Jhumpa Lahiri நிலஞ்சனா என்று பெயரிடப்பட்ட, பெங்காலி வம்சாவளியைச் சேர்ந்த பெண். மூன்று வயதில்
அமெரிக்கா சென்றவர், தன்னை முழு அமெரிக்கனாகக் கருதிய இவர்
முப்பத்து நான்காவது வயதில் நடந்த திருமணத்திற்குப்பின் ரோமில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டார். இத்தாலி மொழியைக் கற்று அதிலேயே ஒரு நூல் எழுதியிருக்கிறார். இத்தாலியர்கள் இவரை தம் தேசத்தவர் என்று அமெரிக்கர்கள் போலவே கொண்டாடுகிறார்கள். இத்தாலியில் எழுதப்பட்ட நூலை இவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கையில் கூறியது தான் இந்தப் பதிவை எழுத வைக்கின்றது. ” இத்தாலிய மொழியில் யோசித்து எழுதியதை ஆங்கிலத்திற்கு மாற்றுகையில் சரியான வார்த்தைகள் கிடைக்காமல் கிட்டத்தட்ட அதே அர்த்தம் தரும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க நேர்ந்தது”.
மொழிபெயர்ப்பு என்பது ஏற்கனவே இருக்கும் Textஐ மொழிமாற்றம் செய்வது தானே, அதில் Creativity எங்கு இருக்கிறது, ஆங்கிலமும் தமிழும் அளவாகத் தெரிந்தால் கூடப்போதுமே என்று அபிப்பிராயப்படும் எழுத்தாளர்கள் முதல்பத்தியை மறுமுறை படிக்க வேண்டிக்கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மொழிபெயர்ப்பு என்பது, நெரிசல் நிறைந்த சாலைகளில் முன்னால் இருக்கும் வாகனத்தைத் தொடர்ந்து செல்வது. நமக்கு வழிதெரிந்து எந்தப் பதட்டமுமில்லாமல் , நமக்கு இசைந்த வேகத்தில் வாகனத்தை ஓட்டிக்கொண்டு, இடதுகையை பக்கத்தில் இருப்பவர் தொடைமேல் வைக்கும் சுதந்திரம் மொழிபெயர்ப்பில் கிடையாது.
இந்திய மொழிகளின் சிறந்த படைப்புகளை மொழிபெயர்ப்பு இல்லையென்றால் நாம் படித்திருக்க வாய்ப்பில்லை. ஆங்கிலத்திலோ,தமிழிலோ வந்த படைப்புகள் நம்நாட்டையும், சமுதாயத்தையும் நாமே நன்றாகப் புரிந்து கொள்ளும்படி வைத்தன. தர்பாரி ராகம், கினு கோனார் சந்து, அக்னி நதி, நீலகண்டப் பறவையைத்தேடி என்பது போன்ற Modern classics குறைந்தது ஐம்பதையேனும் மொழிபெயர்ப்பு இல்லையென்றால் நாம் வாசித்திருக்க முடியாது. அவை 100% Perfect ஆன மொழிபெயர்ப்புகளாக இல்லாது இருக்கலாம். ஆனால் அவற்றைப் படிக்கும் போது கிடைத்த உணர்வுகள், அவை கூட்டிப்போன இடங்கள் மொழிபெயர்ப்பின் வாயிலாகவே சாத்தியமானது.
இந்திய மொழிகள் ஒன்றுக்கொன்று நெருங்கியவை, ஆகவே மொழிபெயர்ப்பு என்பது ஒப்பீட்டளவில் சிரமம் குறைவு. இன்னொன்று, சிற்சில பழக்கவழக்கங்கள் மாறினாலும்,கிட்டத்தட்ட ஒரே கலாச்சாரம்.
ஆனால் குறிப்பாகச் சொன்னால், ஆங்கிலத்தில் வெளிவந்த, Robyn Davidsonன் Tracks, (தமிழில் பத்மஜாநாராயணன்) Dimitri Verhulstன் Problemski Hotel (தமிழில் லதா அருணாச்சலம்), J. M. Coetzeeன் Disgrace (தமிழில் ஷஹிதா) முதலியவை கலாச்சாரத்தால், வித்தியாசமான ஆங்கிலத்தால் அல்லது மொழியின் செறிவால் மொழிபெயர்ப்பதற்கு வெகு சிரமமானவை. தி.ஜாவை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது போல . ஆங்கிலத்தில் வாசிக்காதவர்களுக்கு தமிழில் கிடைத்த ஆயிரக்கணக்கான நூல்கள் வரப்பிரசாதம். வாசிக்கவே முடியாத மோசமான மொழிபெயர்ப்புகள் இல்லாமலில்லை ஆனால் அவை Negligible percentage.
ஸ்ரீராம் பிரஞ்சிலிருந்து கொண்டு வந்த அந்நியன் எண்பதுகளில் பேரதிர்வைக் கொண்டு வந்தது. பட்டியலிட பயமாக இருக்கிறது, முக்கியமான யாரையாவது விட்டுவிடுவோமென்று. எத்தனையோ மொழிபெயர்ப்பாளர்கள் பலவருடங்களாக எந்தவிதத்திலும் குறிப்பிடத்தக்க வருமானம் இன்றி இலக்கியத்தின் மீதுள்ள காதலால், தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். புக்கர் போன்ற பரிசுகளில் பரிசுத்தொகை சரிபாதி மொழிபெயர்ப்பாளருக்கு. இங்கே குழந்தைகளுடன் விளையாடும் நேரமோ, துணையைத் தவிர்த்த மணித்துளிகளோ புத்தகம் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது மற்றபடி சொல்லிக்கொள்ளும் படி எதுவுமில்லை என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். சில உறவுகளில் செய்யும் Taken for granted என்ற மனநிலையையே தமிழில் நாம் மொழிபெயர்ப்பாளர்களிடம் கடைபிடிப்பதாகத் தோன்றுகிறது.