சிறுமி – ஜமைக்கா கின்கெய்ட் – தமிழில் கார்குழலி:
அம்மா, மகளுக்கு அளிக்கும் அறிவுரைகளே மொத்தக் கதையும். இந்தியாவில் நடுத்தரவர்க்கக் குடும்பத்தில் எழுபதுகளில் இவற்றை அடிக்கடி கேட்டிருக்கலாம். எப்படி எல்லோரும் மதிக்கும் பெண்ணாக நடப்பது, வீட்டோ வேலைகள், ஆண்களிடமிருந்து விலகி இருத்தல் ஆகியன. சிறுமியின் கேள்வி தான் கடைசி வரி. எந்த நாட்டிலும் நடுத்தரவர்க்க பயம் போவதில்லை. நல்ல மொழிபெயர்ப்பு.
ஒளிர் – ஐ.கிருத்திகா:
நடுத்தர வயதை நெருங்குகையில் ஏற்படும்
அலைக்கழிப்பை சொல்லும் கதை. நான் இன்னும் காலாவதியாகிவிடவில்லை என்பதை ஆண்களை விட பெண்களே அதிகமாக நிரூபிக்க நினைப்பதற்கு இந்திய குடும்ப சூழ்நிலையும் காரணமாக இருக்கலாம். ஐம்பது வயதைக் கடந்த ஆண் கூட பதினைந்து வயது சிறுமியைப் பார்த்து வெறிப்பதைப் போல பெரும்பான்மையான பெண்களால் செய்ய முடிவதில்லை. சின்னதாய் ஒரு அங்கீகாரம், அவ்வளவே வேண்டியதாக இருக்கிறது. ஆண் வீட்டில் இல்லை என்று பெண்கள் பேசுவது நன்றாக வந்திருக்கிறது. மீண்டும் பெண்கள் உலகிற்குக் கூட்டிப்போகும் கிருத்திகாவின் கதை.
சங்கு மனிதர்கள் – மதுரா:
கோதாவரி குண்டு என்ற தி.ஜாவின் கதைக்கு எதிர்பக்கத்தில் இயங்கும் கதை இது. கஷ்டத்தில் இருப்பவனுக்கு இன்னொரு கஷ்டத்தில் இருப்பவனே Empathize செய்ய முடியும். வயிறுமுட்ட சாப்பிட்டு ஜீரணத்திற்கு நடப்பவனிடம் பசியின் கொடுமையைச் சொல்லி எப்படி புரியவைக்க முடியும். அடுத்தவீட்டு விசயங்களை குழந்தைகள் முன் பேசி அவர்கள் பொதுவில் சொல்லும் இடம் நன்றாக வந்திருக்கிறது.
தூரம் – விஜி முருகநாதன்:
பிள்ளைகள் பெற்றோரின் கடைசிக் கையிருப்பையும் பறித்துக் கொள்வது, சம்பளம் இல்லாத வேலைக்காரர்களாக, பிள்ளைகளுக்கு Baby sitter ஆக அமர்த்துவது எல்லா இடங்களிலும் நடப்பது. அது குறித்த கதை இது.
முண்டச்சி – சரஸ்வதி ராசேந்திரன்:
மூன்று தலைமுறை சோகம். முடிவில் சுபம்.
சேவல் காவடி- உமா மோகன்:
அகலக்கால் வைக்க வேண்டாம் சிலருக்கு அளந்த கால் வைத்தாலே பிரச்சனை வந்து விடுகிறது என்பதைச் சொல்லும் கதை.
கெட்ட குடி எத்தனை முயற்சி செய்தாலும் கெடும்.
குப்பை தொட்டி – வே.செவ்வந்தி:
பெண்கள் நன்றி சொன்னாலும் நம்மை விரும்புகிறார்கள் என்ற மனநிலையைச் சொல்லும் கதை.
படைப்புத் தகவு ஆரம்பித்த போது இருந்ததைப் போலவே வாசிப்பதற்கு சிக்கலாக இருப்பது எனக்கு மட்டும் தானா இல்லை எல்லோரும் சிரமத்தைக் கண்டுகொள்ளாது வாழக்க ற்றுக் கொண்டார்களா என்பது தெரியவில்லை.
சிறுகதைகள் எல்லாமே பெண்களின் படைப்புகள் என்பது தற்செயலாகக்கூட இருக்கலாம். ஆனால் இது தான் சிறுகதைகளின் தரம் என்றால் உண்மையில் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.