ஆசிரியர் குறிப்பு:
கோவையில் பிறந்தவர். ஊடகங்களில் பணியாற்றியவர். கவிஞர், கட்டுரையாளர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர். இந்த நூல் இவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தி.ஜா குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
தி.ஜாவை முழுமையாக வாசித்த எல்லோருக்குள்ளும் தனியாக ஒரு தி.ஜா இருக்கின்றார். அவர் படைப்புகள் மீதான என் நேசம் எந்தக்காதலுக்கும் குறைவானது அல்ல. தி.ஜாவை வாசிப்பது என்பது பதின்வயதில் அரைஇருளில் பாதிபயத்துடன் வாங்கிய அவசரமுத்தம். அது சுகானுபவம். பிரத்யேகமானது. அது இல்லாவிடில் ஆயுள் குறையப் போவதில்லை. ஆனால் அந்த ஈரத்தை நினைத்து அவ்வப்போது நாம் செய்யும் தன்வயப்புன்னகை உலகத்தை அழகாக்குகிறது.
தி.ஜாவின் கதைப்பெண்கள் தானே முடிவெடுப்பவர்கள். ஆணை வழிநடத்துபவர்கள். சமூகத்தால் கிழிக்கப்பட்ட கோடுகளைத் தாண்டியதற்காக மண்டியிட்டு, அழுது, மன்னிப்பு கேட்காதவர்கள். லா.ச.ரா போலவே தி.ஜாவும் சௌந்தர்ய உபாசகர். அதனால் அவரது கதைப்பெண்கள் எல்லோருமே அழகாக அமைந்து விட்டார்கள். அந்த அழகின் வெளித்தோற்றத்தைக் காண்பவர்கள் உள்ளிருக்கும் உறுதியான இதயத்தைக் காணத் தவறுகிறார்கள்.
அம்மா வந்தாள் நாவலின் முன்னுரை நூலில் முழுதாக வந்திருக்கிறது. இவர் பார்வையிலிருந்து நான் முற்றிலும் மாறுபடுகிறேன். அம்மா வந்தாள் அலங்காரத்தம்மாளின் கதை இல்லை. அப்புவின் கதை. இந்து மேல் சிறுவயதில் கொண்ட நேசம் குழந்தை கையிலிருந்த பொம்மையைப் பறிப்பது போல் பறிக்கப்படுகிறது. இந்து விதவை. இன்னொருவனுடன் குடும்பம் நடத்தியவள். இந்து காதலிக்க முடியாதவள், அவளே வலிய கட்டிக்கொள்ளும் போதும் ‘அம்மாவைக் கட்டிக்கிறாப்பல’ என்கிறான்.
அங்கிருந்து தான் கதையே ஆரம்பிக்கிறது. இந்துவின் உடல் களங்கப்பட்டது, அம்மா என்பது அதிபுனிதம் என்ற அப்புவின் கற்பிதங்கள் நொறுக்கப்படுகின்றன. கடைசியில் இந்துவை பூரண நேசத்துடன் ஏற்றுக்கொள்கிறான், அல்லது இந்து அப்புவைக் குழந்தையைப் போல் வாரிக்கொள்கிறாள். அலங்காரத்தம்மாள் உண்மையை ஒப்புக்கொள்கிறாளே தவிர அப்புவிடம் கூட விளக்கம் சொல்வதில்லை. அப்பு கேட்டிருந்திருக்கலாம் என்று எனக்குப் பலமுறை தோன்றியிருக்கிறது. அப்புவிடம் அவள் எதையும் மறைக்க மாட்டாள். அப்பு கேட்கவில்லை. தவிர்க்கிறான். அப்புவை நிரந்தரமாகப் பறிகொடுத்து விட்டோம் என்று தெரிகிறது, திரும்ப தண்டபாணி, சிவசு இத்யாதி உலகத்துக்குள் போவதில் விருப்பமில்லை அவளுக்கு. அம்மா வந்தாள் குறித்து நிறைய பேசுவதற்கு இருக்கிறது.
மோகமுள் முழுமையான நாவல். இரண்டு கைகளைச் சேர்த்து, தொன்னை போல் ஆக்கிக் கொண்டு, சேந்திய நீரைப் பத்திரமாகக் கொண்டு சேர்ப்பதாக நினைப்பதற்குள் பாதிக்கு மேல் கைகளின் இடைவெளியில் வழிந்திருக்கும். அது தான் மோகமுள் நாவலைக் குறித்து எழுதப்படுவது. கைகள் தான் மாறுகின்றன.
