ஆதவன் இருந்திருந்தால் இன்று எண்பது வயதை நிறைவு செய்திருப்பார். சதாபிஷேகம் செய்யும் வயது. அவர் இறந்தே
முப்பத்தைந்து வருடங்கள் ஆகி விட்டன. இன்றும் ஆதவன் என்ற பெயரை நாம் உச்சரித்ததும், எதிரிருப்பவரின் முகத்தில் தோன்றும் புன்னகை, குரலில் தெரியும் குழைவு, அவர் நூறு ஞானபீடம் பெற்றதற்கு சமம். ஆதவனைப் படிக்கவில்லை என்று சொல்பவர்களைப் பார்த்திருக்கிறேன் ஆனால் பிடிக்கவில்லை என்று ஒருவரும் சொல்லிக் கேட்டதில்லை. கல்லூரிகாலத்தில் ஆதவனை முதல் வாசிப்பு செய்து, உள்ளத்தில் எழுச்சியை அடக்கத் தெரியாமல், வருவோர் போவோரிடம் ஆதவனைப் படியுங்கள் என்று சொல்லி, அவர் எனது சொந்தக்காரராக இருப்பார் என்ற சந்தேகத்தோடு என்னைப் பார்த்தவர் ஏராளம்.

ஆதவனின் சிறுகதையுலகம் பரந்து விரிந்தது. இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே, சேவல் குரலே கூவாதே என்று தாம்பத்யத்தைப் புனிதமாக, பேரின்பமாக கட்டமைக்கப்பட்ட காலத்தில், கணவன் மனைவி படுக்கையில் இடத்தை அடைத்துக் கொள்கிறாள் என்று கோபப்படுகிறான் (நூறாவது இரவு). திருமணம் காதலின் ஆன்டிகிளைமாக்ஸ் (ஒரு புனிதமான காதல்), வீணை வாத்தியாரின் வெற்றியை எதிர்நோக்கும் ராமன் (வீணை, விரல், மனம்) திருமணத்தால் இருவரின் சுயம் அழிவது (கார்த்திக்) குழந்தை கதையில் அவர்களே பாத்திரமாவது(கறுப்புஅம்பா கதை), கணவனும் மனைவியும் அவரவருக்கு பிடித்தவர்களை Fantacize செய்துகொண்டு தூங்கப் போவது (சினிமா முடிந்த போது) என்று தாம்பத்யத்யத்தின் Supposed sacrednessஐத் தன் கதைகளில் வெகுவாகக் கேலி செய்திருக்கிறார்.

ஆண்-பெண் இடையே வரும் ஈகோவை அற்புதமாகக் கையாண்டவர் ஆதவன். அவருடைய டெல்லி வாழ்க்கை எழுபதுகளின் இந்தியாவின் பிறநகர் பகுதிகளில் இல்லாத பெண்களைப் பார்க்க வைத்திருக்கும். அவர்கள் விவாதம் செய்வார்கள், தங்களது முடிவைத் தாமே எடுப்பார்கள். (தாஜ்மஹாலில் ஒர் இரவு, சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல், இறந்தவன், புகைச்சல்கள்……) என்று பல கதைகளில் ஈகோ தான் இருவரிடையே சுவராக நிற்கும். அதிகமாகப் பெண்களின் சகவாசம் கிடைக்காத பருவத்தில், வார்த்தைகளால் கூரிய நகத்தைப் பதித்து கிழித்தெடுப்பது போல், இதயத்தில் ரத்தக்களறி ஏற்படுத்தும் ஆதவனின் பெண் கதாபாத்திரங்களைக் கண்டு பயந்திருக்கிறேன். நிஜவாழ்வில் அவர்களில் யாரையும் சந்திக்காமல் இருக்க வேண்டியிருந்திருக்கிறேன். நேரில் சந்திக்கும் அமைதியான பெண்கள் மீது அதிகமாக மையல் கொண்டிருந்திருக்கிறேன்.

