ராஜேஷீம் மரியாவும் – சக்கரியா- தமிழில் சுகுமாரன்:
மார்ச் மாதத்தில் பாஷா போஷிணியில் வந்த கதை அதற்குள் மொழிபெயர்ப்பாகி வந்திருக்கிறது. கம்யூனிஸ்டுகளை பகடி செய்து எழுதப்பட்ட கதை. சிறுவயது முதல் பழகிய இரண்டு காதலர்களில், காதலி டில்லிக்கு மேற்படிப்புக்கு சென்று வந்து, போஸ்டர் ஒட்டுகிற, கோஷம் போடுகிற பழைய கம்யூனிஸ்டிலிருந்து மாறி புதிய கம்யூனிஸ்டுகள் ஆக வேண்டும் என்கிறாள். இரண்டு குடும்பத்தின் மதம் குறுக்கே வரவில்லை, வேறுபட்ட அரசியல் கட்சிகள் குறுக்கே வரவில்லை, சிந்தனை மாற்றம் குறுக்கே வருகிறது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கம்யூனிஸ்ட் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ராஜேஸ் யோசிப்பது Dark humour. மரியாவிற்கு எந்த Subjecrல் இனி விவாதம் செய்யக்கூடாது என்பது புரிந்துவிட்டது. நல்ல மொழிபெயர்ப்பு.
நீர்வழி – விஷால் ராஜா:
மிக இயல்பாகச் சொல்லப்பட்ட கதை. கடும் மழைநாள் ஒன்றில் எல்லாமே மந்தகதியாய் நகர்கிறது. கதையின் இறுதியில் படுவேகம் எடுத்து முடிகிறது. சிறுவனின் பார்வையில் பெரும்பாலும் நகரும் கதை சில இடங்களில் மட்டும் பெரியவர்களின் கோணத்தில் வருகிறது. சிறுவன் எதைப் பார்த்தான் எதைப் பார்க்கவில்லை என்பது யாருக்குமே தெரியாமல் போகிறது. ஆனால் இருட்டில் சிறுவன் திமுறுவது அவன் எதையோ பார்க்கக்கூடாததைப் பார்த்திருக்கிறான் என்பதற்கு சான்று. அமைதியாக ஒரு நாளை எந்தவித பூச்சுகளும் இல்லாத மொழியில்சொல்லிக் கொண்டுபோய் கதையின் கடைசியில் மொத்த கனத்தையும் கொண்டு போய் வைப்பது நல்ல யுத்தி. கடைசிவரி ஆங்கிலப்படங்களில் எதிர்பாராமல் வரும் திடுக்கிடச்செய்யும் காட்சி போல் வருகிறது. சிறப்பாகச் சொல்லப்பட்ட கதை. இவர் தொடர்ந்து எழுத வேண்டும்.