கற்கால வாழ்க்கை வாழ்வதாகச் சொல்கிறது.
ஃபில்யாவ்வின் Dementia அம்மா பற்றிய கதையை இவர் மொழிபெயர்ப்பில் படித்த உடனேயே அவரது சிறுகதைத் தொகுப்பை
வாங்கிவிட்டேன், வாசிக்க வேண்டும். நூறுமுறை படிக்கலாம் இந்தக்கதையை. ஒரு Dementia பிரச்சனை மட்டுமல்லாது மகளின் ஏக்கம், அம்மாக்களுக்கு மகன் மேல் இருக்கும் அலாதி பாசம் முதலிய பலவிசயங்கள் உள்ளடங்கியிருக்கின்றன.
தொகுப்பின் முக்கியமான அம்சம் Variety.
Exceptionally talented and popular Zadie Smithம் இருக்கிறார். காமன்வெல்த் போட்டியில் வென்றதன் மூலம் உலகிற்குத் தெரிய வந்த
அல்மெய்டாவும் இருக்கிறார். Smithன் சிறுகதை Stream of consciousness யுத்தியில் சொல்லப்பட்ட Pure hysterical realism, ஸெஸ்டனோவிச்சின் கதை, Plot என்பதே இல்லாமல் கதாபாத்திரங்களின் உணர்வை மட்டும் வெளிப்படுத்தும் யுத்தி. ஆப்பிரிக்க எழுத்தாளர்களின் எழுத்தில், நான் பெண் என்ற கழிவிரக்கப் போர்வையை அவர்களால் விலக்க முடியவில்லை. (இதனாலேயே Chimamanda Adichie தனியாகத் தெரிகிறார் ). அமெரிக்க எழுத்தாளரான ஃபில்யாவ்வின் கதை பெண்களின் Sex Life பற்றிப்பேசுகிறது. தொகுப்பின் ஒரே ஆண் எழுத்தாளரின் சிறுகதை multiple third person narrators மூலம் நகரும் கதை. தொகுப்பின் எல்லாக் கதைகளுமே யுத்தியால் மட்டுமல்ல, கதைக்களங்களால், கதை சொல்லலால் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படும் கதைகள்.
அனுராதாவிற்கு கதைகளின் தேர்வுக்காக முதல் பூங்கொத்து. தமிழின் நூறு சிறந்த சிறுகதை பட்டியல்களை எடுத்தீர்கள் என்றால், புதுமைப்பித்தன், ந.பி, கு.ப.ரா, தி.ஜா போன்றவர்களோடு அகிலன் வகையறாவில் யாராவது சிலர் இருப்பார்கள். ஆனால் இந்தத் தொகுப்பின் தேர்வில் எல்லாக் கதைகளுமே சராசரித் தரத்திற்கு மேலானவை. மொழிபெயர்ப்பும் எளிமையாக, தெளிவாக இருக்கிறது. மச்சாடோ கதை மொழிபெயர்ப்பைத் தனியாகக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இது போன்ற நிறைய தொகுப்புகள் தமிழுக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும்,
பிரதிக்கு:
சால்ட் & தன்னறம் 83934 09893
விற்பனை உரிமை தமிழ்வெளி 9094005600
முதல்பதிப்பு அக்டோபர் 2021
விலை ரூ.325.