மகாமாசானம் கதையே அந்தசிறுமியைச் சுற்றித்தான். ஆதவனின் கதைகளில் குழந்தைகள் திருத்தமாக வந்திருப்பார்கள்.
எளியவரிடம் பேரம் பேசி, டிப்ஸ் என்ற பெயரில் கௌரவத்தைக் காட்டும் போக்கு இன்றும் இருக்கிறது. சிறுவன் அதைக் கேள்வி கேட்பான் (கூலி), கலகலப்பான குழந்தை, அழுமூஞ்சிக் குழந்தை இரண்டும் ஒரே கதையில் (இல்லாதது) தாத்தாவை சுயபரிசோதனை செய்ய வைக்கும் அனு (ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்)புதிர்சொல்லப் பள்ளிக்கூடம் போகும் சீனு (பரிட்சை) மாமாவை நிரந்தரமாக இழந்ததாக நம்பும் மாலு (பட்டு மாமாவும் குட்டி மாலுவும்) என்பது போல் ஆதவனின் கதைகளில் வரும் குழந்தைகளும் Tricky children. கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி கதைகளின் குழந்தைகளின் சாயல்களில் இருந்து வேறுபட்டவர்கள். புதுமைப்பித்தன் குழந்தை அறியாமலேயே பெரிய தத்துவம் பேசுவதை தன் கதையில் சொன்னார். தி.ஜாவின் சிலிர்ப்பு கதையின் இரண்டு குழந்தைகள்…..
எல்லாவற்றிலிருந்தும் வேறுபட்டவர்கள் ஆதவன் கதைகளின் குழந்தைகள். அவர்கள் அதிபுத்திசாலித்தனமாகவோ, செயற்கையாகவோ நடந்து கொள்வதில்லை, ஆனால் தங்களது பேச்சால், செயலால் பெரியவர் உலகில் இருக்கும் பாசாங்குகளை வெளியே கொண்டு வருகிறார்கள்.

Incest இல்லாமல் Sibling loveம் இல்லாமல் இடைபட்ட ஒன்றில் அக்காவின் நெருக்கம் இன்பக்கிளர்ச்சி ஏற்படுத்துவது (இன்டர்வியு), என்பது போல் கத்தி முனையில் நடக்கும் கதைகளையும் எழுதி இருக்கிறார். ஆதவன் கதையின் Treatmentஆலும், வாசக கவனத்தை திசைதிருப்பும் கதைசொல்லலாலும் அது வெளிவந்த காலத்தில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ( ஆதவன் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் அவரை வாசித்தவர்கள் எண்ணிக்கையும் மிகக்குறைவாகவே இருந்திருக்கும்).

மிடில் கிளாஸின் அலைக்கழிப்பை, துயரங்களை, நிராசைகளை, கனவுக்குமிழிகளைக் குறித்து அதிகம் எழுதியவர் ஆதவன். எல்லா ஏமாற்றங்களுடன் இன்னொரு குழந்தையைப் பெறப்போகிறான் சேஷாத்ரி என்று சொல்கிறேன் நான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?(கனவுக்குமிழிகள்). எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தால் போல் புதுமைப்பித்தனின் துரோகம் சிறுகதை.
ஆதவனின் பல கதைகளில் வரும் மிடில் கிளாஸ் கதாபாத்திரங்கள், அறிவாளியாக, குமாஸ்தா வேலை பார்த்துக் கொண்டு, பணம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்ற பாவனையை முகத்திலும், கழிவிரக்கச்சுமையை நெஞ்சிலும் சுமப்பவர்கள்.

ஆதவனின் ஆண் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் தன்மீது வெளிச்சம் விழுவதை விரும்புவதில்லை. தன்னம்பிக்கை குறைவானவர்கள். வாழ்க்கை தனக்கு சதி செய்துவிட்டது என்று தீர்க்கமாக நம்புவார்கள். கனவு காண்பவர்கள். கனவில் அவர்களைப் போலல்லாது தைரியமானவனாக, பணக்காரனாக, உலகத்தின் போதாமைகளைப் பரிவுடன் எதிர்கொள்பவனாகத் தங்களை உருவாக்கிக் கொள்வார்கள் ( இன்டர்வியு)
தான் ஜெயித்ததாக நினைத்து ஏமாறும் அண்ணன் (மூன்றாமவன்) சிறுவர்களிடம் சண்டை போட்டு சதா பயப்படும் அப்பா (மாலை முழுதும் விளையாட்டு) என்று தைரியமில்லாத ஆண்களே ஆதவனின் கதைகளில் அதிகம்.

உரையாடல்கள் ஆதவனின் பெரிய பலம். ஆதவனின் கதாபாத்திரங்கள் உடனிருப்பவருடன் தொடர்ந்து பேசிக் கொண்டு இருப்பார்கள் அல்லது தனக்குத்தானே மனதிற்குள் பேசிக் கொண்டு இருப்பார்கள். முடிவு தெரியாத கேள்விகளுக்கு உரையாடல் மூலம் முடிவு கண்டுவிட்டதாக எண்ணிக் கதை முடியும். ( ஒரு தற்கொலை) காதலன் காதலி உரையாடலில் நடத்தும் கண்ணாமூச்சி ஆட்டம் (நிழல்கள்) character assassination செய்யும் கதை (ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்). ஆதவனின் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் தங்கள் இருப்பையும், ஸ்தானத்தையும் நிலைநிறுத்தப் போராடும் முயற்சிகள்.

