அன்னையாதல் – சுதா ஸ்ரீநிவாசன்:
மனம் திருந்திய மைந்தனுக்கு நடக்கும் உபச்சாரங்களைப் பார்த்து மூத்த மகன் எரிச்சலடைவான். கடைசியில் அன்பால் அண்ணன் தம்பி ஒன்று சேருவார்கள். பைபிள் காலத்திய கதை. அண்ணன் தம்பிக்குப் பதிலாக அக்கா தங்கை, அவர்கள் அண்ணன் தம்பியை மணப்பது, கடைசியில் மனம் திருந்துவது இந்தக்கதை.
பலகை அடித்த சாளரம் – அம்புரோஸ் பியர்ஸ் – தமிழில் ராகவேந்திரன்:
Horror story. ஒரு சின்னக்கதையை இவ்வளவு Disturbing ஆக எழுத முடியுமா! கதைத் தலைப்பின் பின் இருக்கும் கதையே இந்தக்கதை. துக்கம் இந்தக்கதையின் மையப்புள்ளி. துக்கத்தில் இருந்து குற்றஉணர்வு எதிலும் பிடித்தமில்லாத ஒரு வாழ்வை வாழ்ந்து முடிக்க வைக்கிறது. பியர்ஸ் நூறாண்டைக் கடந்து இன்றும் பெரிதாக மதிக்கப்படும் எழுத்தாளர். Beautiful story. இந்தக்கதையும், இன்னொரு கதையும் சேர்ந்து தான் அசோகமித்திரனின் பிரயாணம் சிறுகதை எழுதப்பட்டிருக்க வேண்டும்.
பூளான் கொண்டாடி – சுஷில் குமார்:
கிராமத்தின் புறணிப் பேச்சுகளால் நகரும் கதையின் கடைசியில் Black Magicஉடன் கதை முடிகிறது. வதந்திகள் எப்படி கை முளைத்து, கால் முளைத்து நடமாடுகின்றன என்பதைச் சொல்ல வரும் கதை, வதந்தியால் பாதிக்கப்பட்டவர் அவை எல்லாம் பொய்கள் என்று நிரூபிக்கும் கதை வேறு யாரேனும் எழுதியிருந்தால் சாதாரண கதையாகி இருக்கும். சுஷிலின் மொழிநடை மற்றும் கதையைக் மேற்கொண்டு செலுத்த அவர் உபயோகிக்கும் வார்த்தைகள் இதை நல்ல கதையாக்கி இருக்கின்றன. சுஷில் எந்தக் கதையையுமே சிறப்பாக எழுத முடியும் என்ற நம்பிக்கை வலுத்துக்கொண்டே இருக்கிறது.
பிணியின் அடர்வுகள் – ஹேமா:
சிங்கப்பூரில் Circuit Breaker அமலாக்கத்தில் இருந்த காலகட்டத்தின் கதை. வங்கியில் பதினான்கு மணிநேர வேலையில் இருந்த போது சனிக்கிழமை தரும் ஆனந்தமே தனி. ஞாயிறு விரைவில் கடப்பது மட்டுமன்றி எதிர்கொள்ள இருக்கும் நீண்ட வாரத்தின் நினைவுறுத்தல். கொரானா விளைவால் ஊரடங்கு காலம் ஒவ்வொருவரையும் ஒரு விதத்தில் பாதித்தது. வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள் மனரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டார்கள். ஒருநாள் விடுமுறைக்கு ஏங்கியவன் மாதக்கணக்கில் வீடடங்கி இருப்பதில் வரும் பாதிப்புகள் கதையில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு Borderline personality disorderக்குப் போய் விடுகிறான். நல்ல Presentation. ஹேமா கவனிக்க வேண்டியது புரியாமல் போய்விடக்கூடாது என்று வரிகளைச் சேர்ப்பது. உதாரணத்திற்கு ‘அச்சம் தருவதாக இருக்கிறது’ என்பதோடு கதை முடிந்து விடுகிறது. கடைசிவரி அமெச்சூராக மொத்தக் கதையின் Sharpnessஐக் குலைக்கும் படி வருவது போல் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
குளம்பொலி – பிரமிளா பிரதீபன்:
மார்பகம் இயல்பாக அமைந்து விட்டால் அது குறித்த சிந்தனையே இருக்கப் போவதில்லை. மார்பகம் சிறியதாக இருக்கிறதென்று Complex கொள்ளும் பெண்களும் ஏராளம். மார்பகமே அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டால் பெண்ணாக இருப்பதில் எதுவோ குறைகிறது என்ற உணர்வு மேலிடுகிறது. இதுவே ஒரு கன்னியாஸ்திரிக்கு நிகழுமானால்? எல்லோருமே அடிப்படையில் பெண் அல்லது ஆண், அதன்பிறகே எதுவாக நாம் ஆவது என்பதைத் தீர்மானிப்பது. அழகாக உணர்வுகளை வெளிப்படுத்தும் கதை. மற்றுமொரு நல்ல கதை பிரமிளாவிடமிருந்து.