“என் வாசிப்புக்கு எட்டியவரை அவரது எழுத்தில் எங்கேயும், பாரதி பற்றிய சூசகங்களோ கவிதை மேற்கோள்களோ இல்லை” மோகமுள் முன்னுரையில் சுகுமாரன் எழுதியது. இரண்டாம் பாகத்தில், ரங்கண்ணா நட்சத்திரமாக இருப்பார் என்று கூறும் இடத்தில் “பட்டுக்கருநீலப்புடவை பதித்த நல்வைரம் நட்டநடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி” என்ற வரி வருகின்றது. இதே நாவலில் இன்னுமொரு இடத்தில் பாரதியின் வரிகள் வருவதாக நினைவு. வேகமாக வாசிப்பவர்கள் உள்வாங்கிக் கொள்வதில்லை என்று சொல்லும் அத்தனை தோழர்களுக்கும் இந்தப் பத்தியைச் சமர்ப்பணம் செய்கிறேன். இரண்டு, மூன்று வயது வரை பாபுவைத் தூக்கி வைத்துக் கொஞ்சியவள் யமுனா. அவனுக்கு இருபது வயதானாலும் ஒரு பெண்ணாக யமுனாவின் மனதில் அவன் குறித்த சித்திரத்தைக் கற்பனை செய்து பாருங்கள். வேண்டாம் பாபு என்பதன் முழுஅர்த்தம் புரியும். முதிர்கன்னியை விரும்புவதும் அடைவதும் மட்டுமா மோகமுள். இன்னொரு சரடை எடுக்கலாம்.
ஐம்பத்து நான்கு வயதுக்காரரின் இரண்டாம் மனைவி என்று அறிமுகமாவதில் இருந்து
இவ்வளவு சாம்பல்களுக்குக் கீழே தங்கம்மா எப்படி இருக்கிறாள் என்பது வரை தனியாகப் படித்துப் பாருங்கள். இது போல் இந்த நாவலில் எத்தனையோ சரடுகள். மோகமுள்ளுக்கான முழுமையான விமர்சனத்தை யாராலும் எழுதமுடியாது.
தி.ஜாவின் மொத்த சிறுகதைகள், அதன்பின் வந்த கச்சேரி என்ற தொகுப்பிற்கும் எழுதிய முன்னுரைகள், பதிப்புரைகள் சுவாரசியமானவை. தி.ஜாவின் சிறுகதைகள் படிக்கையில் அவற்றில் மனம் சாய்வதும் நாவல்கள் படிக்கையில் அதை நோக்கி மனம் போவதும் சீசா போல ஆடுபவை. பன்னிரண்டு கட்டுரைகள் கொண்ட தொகுப்பில் ஐந்து நாவல்களை சிறந்ததாகவும், சிறுகதைகள் குறித்து விளக்கமாகவும் எழுதியிருக்கிறார்.
என் வரையில் அமிர்தம் மட்டுமே தோல்வியடைந்த நாவல். நீண்ட தாம்பத்ய வாழ்வின் ஏற்ற இறக்கங்கள், அர்த்தமில்லாக் காதலில் வாழ்க்கையைத் தொலைத்தல், இருபது முப்பது வருடங்கள் பின்னர் செய்தது சரியா என்று அலமலந்து போதல், வாழ்க்கையின் நிலையாமை என்று ஒரு வெறுமை சூழ்ந்து கொள்ளுதல் இவையே செம்பருத்தி நாவல். தி. ஜாவின் நாவல்களில் பலவிதத்தில் நளபாகம் தனித்துவமானது. இந்தியத் தொன்மத்தில் இருபாதங்களும் மூழ்கிப்போகும்படி அழுந்தக் கால்பதித்த நாவல் இது. சமையல் கலை விஸ்தாரமாகப் பேசப்படுவது இந்த நாவலில். குழந்தையின்மையின் மனக்கிலேசங்கள் மட்டுமன்றி ஏதோ ஒரு வகையில் குழந்தைகளைச் சுற்றியே இந்த நாவல் முழுதும் வளைய வருகிறது. அன்பே ஆரமுதே தோல்வியடைந்த நாவல் இல்லை ஆனால் அதில் ஜனரஞ்சகத்தன்மை அதிகம்.
தி.ஜாவின் எல்லாப் படைப்புகளையும் அசை போட உதவும் நூல் இது. சுகுமாரன் தி.ஜாவின் முழுச்சிறுகதைத் தொகுப்புக்காக நிறைய உழைத்திருக்கிறார். தி.ஜாவின் தீவிர வாசகராக அவருடைய பல கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார். நாம் காதலிப்பவர் குறித்து அவர் இல்லாத நேரத்தில் யாரேனும் சிலாக்கியமாகப் பேசுவதைக் கேட்கும் அதே ஆனந்தம் இந்த நூலின் வழியாகப் பலருக்கும் கிடைக்கப்பெறட்டும்.
பிரதிக்கு:
காலச்சுவடு பதிப்பகம் 4652- 278525
முதல்பதிப்பு நவம்பர் 2021
விலை ரூ. 160.