எழுதுவதில் பிறர் மனைவியைக் காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு – எல்லாம் அதில் இருக்கின்றன என்றார் தி.ஜா. இன்றும் பாசாங்கால் நாம் மூடிக் கொள்கிறோம். அடுத்தவர் மனைவியை அணைப்பது (அப்பர் பர்த்), வீட்டிற்குப் போனதும் நண்பனின் மனைவியின் புன்னகை நினைவுக்கு வருவது ( இல்லாதது), கணவனைக் கடந்து மனைவிக்கு லிப்ட் கொடுப்பது (காலடி ஓசை)
தன் மனைவியுடன் நெருக்கமாகப் பழகும் பக்கத்து வீட்டுக்காரரை மறைந்திருந்து பார்ப்பது (இந்த மரம் சாட்சியாக…) என்பது போல் பிறன்மனை நோக்கா பேராண்மை என்ற மாயை ஆதவனின் கதாபாத்திரங்களிடமில்லை.

அநேகமான கதைகள் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டவை. அவற்றில் எத்தனை Varietyஐ ஆதவன் செய்திருக்கிறார் என்பது ஆச்சரியமான விசயமாக இருக்கிறது. சமூகப்படிநிலையில் உயரக் கொடுக்கும் விலை பணத்தின் மதிப்பில் இல்லை. (அப்பர் பர்த்) , மணமான அண்ணன் தம்பிக்கு இடையில் அந்தஸ்து குறுக்கே வருவது (தில்லி அண்ணா), மனைவிக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் என்ன என்பதைச் சொல்லாது Open ending ஆக விடுவது (இந்த மரம் சாட்சியாக நானும் இவர்களும்), புதுமைப்பித்தனின் துரோகம் கதை அவருடைய கதைகளைப் பற்றிய அலசல் மட்டுமல்ல, எழுத்தாளரின் மேல் வாசகன் கொள்ளும் possessivenessவை சொல்வது, sexual desire vs homosexuality பற்றி சொல்லும் விசில், மனைவி இல்லாத நேரம் அம்மாவைக் கட்டிக்கொண்டு குழந்தையாகும் ராஜாராமன் (முதலில் இரவு வரும்) முதியவர்கள் Reverse roleplay செய்வது (அந்தி) பெண்ணியத்தை உரக்கப் பேசும் ‘கத்தி’ சிறுகதை என்பது போல் எத்தனை வித்தியாசமான கதைக்களங்கள். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த இன்றும் கூட ஒன்றோ, இரண்டோ கதைகளைத் தலைப்பை மாற்றி எழுதுவர்கள் அவசியம் ஆதவனை வாசிக்க வேண்டும்.

Hypocrisy குறித்து தமிழில் அதிகம் எழுதியது ஆதவன் தான். அதனால் தான் அதிக பாசாங்குத்தனம் கொண்டமத்தியதர வர்க்கத்தைக் குறித்து அவர் அதிகம் எழுதி இருக்க வேண்டும். உள்ளாடைகளை உலர்த்த ஒதுக்குப்புறம் தேடுவது போல், மற்றவர்கள் இலைமறைவாக எழுதிய காலத்தில், பாசாங்குகளை வீதிக்குக் கொண்டு வந்து வருவோர் போவோர் எல்லாரையும் பார்க்க வைத்தவர் ஆதவன். எழுத்து வேறு எழுத்தாளன் வேறு என்பதில் ஆரம்பத்தில் இருந்தே நம்பிக்கை வந்து விட்டது. நானாக எடுத்தேறி எழுத்தாளர்களை. சந்திக்கும் பெருவிருப்புக் கொண்டதில்லை பெரும்பாலும். ஆனால் தி.ஜா, ஆதவனை சந்தித்திருக்கலாம் என்ற நப்பாசை எப்போதுமிருந்திருக்கிறது. ஆதவனை ஒருவேளை சந்தித்திருந்தால்,
என் இரகசியங்களை எல்லாம் அவர் கண்டுபிடித்துவிடக்கூடாதே என்ற பயமும் கூடவே இருந்திருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s