நீலத்தாவணி – இரம்யா:
இது இவருடைய முதல் கதை. பெண் தன்னுடலை உற்றுப்பார்த்து, தன்னை ஆண் யாராவது பார்க்க வேண்டும் என்று நினைப்பது காலங்காலமாக நடந்து வருவது. அம்மாவும் அந்த வயதைக் கடந்து தானே வந்திருப்பாள். பாட்டிக்கும் பேத்திக்குமான உறவும் கதையில் அழகாக வந்திருக்கிறது.
இருவருமே சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.
தேர்ப்பாடை – வைரவன் :
ஆயுள் நீளமாக ஆகிப்போவது எல்லோருக்குமே கஷ்டமான விசயம் தான். வேண்டாத பூசணி என்றால் கூடுதல் சிரமம்.
சாதாரண கதைக்கருவில், ஆச்சி பழைய நினைவுகளை கற்பனை கலந்து சொல்வது, ஆச்சிக்கும் பேரனுக்கும் நடைபெறும் உரையாடல்கள், இறுதி ஊர்வலத்திற்கு எதிர்பார்ப்புகள், சொந்தத்தில் எடுக்கும் பெண்ணிற்கும் மற்ற பெண்களுக்கும் உள்ள வித்தியாசம் என்பது போல் ஏராளமான விசயங்களைப் புகுத்தி அமர்க்களப்படுத்தி இருக்கிறார் வைரவன். இவரது பட்டர்-பி நல்லதொரு சிறுகதைத் தொகுப்பு.
கறை – லோகேஷ் ரகுராமன்:
வீடியோ பார்த்து எழுதப்பட்ட கதை. இருபதாயிரம் பெண்களுக்கு மேல் தேர்வுக்கு வரவில்லை. இருபதாயிரம் பேர் வீட்டிலும் பரிட்சையை விட ஹிஜாப் முக்கியம் என்று சொன்னார்களா? இந்துக்களும் முஸ்லீம்களும் முஸ்லீம் பெண்கள் படிக்கக்கூடாது என்ற விசயத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஜாதி, மதம் இல்லாத சமூகம் மட்டுமே எல்லாவற்றிற்கும்
தீர்வு.
ஜெரேனியம்- ஃப்ளான்னெரி ஓ கார்னர்- தமிழில் இல.சுபத்ரா:
Flannery O Connor South mentalityயுடனான கதைகளை எழுதியவர். 1870ல் கருப்பர்களுக்கு சமஉரிமை அளிக்கும் சட்டம் இயற்றப்பட்ட போதும் பலவருடங்களுக்கு வெள்ளையரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படி ஒரு வெள்ளையின முதியவரின் Racism பார்வையோடு, மகள் வீட்டில் கழிக்க நேர்ந்த இயலாமையும் சேர்ந்து கொள்வது கதையில் நன்றாக வந்துள்ளது. Connorன் சிறந்த கதைகளில் ஒன்று. சுபத்ராவின் திருத்தமான தமிழ் மொழிபெயர்ப்பு.